நல்ல நிலம்!

பஞ்ச பூதங்களைப் படைத்த இறைவன் அவை ஒவ்வொன்றும் ஆக்கபூர்வமாக இயங்கும்போது, மனிதகுலத்திற்கு கோடானு கோடி நன்மைகளைப் பெற்றுத் தருமாறு படைத்துள்ளார்.
நல்ல நிலம்!

பஞ்ச பூதங்களைப் படைத்த இறைவன் அவை ஒவ்வொன்றும் ஆக்கபூர்வமாக இயங்கும்போது, மனிதகுலத்திற்கு கோடானு கோடி நன்மைகளைப் பெற்றுத் தருமாறு படைத்துள்ளார். மழைநீர் பூமிக்கடியில் சென்று நிலத்தை வளமாக்கி பயிர்கள் மட்டுமன்றி பல்லுயிர்களும் வாழ ஆதாரமாய்த் திகழ்கிறது. காற்று இல்லையேல் எந்தவொரு ஜீவராசியும் உயிர்வாழ்தலே இயலாது. நெருப்பு உணவைச் சுவையூட்ட மட்டுமன்றி தொழிற்சாலைகள் பலவும் இயங்குவதற்கும் வழிவகுக்கிறது. வானமோ மழையைப் பொழிவதோடு காலங்களை நிர்ணயிக்கும் கோள்களைத் தன்னகத்தே தாங்கி நிற்கிறது. நம்மைத் தாங்கி நிற்கும் நிலமோ பயிர்களை விளைவித்து வாழ்வை வளமாக்குகிறது.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளைப்போன்று நாம் பலன் தரவேண்டும் என்பதை இயேசு ஓர் உவமை மூலம் விளக்குகிறார். " விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது, சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன. அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப்போயின. மற்றும் சில விதைகள் முடிசெடிகளின் நடுவே விழுந்தன. முடிசெடிகள் அவற்றை நெருக்கிவிட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன‘‘ (லுக்கா 8:4-8)

விதை என்பது இறைவார்த்தையாகும். வழியோரம் விழுந்த விதைகள் அவ்வார்த்தைகளைக் கேட்போரில் சிலரைக் குறிக்கும். அவர்கள் கேட்டு பலன் பெறாதவாறு, சாத்தான் அவர்கள் உள்ளத்திலிருந்து அந்த விதையை அகற்றி விடுகிறது. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையை கேட்கும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆயினும் வாழ்வில் சோதனைகளை எதிர்கொள்ளும்போது நம்பிக்கையை விட்டு விடுவார்கள். முட்செடிகளுள் விழுந்த விதைகள், கவலை, துன்பம், செல்வம், புகழ் போன்றவற்றால் நெருக்கப்பட்டு இறைநம்பிக்கையை கைவிட்டு விடும் முதிர்ச்சியற்றோரைக் குறிக்கும்.  நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, கடைசிவரை பின்பற்றி மனஉறுதியுடன் செயல்படுபவர்களைக் குறிக்கும்.

அனைத்துப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலங்களில் விதைக்கப்பட்ட விதைபோல்அதிக அறிவோடு வளமாக வாழவேண்டும் என்றே விரும்புகின்றனர். அதற்காக பல தியாகங்கள் செய்து அவர்களைக் கல்வி, கலைகள், விளையாட்டு ஆகிய பல துறைகளில் தேர்ச்சி பெற தங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்கின்றனர். பள்ளி ஆசிரியர்களும் ஆன்மிக வழிகாட்டிகளாகிய குருக்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களும் மக்களும் நல்வழியில் வாழ்ந்து பயன் தர வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

நாம் நம் மனங்களை நல்ல நிலங்களை பண்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். அதை வழியோர நிலமாகவோ, கற்பாறையாகவோ, முட்புதராகவோ வைத்துக் கொள்ளாமல் சீர்படுத்தி நல்ல விளைநிலமாக்கி வாழ்ந்தால் நாம் இம்மையிலும் மறுமையிலும் நூறு மடங்கு பலனளிப்பவர்களாக வாழ்வோம் என்பதில் ஐயமில்லை.
- பிலோமினா சத்தியநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com