சந்தான பாக்கியம் அருளும் கந்த சஷ்டி விரதம்!

செவ்வேள் குறவனாகிய  முருகன்,  கடலின் அடியில் தலைகீழாக மாமரமாக நின்ற சூரபத்மனுடன் ஆறு நாள் போர் செய்து,  அவனை  வென்றதாக வரலாறு.
சந்தான பாக்கியம் அருளும் கந்த சஷ்டி விரதம்!

செவ்வேள் குறவனாகிய  முருகன்,  கடலின் அடியில் தலைகீழாக மாமரமாக நின்ற சூரபத்மனுடன் ஆறு நாள் போர் செய்து,  அவனை  வென்றதாக வரலாறு. அந்த ஆறு நாள்களை கந்த சஷ்டித் திருவிழாவாகக்  கொண்டாடுகிறோம்.  இது குறித்து திரிகூடராசப்ப கவிராயர் தமது குற்றாலக் குறவஞ்சியில் பாடியுள்ளார்.

திருக்குற்றாலத்திற்கும் தென்காசிக்கும் இடையில் இருக்கிறது இலஞ்சி. அங்குள்ள குமரன் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில்,  முதல் ஐந்து நாள்கள் பிரம்மா, மகாவிஷ்ணு, சிவன், மகேஸ்வரன், சதாசிவன் என ஐந்து திருக்கோலத்தில் இலஞ்சி முருகன் எழுந்தருள்வார். ஆறாம் நாள் சஷ்டியன்று, முருகன் வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்து சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெறும்.

முருகனுக்குச் சிறப்பாக 16 திருஉருவங்களை குமார தந்திரம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் ஒன்று ஸ்கந்தன் அல்லது கந்தன்.  ஸ்கந்தன் என்பதற்கு வடமொழியில் பகைவர்களை வற்றச் செய்பவன்;  தமிழில்  ஒன்றாகச் சேர்க்கப்பட்டவன் என்றும்  பொருள்.

கந்தர் கலிவெண்பாவில், குமரகுருபரர் "அன்னவள் கண்டு அவ்வுருவம் ஆறினையும் தன்னிரண்டு கையாலெடுத்துக் கந்தனெனப் பேர் புனைந்து' என்று கந்தன் என்ற பெயர்க் காரணத்தைப் பாடியுள்ளார். திருத்தணிக் குன்றில் நிற்கும் கந்தா என்றும்; சங்கு சக்ராயுதத்தையுடைய திருமாலும், விரிஞ்சனும் ( பிரம்மா) அறிந்து கொள்ள முடியாத சூலாயுதத்தைக் கையில் வைத்துள்ள சிவபெருமானின் குமாரர், "வேலாயுதத்தை உடைய கந்த சுவாமி' என்றும் கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

கந்த புராணத்தில் கந்த விரதப் படலம் என்று ஒரு பகுதி உள்ளது. அதில் முருகப்பெருமானுக்குரிய முக்கிய விரதங்களான சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் என்ற மூன்று விரதங்களையும் அவற்றைக் கடைப்பிடித்துப் பயன் அடைந்தவர்கள் பற்றியும் வசிஷ்ட முனிவர் முசுகுந்தச் சக்ரவர்த்திக்கு கூறுகிறார். 

பகீரதன்  என்ற அரசன் சுக்ரவார விரதமிருந்து இழந்த  ஆட்சியை மீளப் பெற்றான். நாரதர் விநாயகப் பெருமான் அறிவுரைப்படி கார்த்திகை விரதமிருந்தார்.

தேவர்கள், முனிவர்கள் முதலியோர் சஷ்டி விரதம் இருந்து மேன்மை பெற்றுள்ளனர். வசிஷ்ட ரிஷி கூறியபடி முசுகுந்தச் சக்ரவர்த்தி, சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானின் அருளைப் பெற்றதாக கந்த புராணம் தெரிவிக்கிறது. 

மூன்று விரதங்களிலும் கந்த சஷ்டி விரதம் தலையானது.  தீபாவளியைத்  தொடர்ந்து வரும் பிரதமை திதியன்று விரதத்தைத் தொடங்கி, ஐந்து நாள்கள் நோற்ற பின், ஆறாவது  நாளான சஷ்டியன்று கோயில் சென்று, கந்தக் கடவுளை வணங்கி வரவேண்டும். ஆறு நாள்களும் திருப்புகழ், கந்தர் அலங்காரம்,  கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி,  கந்த புராணம், திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா முதலிய நூல்களை ஓதி வழிபடவேண்டும்.  

"சட்டியில்  இருந்தால் அகப்பையில் வரும்' என்ற முதுமொழியும்;  சஷ்டி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பதை மெய்ப்பிக்கிறது!  

திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழநி முதலிய   தலங்களில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள்,  ஆறு தினங்களும் கோயில் வளாகம் மற்றும் அருகில்  தங்கி,  கடுமையாக விரதமிருந்து,  ஆறாம்நாள் சஷ்டியன்று சூரசம்ஹாரம் முடிந்த பின் விரதத்தை நிறைவு செய்வதைக் காணமுடியும்.

திருச்செந்தூர் கடற்கரையில் செந்திலாண்டவர் சூரனுக்குப் பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியை  அலையெனக் கூடும் மக்கள் கண்டு களித்து விரதத்தை  நிறைவு செய்வதைக் காணலாம். 

சுவாமிமலை, திருத்தணிகை,  பழமுதிர்ச்சோலை மற்றும் உள்ள முருகன்  குடி கொண்டிருக்கும் அனைத்துத் தலங்களிலும்  கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.  20.10.2017 -இல் தொடங்கி 25.10.2017 அன்று கந்த சஷ்டியுடன் நிறைவடைகிறது.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ்  நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது  மறவா  தவர்க்கொரு தாழ்வில்லையே.
என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் பாடியது போல் நாமும்  எப்பொழுதும் கந்தக் கடவுளை வழிபட்டு சகல  வளங்களையும் பெறுவோம்.
- மருத்துவர் கைலாசம் சுப்ரமணியம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com