சென்னையின் இரட்டைத் திருப்பதி!

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1945-இல் அரிசி தட்டுப்பாட்டால் சுவாமி நிவேதனத்திற்கு சில நாள்கள் அரிசி கிடைக்கவில்லை.
சென்னையின் இரட்டைத் திருப்பதி!

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1945-இல் அரிசி தட்டுப்பாட்டால் சுவாமி நிவேதனத்திற்கு சில நாள்கள் அரிசி கிடைக்கவில்லை. அதனால் வரகு அரசியால் நிவேதனம் செய்து படைக்கப்பட்டது. வரகரிசி படைக்கப்பட்ட உண்மை உணராத சிலரால் கவர்னருக்குப் புகார் தரப்பட்டது.

அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதியை மேற்பார்வையிட்டு நிர்வகித்து வந்த கவர்னர், கோயில்கள், அறக்கட்டளைகள் மற்ற மத நிறுவனங்கள் சரியாக இயங்குகிறதா என மிகுந்த முனைப்போடு கண்காணிக்க ஆட்களை நியமித்திருந்தார்.

அவரது எல்லையில் இருந்த பாசன ஏரிகளில் ஒன்று சுமார் 950 ஏக்கர் பரப்பளவுள்ளது. குறடு என்றால் திண்ணை அல்லது திண்ணையொட்டியுள்ள பகுதி, கரை எனப் பொருள்.

இந்த ஏரிக்கு அருகில் உள்ள பகுதி குறடூர் என அழைக்கப்பட்டது. பின்னர், கொரட்டூர் என திரிந்து வழங்கத் துவங்கியது. கொரட்டூர் வளமும் செழிப்புமாக அமைந்திருந்த ஊராக இருந்தது. அந்த ஊரில் இருந்த அந்தக் கோயிலுக்கு உரிய நிலங்களில் இருந்து கிடைக்கும் நெல்லின் மூலம், பூஜை, நிவேதனம் போன்றவை செய்யப்பட்டு வந்தது.

புகாரின் உண்மையை அறிய விரும்பினார் கவர்னர். அம்பத்தூரில் முகாம் இட்டார். சமைத்த சாதக்கலயத்தினை நிவேதனம் செய்த கையோடு வந்து ஆஜராக அர்ச்சகருக்குக் கட்டளை பறந்தது. அன்றைக்கு வரகரிசியில் நிவேதனம் செய்து இறைப்பணி ஒன்றையே நெறியாகக் கொண்டிருந்த கோ யில் பட்டர் பிரசாதக் கலயத்துடன் சென்றார். கலயத்தைத் திறந்தபோது, நல்ல தரமான உயர்ரக அரிசியில் சமைக்கப் பட்ட அன்னம் இருந்தது. கவர்னர் முன்பு நடந்த இந்த நிகழ்வை நம்ப முடியாமல் திகைத்து நின்றார் அர்ச்சகர். அர்ச்சகர் நடந்த நிகழ்வை கவர்னரிடம் கூறினார். இறைவன் திருவுள்ளமே இது என்பதை உணர்ந்தார் கவர்னர். யாருக்கும் குறை வராமல் தானே அந்தக்குறையை நிவர்த்தி செய்த இறைவனின் அற்புதம் தெரிந்தது.

இந்த அற்புதம் நிகழ்ந்த கோயில் அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலாகும் . இந்த திருக்கோயில் சென்னை, கொரட்டூரில் அமைந்துள்ளது. நின்ற திருக்கோலத்தில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் மடியிலே மகாலட்சுமியை அமர்த்திக் கொண்டு இருந்த கோலத்தில் அருளும் வகையில் லட்சுமி நாராயணப் பெருமாள் என்னும் இரண்டு பெருமாள்கள் ஒரே வளாகத்துக்குள் இரண்டு தனித்தனிக் கோயில்களில் கிழக்கு நோக்கி இருந்து அருளுகின்றனர். இது ஒவ்வொன்றும் தனித்தனிக் கோயில்களாகும். இதே போல் பாண்டிநாட்டு திவ்ய தேசத்தில் இரட்டைத் திருப்பதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு, ஸ்ரீலக்ஷ்மி தீர்த்தம் என்னும் புனித புஷ்கரணி கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.

உலக நலத்திற்காக கி.பி 1340-ஆம் ஆண்டில் சந்திரகிரி ராஜ்ஜியத்தை ஆண்ட 2-ஆம் ராஜநாராயணன் என்ற மன்னனால் இந்தக் கோயில்கள் சிறியதாக கருவறை அர்த்தமண்டபத்துடன் மட்டும் எழுப்பப்பட்டன என வரலாறு சொல்கிறது. லட்சுமி நாராயணர் சந்நிதி விமானம் சேதமடைந்து இருந்ததால் திருப்பணி முடித்து எழுந்தருளவிக்கப்பட்டது. கோயிலின் தென்புறத்தில் ஸ்ரீலட்சுமிநாராயணர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை அர்த்தமண்டபம், மஹாமண்டபத்துடன் உற்சவருடன் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ சுகந்த லக்ஷ்மித் தாயாரை மடியிலே வைத்துக்கொண்டு ஸ்ரீ லட்சுமி நாராயணராக சேவை அருளுகிறார் பெருமாள். இந்த சந்நிதியில் ஸ்ரீ ஆலிலை கிருஷ்ணரும் எழுந்தருளியுள்ளார். தென்மேற்கு மூலையில் காளியநர்த்தன கிருஷ்ணர் மூலமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

கோயில் வடபுறத்தில் தனிசந்நிதியில் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். தாயார் அமிருதவல்லித்தாயார் ஆதிகேசவப்பெருமாள் திருமார்பிலேயே எழுந்தருளியுள்ளார். எதிரில் கருடன் சந்நிதியும் உள்ளது.

மக்களின் அபிமானத்தலமான இக்கோயில், பிரார்த்தனைக்குக் கைமேல் பலன் என்ற முறையில் வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகள் நிறைவேறியவர்கள் உபசாரமும் உபகாரமும் செய்து வழிபடுவது இக்கோயிலின் சிறப்பாகும்.

தீராத மனக்கவலைகள் தீர பெருமாள் சந்நிதிக்கு நெய் வாங்கிக் கொடுத்து தீபமேற்றுதலும், வெள்ளிக்கிழமை லட்சுமி நாராயணருக்கு ஸ்ரீசூக்த ஆராதனம் செய்து திருமணம் கை கூடுவதும், எவ்வகை வேண்டுதல் இருந்தாலும் பலன்பெற இரண்டு பெருமாள் சந்நிதிகளை ஒரு மண்டலம் தனித்தனியாக 4 முறை பிரதட்சணம் செய்து வழிபட காரியம் கை கூடுவதும் கண்கூடு. சரும நோய்கள், திருமண தடை நீங்கவும் காளிங்க நர்த்தன கிருஷ்ணனுக்கு அர்ச்சனை செய்கின்றனர். ரோகிணி நட்சத்திரம், தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை செய்து பால்பாயசம் நிவேதனம் செய்தால் குழந்தைப் பேறு உண்டாகும் என்பது ஐதீகம்! நினைவாற்றல் அதிகரித்து தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற கருடனுக்கு அமிர்தகலசம் ( பொரித்த கொழுக்கட்டை) நிவேதனம் செய்தல் போன்ற பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலில் தினமும் மாலை 7.00 மணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் நடைபெறுகிறது.

புரட்டாசி மாதம் இரட்டைத் திருப்பதி பெருமாள்களை சேவித்து அருள் பெறுவதும் சனிக்கிழமை ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் உபயநாச்சிமாரோடு திருவீதிப்புறப்பாடு நடைபெறும்போது இருந்து தரிசனம் செய்வதும் சிறப்பானதாகக் கொள்ளப்படுகின்றன.

பாடி பிரிட்டானியா பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும்; கொரட்டூர் ரயில் நிறுத்தத்திலிருந்து ஆட்டோவிலும் கோயிலை சென்றடையலாம்.
தொடர்புக்கு : 79047 43748; 79047 38171.
- ஆர். அனுராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com