வேலை பெற உதவும் விநாயகர்!

நீண்ட காலமாக அந்தக் கோயிலில் பூஜை செய்து கொண்டு அந்த விநாயகரிடமே தன்  வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு வாழ்ந்து வந்தார்

நீண்ட காலமாக அந்தக் கோயிலில் பூஜை செய்து கொண்டு அந்த விநாயகரிடமே தன்  வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு வாழ்ந்து வந்தார் அந்த அர்ச்சகர். ஆனாலும் ஒரு கட்டத்தில்  அந்த அர்ச்சகரை வறுமை மிக அதிகமாக வாட்டி எடுத்தது. ஒருநாள் இனிமேல் வேறு ஏதாவது  வேலை தேடிக் கொள்ளலாம் என்று நினைத்தார் அர்ச்சகர். பல ஆண்டுகள் நான்கைந்து தலைமுறைகளாக பூஜை செய்து,  அழகுபார்த்த கணபதியை விட்டு விலகுகிறோம் என்ற நினைப்பில் அன்று நள்ளிரவுக்குப் பிறகே தூங்கச்  செல்கிறார். 

அதிகாலை எழப்போகும் நேரம் அர்ச்சகருக்கு அப்படியொரு கனவு வருகிறது. ஒரு  யானை தும்பிக்கையில் பூச்சரத்தை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி வருகிறது. பல முறை சுற்றி வந்த யானை, விநாயகர் தலையில் பூச்சரத்தை வைத்து விட்டு அர்ச்சகரை ஆசீர்வதிக்கிறது. இப்படியொரு கனவுக்குப் பிறகும் அந்தக் கோயிலை விட்டு விலகி, பூஜை செய்வதை  விட்டு விலகி வேறு வேலைக்கு அர்ச்சகர் போவாரா என்ன?  

ஆசீர்வதித்த கணபதி அமைதியாக இருப்பாரா? என்ன? தன் பக்தர் பட்ட கஷ்டமெல்லாம் போதுமென்று நினைத்து உதவிட ஓடோடி வந்தார். அடுத்த இரண்டு நாள்களில் அந்த அதிசயம் நடந்தது. சுங்கத் துறையில் உயர் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர் பழத்தட்டோடும் பணத்தட்டோடும் அந்தக்  கோயிலுக்கு வந்தார். அர்ச்சகருக்கு இன்ப அதிர்ச்சி!

வேலை கிடைக்க வேண்டும் என்று 48 நாள்கள்  விரதம் இருந்து கோயிலை வலம் வந்த அவர். வேலை கிடைத்ததும் தன் வேண்டுதலை நிறைவேற்ற வந்திருந்தார்.  அன்று அந்த அர்ச்சகருக்கு அள்ளிக் கொடுக்கத் தொடங்கிய விநாயகர் இன்று வரை  கொடுப்பது குறையாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.     

இந்த சித்தி  விநாயகர் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ.  தொலைவில் உள்ள தூத்துக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பல லட்சம் செலவில் திருப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேகம் 1.11.2017 அன்று நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94869 12793. 
- ஆதலையூர் த. சூரியகுமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com