நற்குணம் அருளும் நாதர்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், ஒரக்காட்பேட்டை என்ற கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ குணந்தந்த நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
நற்குணம் அருளும் நாதர்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், ஒரக்காட்பேட்டை என்ற கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ குணந்தந்த நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.   இத்திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகளைக் கடந்த கோயிலாக விளங்குகிறது. மன்னர் பெருமக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட பெருமையுடையது.

புராண வரலாறு:  அக்காலத்தில் பிரனேஷ்வனம் என்று அழைக்கப்பட்ட இக்காட்டுப்பகுதியின் வழியே பல வணிகர்கள் வியாபார நிமித்தம் வந்து செல்வதுண்டு.  இப்படி வியாபாரிகள் பொருட்கள் கொண்டு செல்கையில் ஆத்தூர் என்ற ஊரருகே கள்வர்கள் வழிமறித்து கொள்ளையிட்டு வந்தனர்.

அப்படி ஒரு வணிகர் தன் பொருட்களை கொள்ளையர்களிடம் பறிகொடுத்து மனம் கலங்கினார்.  பின்னர், அவ்வனத்தில் ஒரு வில்வமரமாய் குடிகொண்டிருந்த சிவபெருமானை வேண்டினார்.   கள்வர்களுக்கு நற்குணத்தைக் கொடுத்து கவர்ந்து சென்ற தனது பொருள்களை அவர்களாகவே தன்னிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் அதுவரையில்  அவ்விடத்தை விட்டு செல்லமாட்டேன் என்றும் மனமுருகி வேண்டினார்.

பரமேஸ்வரனும் வேடன் உருக்கொண்டு அக்கள்வர்களை தாக்கிட, கள்வர்கள் ஓடிச்சென்று அக்காட்டில் இருந்த மாகாளி தேவியிடம் தஞ்சம் புகுந்தனர்.

தேவியும் அக்கள்வர்களை காக்கும் பொருட்டு வேடனை நெருங்கி வந்தார். வேடர் உருக்கொண்டு வந்தவர் சிவபெருமானே என்பதை அறிந்த மாகாளி கள்வர்களுக்கு நல்ல குணத்தை தந்தருள வேண்டினாள்.  அக்கள்வர்களும் நற்குணம் பெற்று தாங்கள் களவாடிய பொருள்களை அந்த வணிகரிடம் ஒப்படைத்ததாக வரலாறு.  இந்த மாகாளி இவ்விடத்திற்கு வந்த வரலாற்றினைப் பார்ப்போம்.

ஒரு சமயம், சக்திதேவி ஈசனிடம் "இப்பிரபஞ்சத்தில் அனைவருக்கும் ஞான உபதேசம் செய்விக்க வேண்டும்' என்று கேட்க, ஈசனோ, "நீ பூலோகம் சென்று பிரனேஷ் வனத்தில் தவம் செய்தால், தக்க தருணத்தில் உமக்கு உபதேசம் செய்கிறேன்' என்றார்.  அதன்படியே சக்தியானவள் இக்காட்டில் மகா காளியாக கடும் தவமேற்று இருந்தபோது கள்வர்களுக்கு நற்குணம் தந்தாள்.  ஈசனும் சக்திக்கு உபதேசம் செய்தார்.  அதனால்தான் இத்தலத்தில் ஈசன், ஞான குருவாக, குணம்தந்த நாதராக திகழ்கிறார்.

ஆலயத்தின் அமைப்பு :   தெற்கு நோக்கிய வாயில் கொண்ட தலமாக இவ்வாலயம் விளங்குகிறது.  கிழக்கில் பலிபீடமும் நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. தெற்கு நோக்கிய வாயிலில் நுழைந்தால் மகா மண்டபம், அர்த்த மண்டபம், அந்தராளம் கருவறை என்ற அமைப்பில் திருக்கோயில் அமைந்துள்ளது.

கருவறை:   எம்பெருமான் "நாதர்' என்ற நாமத்தோடு கருவறையில் கிழக்கு நோக்கி சதுரபீட  ஆவுடையாருடன் வீற்றிருந்து  திருவருள் கூட்டுகிறார்.

ஒவ்வொரு ஜீவன்களும்  ஈசனால் பல்வேறான குணாதிசயங்களுடன் படைக்கப்பட்ட உயிர்களாகும்.   தீய குணங்களுடைய உயிரினங்களின் குணத்தையும் மாற்றி நற்குணத்தை ஏற்படுத்தி வாழவைக்கும் எம்பெருமானுக்கு "குணம்தந்த நாதர்' என்ற திருநாமம்  பொருத்தமாகவே அமைந்துள்ளது!

அம்பிகை திரிபுரசுந்தரி சந்நிதி:   மகாமண்டபத்தில் பிரவேசிக்கும்போதே வாயிலுக்கு நேரெதிரில் அம்பிகை ஸ்ரீதிரிபுர சுந்தரியை தரிசிக்கலாம். திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் திருக்கோட்டங்களில் தெற்கில் நர்த்தன கணபதி, ஸ்ரீ தட்சணாமூர்த்தி; மேற்கில் ஸ்ரீமஹா விஷ்ணு, வடக்கில் ஸ்ரீ பிரம்மதேவர், ஸ்ரீ விஷ்ணு துர்க்கையும் வீற்றிருந்து அருளுகின்றனர்.

கருவறைக்குப் பின்புறத்தில் உட்புறத் திருச்சுற்றில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி,அருகில் பலிபீடம், நந்தி, காசி விஸ்வநாதர் சமேத காசி விசாலாட்சி;  ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசண்முகப் பெருமான், கஜலெட்சுமி தாயார்,  சண்டேஸ்வரப்பெருமான் வீற்றிருந்து அருளுகின்றனர்.

வெளிப்புறத் திருச்சுற்றில் கன்னிமூல கணபதி, ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்யர்,  எட்டு திக்குகளிலும் பலிபீடங்கள்,  நந்தி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலுக்கு பின்புறம் அடர்ந்த புளியந்தோப்பின் மத்தியில் மாகாளியம்மனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

தலவிருட்சம் - ஆலமரம்,  தல தீர்த்தம் - குப்தகங்கை. எப்படிப்பட்ட பித்ரு தோஷங்களையும் நீக்கும் தோஷ பரிகாரத்தலமாக இத்திருக்கோயில் விளங்குகிறது. இங்கு, காளிதேவிக்கு ஒரு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்வதால்  தீய குணங்களை அறவே நீங்கும். வழக்குகள் ஜெயமாகும். செய்வினை பாதிப்புகள் அகலும். எதிர்மறை ஆற்றலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்பிலிருந்து மீள்வர்.

தொடர்புக்கு : 90949 32057.
- க. கிருஷ்ணகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com