தேவகுரு பார்க்க நலம் தேடிவரும்!

சிவபெருமான் சனகர் முதலான முனிவர்களுக்கு முதன்முதலில் உபதேசம் செய்ததால் "ஆதிகுரு' எனவும்; சுக்ராச்சாரியார்அசுரர்களுக்கு
தேவகுரு பார்க்க நலம் தேடிவரும்!

சிவபெருமான் சனகர் முதலான முனிவர்களுக்கு முதன்முதலில் உபதேசம் செய்ததால் "ஆதிகுரு' எனவும்; சுக்ராச்சாரியார்அசுரர்களுக்கு வழிகாட்டியாக இருந்ததால் "அசுரகுரு' எனவும்; நவக்கிரக வியாழன் இந்திராதி தேவர்களுக்கு குருவாய் இருந்ததால் "தேவகுரு' எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

கோச்செங்கட் சோழன் எங்கெங்கு போதிய கட்டடங்கள் இல்லாமல் சிவலிங்கங்கள் இருந்தனவோ அங்கெங்கெல்லாம் கோயில் அமைக்க ஏற்பாடு செய்தான்.

யானை ஏற முடியாத வகையில் உயரமான படிக்கட்டுகளும் உறுதியான கருவறையும் உடைய எழுபது மாடக்கோயில்கள் அமைத்தான். அவ்வாறு கோச்செங்கட் சோழன் அமைத்த எழுபதில் ஒன்று தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில்! மூலவர் லிங்க வடிவில் சதுரபீடத்தில் காட்சி தந்து "தேவ குருநாதர்' என்ற பெயரோடு அருளுகிறார்.

தனி சந்நிதியில் "தேன்மொழியம்மை' என்னும் "மதுரபாஷிணி அம்பாள்' நின்ற திருக்கோலத்தில் காட்சி அருளுகிறாள். குரல் வளத்திற்கு காரணமானவள் ஆதலால் பல புகழ்பெற்ற பாடகர்கள் வந்து புகழ்ந்துபாடி விட்டுச்செல்லும் ஊர்.

திருஞான சம்பந்தரின் தேவாரம், திருநாவுக்கரசு சுவாமிகளின் திருத்தாண்டகம், அருணகிரிநாதர் திருப்புகழ், சேக்கிழார், வள்ளலார் ஆகியோர் படைப்புகளில் தேவூர் என இவ்வூரைக் குறிப்பிடுகின்றனர். தீர்த்தம் -தேவ தீர்த்தம், தலவிருட்சம்- வாழை ஆகும். ஆதலால் இறைவன் "கதலிவனேஸ்வரர்' எனவும் அழைக்கப்படுகிறார். இவ்வாழை, கல்வாழையென அழைக்கப்படுகிறது. இந்த வாழை மரத்திற்கு எவரும் நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்வது இந்த தல விருட்சத்தின் தெய்வீகத் தன்மையைக் கூட்டுகிறது.

விருத்தாசுரனைக் கொன்ற பாவமும் பிரம்மஹத்தி தோஷமும் பீடித்து இந்திர பதவியை இழந்த இந்திரன், இத்தலத்துக்கு வந்து இறைவனை வணங்க பாவம் நீங்கியது. இழந்த இந்திர பதவியையும் மீண்டும் பெற்றான். ராவணன் குபேரனுடன் போரிட்டு அவனுடைய சங்கநிதி, பதுமநிதி என்ற இரண்டு கலச நிதிகளைக் கவர்ந்து போனான். குபேரன் தேவூர் தலத்து இறைவன் தேவகுருநாதனை பூஜை செய்து அதனைத் திரும்பப் பெற்றார்.

ராமாயண காலத்தில் அசோக வனத்தில் சிறையிலிருந்த சீதையைக் காணச்சென்ற அனுமன் இத்தலத்து இறைவனின் அருள்பெற்று சென்றார். சூரியன், இவ்விறைவனை வழிபட்டிருப்பதால், பாஸ்கர ஷேத்திரம் எனப்படுகிறது. வெகுநாள்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்த வியாழனுக்கு இறைவன் தேவூரில் "தேவகுரு' என்னும் பட்டத்தை தந்தார்.

தனக்கு அனுக்கிரகம் வழங்கியது போல் தன்னை வணங்குவோரையும் அனுக்கிரகிக்க வேண்டும் என நவக்கிரக குருவான வியாழன் வேண்ட, அவ்வேண்டுகோளுக்கு இரங்கிய ஈசன் தன் அரு உருவ நிலை விட்டு உருவ நிலையில் அனுக்கிரக தட்சணாமூர்த்தியாய் இருந்து இத்தலத்தில் அருள் வழங்கத் தொடங்கினார். அனைத்து உயிர்களுக்கும் அனுக்கிரகம் செய்வதால் காலடியில் அபஸ்மாரன் என்னும் முயலகன் இல்லை. தேவர்களின் குருவான வியாழன் ஆதிகுரு வடிவில் மாடக்கோயிலின் தென்புற அதிஷ்டானத்தில் காட்சி தருகிறார்.

கோச்செங்கட் சோழன், குபேரன், பஞ்சபாண்டவர்கள், அனுமன் ஆகியோர் வணங்கிய தலமாதலால் இத்தலத்து ஈசன் "தேவகுருநாதர்' என்று வணங்கப்படுகிறார். சிறந்த குரு தலமான இங்கு வழிபாடு செய்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். குரு சம்பந்தப்பட்ட தோஷங்கள் எதுவாக இருந்தாலும் விலகும். தன்னை வழிபடுபவர்களுக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை அருள்பவர் தேவ குருபகவான். கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு இவரை வேண்டினால் தீர்வு கிடைக்கும்.

திருவாரூர் மாவட்டம், கீவளூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் பேருந்து வழித்தடத்தில் தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

தொடர்புக்கு: 94862 78810/ 94435 00398.

- இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com