சனிப்பெயர்ச்சி பலன்கள் -2017: ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் சென்னை

இந்த ஜேவிளம்பி ஆண்டு தட்சிணாயன புண்ணிய காலத்தில் சரத் ருது, ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி (26-10-2017) வியாழக்கிழமை, சுக்லபட்ச (வளர்பிறை) சப்தமி, பூராடம் நட்சத்திரம், சுக நாம யோகம்,
சனிப்பெயர்ச்சி பலன்கள் -2017: ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் சென்னை

இந்த ஜேவிளம்பி ஆண்டு தட்சிணாயன புண்ணிய காலத்தில் சரத் ருது, ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி (26-10-2017) வியாழக்கிழமை, சுக்லபட்ச (வளர்பிறை) சப்தமி, பூராடம் நட்சத்திரம், சுக நாம யோகம், கரஜை கரணம் நேத்திரம் 1, ஜீவன் 1/2, சூரியபகவான் ஹோரையில் பிற்பகல் மணி 3.23 ஐ.எஸ்.டி. அளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இங்கு, 23.1.2020 வரை சஞ்சரித்துவிட்டு 24-01-2020 அன்று காலை மணி 9.55 ஐ.எஸ்.டி. மணி அளவில் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த காலகட்டத்தில் 11-10-2018 அன்று இரவு மாலை 07.20 ஐ.எஸ்.டி. மணி அளவில் குருபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மேலும் 5-11-2019 அன்று காலை மணி 5.20 ஐ.எஸ்.டி மணி அளவில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து  தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ராகு- கேது பகவான்கள் 23.3.2019 அன்று மாலை மணி 4.14 ஐ.எஸ்.டி. அளவில் கடக, மகர ராசிகளிலிருந்து மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் 11-10-2018 வரை ஒரு பகுதியாகவும் 23-01-2020 வரை மற்றொரு பகுதியாகவும் (குருபகவானின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டு) எழுதப்பட்டுள்ளது.

லக்னம் மற்றும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.  இதனால் அயல்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சிறப்புறும். ஐக்கிய நாடுகள் அரங்கில் நமது நாட்டின் குரல் எதிரொலிக்கும். அன்னியச் செலாவணி கையிருப்பு கணிசமான அளவுக்கு உயரும். ஏற்றுமதியில் நமது நாட்டுப் பொருள்களுக்கு மதிப்பு கூடும். வெளிநாடுகளுடன் நமது நாட்டின் உறவு மேன்மையாக இருக்கும். குருபகவானின் கனிந்த பார்வை லக்னத்தின்மீது படிவதால் நமது உள்நாட்டு வளர்ச்சியும் கூடத்தொடங்கும். மேலும் மக்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிவரும். நமது நாட்டு மக்களுக்கு வெளிநாடுகளில் வசிக்க எளிதாக குடியுரிமைக் கிடைக்கும். சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானத்தில் நீச்சம் பெறுகிறார். இந்த கன்னி ராசிக்கு அதிபதியான புதபகவான் துலாம் ராசியில் அமர்ந்திருப்பதால் பரிவர்த்தனை உண்டாயிருக்கிற படியால் சுக்கிரபகவான் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார்.இதனால் சுக்கிர புத பகவான்களின் காரகத்துவங்கள் அனைத்தும் வளர்ச்சியடைத் தொடங்கும். 

குறிப்பாக, நகைத்தொழில், வைரம், வெள்ளி, சிமெண்ட், பெயிண்ட், இரும்பு, கம்பி, பெட்ரோலியம் ஆயில், வாகன உதிரிபாகம், மருந்து, கவரிங் சம்பந்தப்பட்ட துறைகள் வளர்ச்சியடையும். புதபகவானின் காரகத்துவங்களான தகவல் தொடர்பு, நவீன விஞ்ஞானம், சட்ட ஆலோசனை, நடுவர், நீதிமன்றம், குறிப்பாக வெளிநாட்டுச் சட்டக் கம்பெனிகள் இந்தியாவில் காலூன்றுதல் போன்றவை நடக்க வாய்ப்புண்டாகும். தன லாபாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சூரியபகவானுடன்இணைந்து (நவாம்சத்திலும் இருவரும் தனுசு ராசியில்  அமர்கிறார்கள்) இருப்பதால் தங்க இறக்குமதி குறைந்து அந்நியச் செலவானி வெளியேறுவது குறையும். மற்றபடி நமது நாடு வெளியிடும் தங்கப் பத்திரங்களுக்கு மக்களின் ஆதரவு கூடும். மேலும் ஆலயங்களுக்குச் சொந்தமான தங்கமும் அரசாங்கத்திற்குக் கிடைத்து அதன் உள்நாட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். நமது நாட்டின் பெருமை உயரத்தொடங்கும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கத் தொடங்கும். பணவீக்கம் உயரும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். பொருள்களின் விலை குறையும். நேர்முக மறைமுக வரிவருவாய் இதுவரை காணாத அளவிற்கு உயர்ந்து காணப்படும். 

செவ்வாய், சுக்கிரபகவான்களின் இணைவால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது.  யோகங்களில் முதல்தர யோகமாக தர்மகர்மாதிபதி யோகம் உள்ளது.  இதனால் நமது நாடு மற்றவர்களால் எட்ட முடியாத அளவுக்கு உயரும். உலகத்திற்கு ஆன்மிக போதனை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நமது நாட்டில் தூய்மையை கடைபிடிக்கும் குருமார்கள் மேன்மையடைவார்கள். சந்திரபகவான் லாப ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் சாரத்தில் இருப்பதால் நீராதாரம் பெருகும். நீர்வழி கால்வாய்கள் தூர்வாரப்படும். நல்ல மழை பொழிந்து நீர்த்தேக்கங்கள் நிறையும். உடல் வளமும் பெருகும். நட்பு ஸ்தானாதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்றிருக்கிறார். இவருடன் குருபகவான் இணைந்திருப்பதால் சிவராஜ யோகமும் புதபகவானுடன் இணைந்து இருப்பதால் புதஆதித்ய யோகமும் உண்டாகிறது. ஒரு கிரகத்திற்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டானால் நீச்சமான மற்ற அனைத்து கிரகங்களும்  முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தை அடைந்துவிடும் என்பது ஜோதிட விதி. பாக்கிய ஸ்தானம் வலுவாக உள்ளதால் நமது நாடு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டிவிடும் என்று உறுதியாகக் கூறலாம். ஆறாம் வீட்டில் ராகுபகவான் அமர்ந்திருப்பதால் அஷ்டமலட்சுமி யோகம் உண்டாகிறது. கும்ப லக்னத்திற்கு ராகுபகவான் முழுயோக காரகர் என்ற அந்தஸ்தில் இருப்பதால் நமது எதிரிகள் தானாகவே பயந்து ஓடிவிடுவார்கள். போர் என்று வந்துவிட்டால் நமது நாடு உறுதியாக சுலபமாக வெற்றி பெற்று விடும்.

இதுவரை, சனிபகவான் சஞ்சரித்து வந்த விருச்சிகராசி அவரின் பகை வீடாகும். இனி சஞ்சரிக்கப்போகும் தனுசு ராசிக்குரிய குருபகவான் சனிபகவானுக்கு சமம் என்கிற அந்தஸ்தில் இருப்பதால் இங்கு, அவர் மகிழ்ச்சியோடு சஞ்சரிப்பார். இதனால் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச் சனி, அர்தாஷ்டமச்சனி நடப்பவர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் மகர ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. தனுசு ராசிக்கு ஜென்ம சனியும் கன்னி ராசிக்கு  அர்த்தாஷ்டம சனியும் நடக்கும். துலா ராசிக்கு ஏழரை சனி முடிவடைகிறது. துலா ராசிக்கு மூன்றாம் வீட்டிலும் கடக ராசிக்கு ஆறாம் வீட்டிலும் கும்ப ராசிக்கு பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். அதாவது 3,6,11 ஆம் வீடுகளில் சனிபகவான் சஞ்சரித்தால் மிகவும் நன்மை உண்டாகும் என்பது ஜோதிட விதி. சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரித்து 12 ராசிகளையும் (அதாவது சூரியபகவானைச் சுற்றிவர) சராசரியாக 29 1/2 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இவர் மெதுவாக, சஞ்சரிப்பதால் சனைச்சரன் என்று பெயர் பெற்றார். பொதுவாக,  சனிபகவானின் சஞ்சாரத்தினால் சிறிது கஷ்டங்களும் சஞ்சலங்களும் குழப்பங்களும் மாற்றங்களும் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது. ஒருவரின் வாழ்க்கையில் இந்த ஏழரை சனி சஞ்சாரம் மூன்று முறை வர வாய்ப்புள்ளது. முதல் ஏழரை சனி சஞ்சாரத்தை அல்லது முதல் சுற்றை மரண சனி என்றும் கூறுவார்கள். ஏழரை சனியில் பொதுவாக, மரணம் ஏற்படுவது இல்லை என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

சனிபகவான் நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளுக்கு உரிய பலாபலன்களை நமக்கு அணா பைசா வித்தியாசம் இல்லாமல் பெற்றுத் தருகிறார். தங்கத்தை இரும்புச் சம்மட்டியால் அடித்து அடித்துத்தான் ஆபரணமாக ஆக்குவார்கள். அதுபோன்று நமக்கு கஷ்டங்கள் என்கிற அடியை கொடுத்து நம்மைத் திருத்தி சமுதாயத்திற்கு பயன்படும் ஆபரணம் போல் மாற்றுபவர் சனிபகவான் என்றால் மிகையாகாது. உளி தாங்கும் கற்கள் தானே பின்பு அழகான சிலைகளாக மாறுகின்றன! விதி என்பது மதிக்கு (அறிவுக்கு) புலப்படாதது. விதியானது மதியைக் கூடத் தன் வசமாக்கிக்கொண்டு இயங்கும் தன்மையுடையது. இத்தகைய விதிக்கு காரகராக சனிபகவான் அமைந்திருக்கிறார். ஒரு மரத்திற்கு வேர் எப்படி முக்கியமோ அதைப்போன்று மனித வாழ்வுக்கு விதி என்பது முக்கியமானது. ஒரு மரத்தின் வேரை மாற்றி வேறு மரமாக எப்படி மாற்ற  முடியாதோ! அப்படி ஒருவர் பிறந்த மூலாதார நவக்கிரக சக்தியை மாற்ற முடியாது. இது மருத்துவத்தில் டி.என்.ஏ. என்பதற்கொப்பானது. 

" நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு' என்பது வழக்கு. நம்பக் கூடியது எது, நம்பக் கூடாதது எது என்பதை நமக்கு சனிபகவானின் சஞ்சாரம் சரியாக உணர்ந்திவிடும். சத்தியத்தையும் தர்மத்தையும் கடைப்பிடித்து இவைகள் மீது நம்பிக்கை வைத்து நடந்து கொண்டால் சனிபகவானின் அருள் நமக்கு எப்பொழுதும் கிடைத்துவிடும். கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியும் கிடைக்கும். அதாவது, ஒரு மரக்கட்டையை இழுத்துச் செல்ல வேண்டியது விதியென்றும்; சத்தியத்தையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர்களுக்கு அந்த மரக்கட்டையை ஒரு நீர் பரப்பின் மீது போட்டு விட்டு இழுத்துச் சென்றால் எப்படி பாரம் தெரியாமல் இருக்குமோ அப்படி சனிபகவான் அருள்புரிவார் என்றால் மிகையாகாது. புறனாறுப் பாடலில் " பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தலும் இலமே' என்கிற வரி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. அதாவது தத்துவத்தின் சாறை நாம் பருக வாய்ப்பளிப்பார்.  நம் மனம் தத்துவ நெறி வழி செல்லும்படி ஆக்கிவிடுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com