தேவனுக்கு பிரியமாயிருங்கள்!

இஸ்ரவேலில் சவுல் அரசாண்டபோது இஸ்ரவேலர்களுக்கும், பெலிஸ்தருக்கும் போர் மூண்டது.
தேவனுக்கு பிரியமாயிருங்கள்!

இஸ்ரவேலில் சவுல் அரசாண்டபோது இஸ்ரவேலர்களுக்கும், பெலிஸ்தருக்கும் போர் மூண்டது. இதனால் இரண்டு படைகளும் ஏலா என்ற இடத்தில் வந்தனர். பின்னர் ஒருபக்கத்தில் உள்ள மலையில் பெலிஸ்தரும் அந்தபக்கத்தில் உள்ள மலையில் இஸ்ரவேலரும் நின்றார்கள்.

அப்போது,  பெலிஸ்தர் படையில் இருந்து மிகப்பெரிய யுத்த வீரனான கோலியாத் என்பவன் இருவருக்கும் நடுவாக நின்றுகொண்டு, இஸ்ரவேலரைப் பார்த்து, உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் என்னோடு யுத்தம் செய்து என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாயிருப்போம். அப்படிஇல்லாமல் நான் அவனைக் கொன்றால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு வேலைக்காரர்களாயிருந்து எங்களை சேவிக்க வேண்டும் என்று முழக்கமிட்டான். ( சாமுவேல் 17:8,9)

இதைக் கேட்ட சவுலும் இஸ்ரவேலரும் அவனைப் பார்த்து மிகவும் பயந்து நடுங்கினர். ஏனென்றால் அந்த கோலியாத்தின் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாண். மேலும் அவன் சிறுவயதுமுதல் யுத்த வீரன். அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான். அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும். அவன் தன் கால்களிலே வெண்கலக் கவசத்தையும், தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடயத்தையும் தரித்திருப்பான். அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும். அவனோடு நேருக்கு நேர் தனியாக சண்டையிட யாருக்கும் துணிவில்லை.

அப்போது யுத்தத்திற்கு சென்ற தன் சகோதரர்களைப் பார்த்து நலம் விசாரிக்க வந்தான் தாவீது. கோலியாத்தின் இந்த வார்த்தைகளை கேட்டான். அங்கு உள்ளவர்களிடம், இந்த பெலிஸ்தியனை கொன்று இஸ்ரவேலரை காப்பவருக்கு சவுல் ராஜா என்ன கொடுப்பார் என்று அருகே உள்ளவர்களிடம் கேட்டான். அவர்கள், அவனை கொல்லுகிறவனை ராஜா பெரிய ஜசுவரியவானாக்கி, அவனுக்கு தம்முடைய குமாரத்தியைத் தந்து அவனுடைய குடும்பத்தினருக்கு அனேக வெகுமதிகளையும் கொடுப்பார் என்றார்கள்.

தாவீது இப்படி விசாரித்த செய்தி ராஜாவுக்கு எட்டியது. உடனே தாவீது ராஜாவினிடத்தில் அழைத்து வரப்பட்டான். "உன்னால் எப்படி இந்த கோலியாத்தை வீழ்த்த முடியும். நீயோ இளைஞன், அவனோ சிறுவயது முதல் யுத்த வீரன்''  என ராஜா கேட்டார்.

ஆனால் தாவீது கூறினான், "நான் ஒருமுறை காட்டில் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒருமுறை கரடியும், ஒருமுறை சிங்கமும் வந்து என் ஆட்டை பிடித்தது. நான் அதை அடித்து கொன்று ஆடுகளை மீட்டேன். இந்த கரடியையும் சிங்கத்தையும் கொல்ல உதவிய தேவன் இந்த கோலியாத்தையும் கொல்ல உதவுவார். எனென்றால் அவரின் சேனையை நிந்தித்தானே!'' என்றான்.

உடனே சவுல் தாவீதை வாழ்த்தி அனுப்பினார். ஐந்து கூழாங்கற்களையும் கவணையும் எடுத்துக்கொண்டு கோலியாத்திடம் போரிட சென்றான். கோலியாத்தை வீழ்த்தினான். பெலிஸ்தர் தோற்று ஒடினர்.

இந்த சம்பவத்தில் பார்க்கும்போது, தாவீது தன் ஆடுகளை வேட்டையாட வந்த சிங்கத்தையும் கரடியையும் கொன்றுபோட தேவன் உதவிசெய்தார். அதேபோல் இந்த கோலியாத்தை கொல்லவும் உதவுவார் என்று தன்னை உயர்த்தாமல் தேவனை உயர்த்தினான். இதனால் தேவன் தாவீதோடிருந்து கோலியாத்தை வீழ்த்த உதவினார். கோலியாத் தன் உடல் முழுவதும் யுத்த வஸ்திரம் அணிந்திருந்தாலும், ஒரு கூழாங்கல் மூலமாக கோலியாத் வீழ்ந்தான்.

நாமும் நம்முடைய வாழ்வில் தேவன் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். கோலியாத் போன்ற சோதனைகள் வந்தாலும் நாம் தேவனுக்கு பிரியமானவர்களாக வாழும்போது அதை ஜெயிக்க தேவன் உதவுவார்.
- ஒய்.டேவிட் ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com