பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

மகான்கள் உடல் பற்றிய நினைவேயின்றி தியானத்திலேயே இருப்பார்கள். எந்தத் துர்தேவதைகளின் சக்தியும் அவர்களிடத்தில் செல்லாது. 
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* மகான்கள் உடல் பற்றிய நினைவேயின்றி தியானத்திலேயே இருப்பார்கள். எந்தத் துர்தேவதைகளின் சக்தியும் அவர்களிடத்தில் செல்லாது. 

* தன் உடலைப் பாதுகாத்துக்கொள்வதற்கு எவ்வளவு பொருள் தேவைப்படுகிறதோ, அவ்வளவு பொருளைத்தான் தன்னுடையதாக ஒருவன் கருத வேண்டும். அதற்கு மேல் தன்னுடைய பொருளாகக் கருதுபவன் தண்டனைக்கு உரிய திருடனாவான்.
-  பாகவதம்

* இயற்கை உண்மையை அறிந்துகொள்வதற்கு 1. கேள்விஞானம், 2. சிந்தனை ஞானம், 3. அனுபவஞானம் ஆகிய மூன்று ஞானங்களையும் முழுமையாகப் பெற வேண்டும்.
- தியான யோகம் 

* உலகமும் ஏனைய ஜீவன்களும் அகண்டாகார பிரம்மத்தின் சிறு துளிகளே ஆகும். அவை மாயையின் தன்மையால் வேறு வேறாகத் தோன்றுகின்றன.  "பிரம்மமும் ஆன்மாக்களும் ஒன்றுதான்' என்பதை உணர்ந்தால் அஞ்ஞானம் விலகி, ஞானம் தோன்றும்.
 -அத்வைதம்

* குளத்தில் இரவில் தெரியும் நட்சத்திரங்களின் பிரதிபிம்பங்களை (தனது உணவாகிய) ஆம்பல் பூவின் முளை என்று நினைத்துத் திரும்பத் திரும்பக் கடித்து ஏமாந்த மூடத்தனமான அன்னப்பறவை, பகலிலே ஆம்பலை நட்சத்திரம் என்று நினைத்து அதைக் கடித்து சாப்பிடாமல் இருந்துவிடும். அது போலவே, வஞ்சகக்காரர்களால் ஏமாற்றப்பட்ட உலகம், நேர்மையானவர்களிடமும் ஏதோ அபாயம் இருக்கும் என்று பார்க்கிறது.

* பசுதானமோ, பூமிதானமோ, அன்னதானமோ எதுவும் அபயம் (துன்புற்றவனுக்குப் புகலிடம்) அளிப்பது போன்று முக்கியமானது அல்ல. உலகத்திலேயே எல்லாத் தானங்களிலும் அபய ப்ரதானமே மிகவும் பெரியது.
- பஞ்சதந்திரம்

* மக்களே கேளுங்கள்: பிறப்பு, இறப்பு என்னும் நோய்க்கு யாக்ஞவல்கியர் போன்ற முனிவர்கள் கூறிய மருந்து இதுதான்: அதாவது, நம்முள் அந்தர்யாமியாக இருக்கும் ஜோதிமயமான கண்ணனின் நாமங்களாகிய அமிருதத்தைப் பருகினால்   சாசுவதமான மோட்ச சுகம் கிடைக்கும். ஆகவே அதை அருந்துங்கள்.
-  ஸ்ரீ முகுந்தமாலா

* பணத்தைக் கொண்டு சுயநலத்துடன் அனுஷ்டிக்கப்படும் தர்மம் விரைவில் அழிந்துபோகும். பிறருக்காகச் செலவு செய்வதிலும், பிறருக்கு உதவும் பொருட்டும் செலவிடப்படும் பணமோ மோட்சத்தைத் தேடித் தரும்.
-  பத்ம புராணம்

* பிரம்மமாகிய பரமாத்மா பிரபஞ்சமாகத் தோன்ற முடியும். எனவே பிரபஞ்சமானது மாயை அல்ல. மோட்சத்திற்கும் பக்தியே உயர்ந்த சாதனமாகும். அருள் சிந்தனையும், ஆச்சாரிய நம்பிக்கையும் இருந்தால், மக்கள் கர்ம பந்தங்களிலிருந்தும் விடுபட்டு முக்தி பெறலாம்.    
-  விசிஷ்டாத்வைதம்

* எவர் மனம் எப்போதும் விருப்பு  வெறுப்பு முதலியவை இல்லாமல் சுத்தமாயிருக்கிறதோ அவர்கள் அழுக்காகவும், அழுக்கு உடைகளை அணிந்தவர்களாகவும் இருந்தாலும் சுத்தமானவர்கள்தான். இதற்கு மாறாக எவர் மனம் கலங்கியிருக்கிறதோ, அவர்கள் வெளியே சுத்தமானவர்களாகக் காணப்பட்டாலும் அசுத்தமானவர்கள்தான்.
 - நீதி த்விஷஷ்டிகா

* பிரம்மமாகிய பரமாத்மா வேறு, ஜீவாத்மாக்கள் வேறு. உலகம் மாயை அல்ல, உலகம் உண்மையானது. இந்திரன் முதலான தேவர்களும்கூட சாதாரணமான ஜீவாத்மாக்கள்தான். பரமாத்மாவின் அருளால் மட்டுமே ஜீவாத்மாக்கள், இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறுகின்றன.
- துவைத சித்தாந்தம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com