ஆயுள்பலம் அருளும் அரன்!

திருவாரூர் மாவட்டத்தில் எண்கண் முருகன் கோயிலிலிருந்து சுமார் 2 கி. மீ. தூரத்தில் உள்ளது ஆய்குடி கிராமம் (69 ஆய்குடி ஊராட்சி).
ஆயுள்பலம் அருளும் அரன்!

திருவாரூர் மாவட்டத்தில் எண்கண் முருகன் கோயிலிலிருந்து சுமார் 2 கி. மீ. தூரத்தில் உள்ளது ஆய்குடி கிராமம் (69 ஆய்குடி ஊராட்சி). இவ்வூரில் அமைந்துள்ளது மிகப் பழமையான அருள்மிகு அபிராமி உடனுறை கைலாசநாதர் சிவன் கோயில். 

ஒருசமயம், "ஆய்' என்ற பெயருடைய அந்தணர் இவ்வூரில் வசித்துவந்தார். தினந்தோறும் அபிஷேகத்திற்கு பசும்பால் அளித்துவரும் கைங்கர்யத்தை செய்துவந்தார்.  ஒரு நாள் பசுக்களை மேய்த்துக்கொண்டு அமர்ந்திருந்த அவர், சற்று கண் அயர்ந்திருக்கையில் நல்ல பாம்பு தீண்டிவிட்டது.  அவ்வமயம், மதிய உணவு கொண்டுவந்த மனைவியிடம் தகவலைக் கூறிவிட்டு மயக்க மடைந்துவிட்டார். அவரை அப்படியே தூக்கிக்கொண்டு சுவாமி சந்நிதியில் கிடத்திவிட்டு அம்பிகையிடம் தன் கணவரின் உயிர் பிழைக்கவும் தனது திருமாங்கல்ய பலம் தழைக்கவும் கதறி வேண்டினாள்.  அம்பிகை சிவனிடம் முறையிட, சிவனார் தீண்டிய பாம்பை திரும்ப அழைத்து திரும்பவும் அந்தணரை தீண்டச்செய்து உயிர்ப்பித்தாராம்.  "ஆய்' என்ற அந்தணர் வாழ்ந்ததாலேயே இவ்வூர் ஆய்க்குடி எனப்பட்டது என்பர். மேலும் அபிராமி அம்மன் குடிகொண்டு அருள்தரும் ஊர் என்பதால் ஆய்க்குடி எனப்பெயர் அமைந்ததாகவும் கூறுவர்.

ஆகம விதிகளின்படி ஒரு சிவாலயத்திற்குரிய அனைத்து சந்நிதிகளும் அமையப்பெற்று திருக்குளம், திருமஞ்சன தீர்த்தக் கிணறு போன்றவைகளுடன் அழகுற திகழ்கின்றது இவ்வாலயம். ஸ்ரீ அபிராமி அம்மன் கருவறையில் தென்திசை நோக்கி அபயவரத தாமரை மலர் அட்சமாலை தாங்கி நான்கு கைகளுடன் அருள்புரிகின்றாள். அரியும் சிவனும் ஒன்றுதான் என்பதற்கேற்ப இவ்வாலயத்தில் கன்னி மூலையில் அலர்மேல்மங்கைத் தாயாருடன் வெங்கடாஜலபதி சந்நிதி கொண்டுள்ளது சிறப்பு.

இவ்வாலய நிலங்களின் பெயர்கள் பரவை நாச்சியார் குளம் (பரவைக்குளம்), நம்பி ஆரூரன்குட்டை என்றழைக்கப்படுவதால் இவ்வூர் சரித்திரத் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அறிய முடிகிறது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன், ஆலய மஹாமண்டபத்தின் தென்புற சுவரினை செப்பனிட கீழே பள்ளம் தோண்டுகையில் கிடைக்கப்பெற்ற நர்த்தன சம்பந்தர், போக சக்தி அம்மன் ஐம்பொன்சிலைகள் (தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது). 15 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது என அறியப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆலய திருக்குளத்தில் நீராடி சந்நிதிகளில் திருவிளக்கு ஏற்றி அபிராமி அம்மன் கைலாசநாதரை தொடர்ந்து 21 நாள்களுக்கு 21 முறை வலம் வந்து வணங்கினால் ஆயுள் சம்பந்தமான தோஷங்கள் நீங்கி ஆயுட்பலம் பெருகும் என்பது அனுபவபூர்வமான உண்மை.  மேலும் சஷ்டி அப்தபூர்த்தி சாந்தி ஹோமம் செய்துகொள்வதற்கு பிரத்யேகமாக சொல்லப்பட்ட தலங்களுள் இதுவும் ஒன்று.  பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளினால் ஏற்படும் தொல்லைகளுக்கு நிவாரணம் வேண்டியும் விஷத் தன்மை நீங்கவும் இத்தல இறைவனை வேண்டுகின்றனர்.

தமிழக இந்துசமய அறநிலையத்துறை ஆளுகையின்கீழ் உள்ள இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடந்தேறி 20 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. 

முன்மண்டபங்களில் பிளவு ஏற்பட்டு மேற்கூரையில் மரங்கள் முளைத்துவந்ததால் உடனடியாக திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு புதியதாக மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணியும் மிகுந்த சிரமத்துடன் நடந்துவருகின்றது. வெகு விரைவில் குடமுழக்கு நடத்த வேண்டிய நிலையில் உள்ளது.  இந்த சிவாலயத் திருப்பணியில் சிவனடியார்கள் பங்கேற்று நலம் பெறலாம்.
தொடர்புக்கு :  94884 15137 / 04366-278014.
- எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com