கந்தசஷ்டியின் மகிமை!

முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே கந்தசஷ்டிப் பெருவிழாவாகும்.
கந்தசஷ்டியின் மகிமை!

முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே கந்தசஷ்டிப் பெருவிழாவாகும். சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். எனவே, சஷ்டி விழா ஆறுநாள் விழாவாகும். கச்சியப்ப சிவாசாரியரின் கந்தபுராணமும் பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன.

தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபதுமன், அவன் தம்பிகளாகிய தாருகன், சிங்கமுகன் ஆகியவர்களோடு முருகப்பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறைமீட்டு, அவர்களுக்கு ஆட்சியுரிமை தந்து, தேவருலகை வாழ வைத்த வரலாற்ரை அடிப்படையாகக் கொண்டது கந்தசஷ்டிப் பெருவிழா. கந்த பெருமானுக்கும் சூரபதுமனுக்கும் போர் நடைபெற்ற இடம் திருச்செந்தூர்.

போருக்குப்பின்னர், முருகன், இந்திரன் மகளாகிய தெய்வயானையை மணம் செய்த இடம் திருப்பரங்குன்றம். இது ஏழாம் நாள் விழா. செந்தமிழ் நாட்டில் நடைபெற்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட செந்தமிழ்க்கடவுளின் தெய்வப் பெருவிழாவே கந்தசஷ்டிப் பெருவிழா!

ஆன்மாக்களுக்கு மூன்று வகையான அழுக்குகள் உண்டு. மூலமாகிய முதல் அழுக்கே ஆணவம்.  அதையொட்டி,  ஆன்மாக்களுக்கு உண்டாகிய இரண்டு அழுக்குகள் உண்டு. அவைகள், மாயை, கன்மம் எனப்பெறும். மாயையானது உலகப்பொருள்களில் கவர்ச்சியை உண்டாக்கி ஆன்மாக்களுக்கு மோகத்தை உண்டு பண்ணும். ஞானிகளைக் கூட மயங்க வைத்துவிடும். மயக்கத்தை உண்டாக்குதலும் ஆன்மமாக்களை உலகப் பொருள்களின் மேல் பற்று ஏற்படுத்துதலும் மாயை. சூரபதுமனின் ஒரு தம்பியாக நின்ற தாருகனே மாயை மயமாக நின்று செயல்படுபவன்.

அடுத்து, அழுக்கானது கன்மம். இதுவும் இரண்டு வகையானது. நல்வினை, தீவினை என சிங்கமுகன் கன்ம மயமாக நின்றவன். மூன்றாவது மூல அழுக்கே ஆணவம். இதுவும்  நான் என்றும்; எனது என்றும் செயல்படும். சூரபதுமன் ஆணவ மயமாக நின்றவன். மூன்று அழுக்குகளும் ஆறாகப் பிரிந்து செயல்பட்டன. ஆகையால் ஆறு நாள்களில் அவைகளை அழித்து ஆன்மாக்களுக்கு உண்மை ஞானம் கொடுத்தான் கந்தன் என்பதே கந்தசஷ்டிப் பெருவிழாவின் தத்துவம்!

இந்த மூன்று அழுக்குகளிலிருந்து நீங்கிய மனிதனின் ஆன்மா இறைவனடி சேர்ந்து இன்புற்றிருக்கும். உலகமும் உலகப் பொருள்களும் இறைவன் படைப்புகள் என்று உணர்ந்தால் மாயையிலிருந்து விடுபடலாம். தீவினைகள் எப்போதும் செய்யக்கூடாது. நல்வினைகளைச் செய்யும்போது அவைகள் நம் முயற்சியென்று கருதாமல் அவைகளை இறைவன் நம் மூலமாகச் செய்விக்கிறான் என்று உணர வேண்டும். அப்போது நல்வினைப்பயன் நம்மைச் சாராது. மறுபிறப்பும் ஏற்படாது. அற வாழ்க்கையை மேற்கொண்டு, எப்போதும் இறைவனைச் சிந்தித்து எல்லா நிகழ்வுகளும் அவனால் நிகழ்கின்றன என்று கருதினால் ஆணவத்திலிருந்து விடுபடலாம்.

இத்தத்துவத்தை நம் கையிலுள்ள ஐந்து விரல்கள் மூலம் அறியலாம். மேலும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் சின்முத்திரை இந்தத் தத்துவத்தைக் குறிக்கும்.இறைவனுக்குத் தேங்காய் படைப்பதும் இத் தத்துவத்தைக் குறிக்கும். 

கந்தபெருமான் சூரபதுமனை வென்று, அவனைத் தன் மயில் வாகனமாகவும் சேவற்கொடியாகவும் மாற்றினான். சிங்கமுகா சூரன் உமையம்மையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.
- செ.வே. சதாநந்தன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com