மகா ஸ்வாமிகள் போற்றிய பிறவி ஞானி - சிவன் சார்

காஞ்சி காமகோடி பீடம் கோவிந்த தீட்சிதர் வம்சத்தில் ஈச்சங்குடி மகாலட்சுமி அம்மாள் -பிரஹ்மஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் தம்பதியருக்கு இரு தலை சிறந்த ஞானியர்கள் மகவாகத் தோன்றினார்கள்.
மகா ஸ்வாமிகள் போற்றிய பிறவி ஞானி - சிவன் சார்

காஞ்சி காமகோடி பீடம் கோவிந்த தீட்சிதர் வம்சத்தில் ஈச்சங்குடி மகாலட்சுமி அம்மாள் -பிரஹ்மஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் தம்பதியருக்கு இரு தலை சிறந்த ஞானியர்கள் மகவாகத் தோன்றினார்கள். மூத்தவர் பற்றி உலகமே அறியும். ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்கிற காஞ்சி மகாஸ்வாமிகள்.

இளையவர், அவ்வளவாக அனைவராலும் அறியப்படாதவர். அவர் சிவன் சார் என்று பக்தர்களால் அறியப்படும் ஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள்.  இவரது 113 ஆவது  பிறந்த தினம் - 14.102017 அன்று வருகின்றது.

1994 ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் ஒரு நாள் வழக்கம் போல் நிஷ்டையில் இருந்த சிவன் சார், திடீரென்று  "ஒரு மஹா புருஷரை உலகம் இழக்கப் போகிறது. எல்லாம் ஆயிடுத்து' என்றாராம். சிறிது நேரத்தில் காஞ்சி மகாஸ்வாமிகள் சித்தியான செய்தி வெளியானது. தொடர்ந்து இரண்டு வருடத்தில் தம் 91 - ஆம் வயதில் சிவன் சாரும் பல வருடங்கள் குளியல் பார்த்திராத, உறக்கம் கொள்ளாத, அன்ன பானம் பெருமளவில் தவிர்த்தபோதும் துர்கந்தமோ வியர்வையோ அறியாத தம் உடலைத் துறந்தார்.       

மகாஸ்வாமிகளின் பூர்வாஷ்ரம  தம்பி என்பதாலோ என்னவோ இருவரின் கொள்கை, செயல்பாடுகள் பல ஒத்து இருந்தன. செல்வத்தை, சுகபோகத்தை இவரும் துச்சமாக மதித்தார். "எனக்கு எதுக்குக் காசு? என் தோள் மேல் இருக்கிற துண்டே எனக்கு பாரம்' என்றார்.இத்தனைக்கும் சிவன் சார் இல்லறத்தானாக தன் ஆன்மிகப் பாதையில் நுழைந்தவர். குடந்தை டவுன்பள்ளியில் 11ஆவது வரைக்கும் படித்து அய்யன் தெருவில் சித்திரப் பயிற்சியும் எடுத்தார். அபாரபுகைப்படம் எடுக்கும் திறன் இருந்ததால் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்து கொஞ்ச காலம்  நடத்திவந்தார். மகாஸ்வாமிகள் காவிரியில் குளித்து விட்டு காவிரிக் கரையில் 100 சிஷ்யர்கள் புடைசூழ நிற்கும் படம்; சிதம்பரம் கோயிலின்  நான்கு கோபுரங்களும் தெரியும்படி எடுக்கப்பட்ட கோயில் படம் போன்றவை இவர் எடுத்தவை.     

குறிப்பாக, மகாபெரியவரின் "தெய்வத்தின் குரல்' நூலைப் போல சிவன் சார் பக்தர்கள் நர்மதா பதிப்பகம் வெளியீடான "ஏணிப் படிகளில் மாந்தர்கள்' என்ற ஸ்ரீ சிவன் நூலைப் போற்றுகின்றனர். சாரும் "என்ஆத்மாவைக் கரைத்து அந்நூலை எழுதினேன்' என்று சொல்லியுள்ளார்.  கல்வி, வானவியல், தொல்பொருள், ஆன்மிகம், அரசியல், தர்ம சாஸ்திரம் என்று அப்புத்தகத்தில் அவர் சொல்லாத விஷயங்கள் இல்லை. ஆயினும் "நான் எங்கே அதை எழுதினேன்? வெறுமனே பேனா புடிச்சுண்டு இருந்தேன். சுவாமி சொன்னார்' என்று அடக்கமாக அதுபற்றிப் பின்னர் சொன்னார். ஓவியர் மணியம்செல்வன் அந்நூலுக்கு முகப்புப் படம் வரைந்தார். சார் சிறு திருத்தம் கொடுத்த பின் வெளிவந்த அவர் திருஉருவம் சென்னை மத்ய கைலாஷில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

தாம் ஏன் குளிப்பதில்லை, நீர் அருந்துவது இல்லை என்பது பற்றிச்சொல்ல வரும் சிவன் சார் "நான் எங்கே தண்ணியை விட்டேன். அது என்னை விட்டுடுத்து' என்றார்.  "இது மத்த உடம்பு போல இல்லை. தேயு. திருவருனையைப் போல நெருப்பின் அவதாரம்' என்பது அவர் கூற்று. அதை தம்மை வேடிக்கையாக பெட் செய்து கேட்ட ஒரு சிறுவன் முன்னால் நிரூபணமும் செய்தாராம். அரிசி கொட்டினால் வெந்து விடும் அளவுக்குச் சூடான வெந்நீரில் மிளகாய்ப் பொடி போட்டு தேய்த்துக் குளித்து சாதரணமாக வெளி  வந்தாராம்.    
இவரது 113வது பிறந்த தினம் 14-10-2017 அன்று வருகிறது
- ஸ்ரீதர் சாமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com