தங்கத்திருமேனியில் ஸ்ரீ அன்னபூரணி!

தீபாவளி பண்டிகையை ஒட்டி, மூன்று நாள்கள் மட்டும் தங்கத் திருமேனியில் முழுமையாக தரிசனம் தரும் ஒரே தெய்வம்  காசியில் அருள்புரியும் ஸ்ரீ அன்னபூரணி தேவி என்றால் மிகையல்ல. 
தங்கத்திருமேனியில் ஸ்ரீ அன்னபூரணி!

தீபாவளி பண்டிகையை ஒட்டி, மூன்று நாள்கள் மட்டும் தங்கத் திருமேனியில் முழுமையாக தரிசனம் தரும் ஒரே தெய்வம்  காசியில் அருள்புரியும் ஸ்ரீ அன்னபூரணி தேவி என்றால் மிகையல்ல. 

ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு தீபாவளியையொட்டி நரக சதுர்த்தியின் முதல் நாளான  தன திரயோதசி அன்று ரத்ன கிரீடமும்  நவரத்தின நகைகள் அலங்காரமும் செய்யப்பட்டிருக்கும். அன்று மாலை திரை விலக்கி பூஜை செய்தபின், மறுபடியும் திரை போடுவார்கள். மறுநாள் சதுர்த்தசி, அமாவாசை, பிரதமை ஆகிய மூன்று நாள்களும் தங்க விக்ரகமாக அன்னை காட்சி தருவாள். தீபாவளியையொட்டி வரும் மூன்று நாள்களுக்கு மட்டுமே அன்னையை தங்கத்திருமேனியில் தரிசிக்க முடியும். மற்ற நாள்களில் வெள்ளியினால் ஆன அன்னையின் திருமுகத்தை மட்டும் தரிசிக்க முடியும்.  தீபாவளி முடிந்ததும் தங்கத்தினால் ஆன அன்னபூரணி விக்ரகம் அரசாங்க வங்கியில்  பாதுகாப்பில் வைத்து விடுவது வழக்கம்.

மணிமகுடம் அணிந்து நவரத்தினங்களால் ஆன ஆபரணங்களால் அலங்காரங்களுடன் தங்கக்கிண்ணமும் தங்கக்கரண்டியும் ஏந்தி, அன்னை ஸ்ரீ அன்னபூரணி இறைவனுக்கு தங்கக்கரண்டியால் உணவு வழங்குகிறாள். அன்னையின் இருபுறமும் ஸ்ரீ தேவி- பூதேவி வீற்றிருக்க, பிச்சாண்டிக் கோலத்தில் இறைவன், அன்னையிடம் பிட்சை கேட்கும் அற்புதக் கோலத்தையும் தரிசிக்கலாம். சுமார் ஆறடி உயரத்தில் பிட்சாடனர் வெள்ளியால் ஆன விக்கிரகமாக திருவோடு ஏந்தி, ஸ்ரீ அன்னபூரணியிடம் பிட்சை கேட்கும்  பாவனையில் அலங்காரம் செய்திருப்பார்கள். 

நாகாபரணத்தை அணிந்து இடுப்பில் புலித்தோலுடன் ஒரு கையில் உடுக்கையும் மறுகையில் பிரம்ம கபாலமும் ஏந்தியிருக்கும் திருக்கோலத்தில் இறைவன் காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.

தீபாவளி அன்று, உலகிற்கு அன்னமளிக்கும் ஸ்ரீ அன்னபூரணியின் தங்கத்திருமேனி, லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வருவது கண்கொள்ளா காட்சி என்று போற்றப்படுகிறது. இதனைத் தரிசித்தாலே வாழ்நாள் முழுவதும் பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்து ஐதீகம்! லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ அன்னபூரணி ஊர்வலம் வரும்போது, தேரில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் லட்டுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். தேர், கோயிலை அடையும்போது, தேரில் ஒரு லட்டுகூட இருக்காது என்று சொல்லப்படுகிறது.

தீபாவளி அன்று ஸ்ரீ அன்னபூரணியைத் தரிசிக்கும் பக்தர்கள், அன்னையின் காலடியில் காணிக்கையாக ரூபாய் நோட்டுகளைச் சமர்ப்பித்து வழிபட்டு பிரசாதம் பெறுகிறார்கள். 

அன்று, அன்னை அருள்பாலிக்கும் முன்புறமுள்ள மண்டபத்தில் விதவிதமான பட்சணங்கள், பெரிய பெரிய பாத்திரங்களில் நிறைந்திருக்கும். "அன்னக்கூடம்' அமைக்கப்பட்டு வழிபாடுகள் முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.

ஸ்ரீ அன்னபூரணி சந்நிதியில் "தர்ம துவாரம்', "பிக்ஷத்துவாரம்' எனும் இரு துவாரங்கள் உள்ளன. இந்த பிக்ஷத்துவாரத்தின் வழியாக "பகவதி பிக்ஷôம் தேஹி' என்று மும்முறை கூறிக்கொண்டே கையேந்தி பிச்சை கேட்டால், அன்னை நமக்கு அருளாசி வழங்குவதுடன் வாழ்நாள் முழுவதும் பசித்த வேளைக்கு அன்னம் அருள்வாள் என்று கூறப்படுகிறது.

காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு தென்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூரணியை காசியில் வாழும் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து தரிசித்து பேறுபெறுகிறார்கள்.

புனித கங்கை நதியில் நீராடும் பக்தர்கள், காசிவிஸ்வநாதர், ஸ்ரீ விசாலாட்சி மற்றும் அங்கு அருள்புரியும் டுண்டி விநாயகர் ஆகிய தெய்வங்களை வழிபட்டு புனிதம் பெறுகிறார்கள்.

இறுதியாக, காசியின் காவல் தெய்வமான ஸ்ரீ பைரவரை வழிபட்டு,  அங்கு வழங்கும் காசி  கறுப்புக்கயிற்றினைக் கையில் கட்டிக்கொண்டு தங்கள் ஊருக்குச் செல்கிறார்கள்.

வசதி உள்ளவர்கள் காசிக்குச் சென்று ஸ்ரீ அன்னபூரணியைத் தரிசித்து பேறுகள் பெறலாம். இயலாதவர்கள் திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், காஞ்சிபுரம் மற்றும் சில கோயில்களில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அன்னபூரணி தேவியை தங்களுக்கு வசதிபட்ட நாள்களில் தரிசித்து பலன் பெறலாம். அதுவும் இயலாத நிலையில் தங்கள் பூஜை அறையில் ஸ்ரீ அன்னபூரணி திருஉருவத்தை எழுந்தருளச்செய்து ஆதிசங்கரர் பாடிய ஸ்ரீ அன்னபூர்ணா அஷ்டகத்தைச் சொல்லி வீட்டிலேயே ஸ்ரீ அன்னபூரணியை வழிபட்டாலே அனைத்து நலன்களையும் பெறலாம்.
- டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com