பயணத்தில் பரிணமித்த ஆண்டு

காலம் நேரம் கணித்து  கவனித்து பயணம் புறப்படுவது பாருலக மக்களின் பழக்கம்; வழக்கம். இவ்வழக்கத்திற்கு மாறாய் தேறா மக்களின் ஊறுகளைக் கடந்து உறுதியான
பயணத்தில் பரிணமித்த ஆண்டு

காலம் நேரம் கணித்து  கவனித்து பயணம் புறப்படுவது பாருலக மக்களின் பழக்கம்; வழக்கம். இவ்வழக்கத்திற்கு மாறாய் தேறா மக்களின் ஊறுகளைக் கடந்து உறுதியான ஏக இறை கொள்கையை இறுதிவரை பின்பற்றி இன்னலின்றி நன்னெறியில் நல்வாழ்வு வாழ மக்காவிலிருந்து மாநபி (ஸல்) அவர்களும் தோழர்களும் மதீனா சென்ற புனித பயணமே ஹிஜ்ரத். ஹிஜ்ரத்தை ஆரம்பமாய் கொண்டு கணித்ததே பயணத்தில் பரிணமித்த ஹிஜ்ரி ஆண்டு. ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டு 22.9.2017 இல் பிறக்கிறது.

ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் ஏக இறைகொள்கையை கூறிய ஐந்து ஆண்டுகளில் நேர்வழியைப் பின்பற்றியோர் பெருகினர். குமுறிய குறைஷிகள் கொடுத்த தொல்லைகள் எல்லையற்றவை; எண்ணற்றவை. பக்கத்து நாடுகளான பாரசீகம், சிரியாவை விட அபிசீனியாவில் மன்னர் நஜ்ஜாஷின் நல்லாட்சி நடந்தது. குறைஷியர் கொட்டம் அடங்கும்வரை அண்டை நாடுகளில் வாழ எண்ணிய இஸ்லாமியர் அபிசீனியா (இன்றைய எத்தியோப்பியா) விற்குச் சென்றனர். முதல் குழு உத்மான் பின் மள்வூன் (ரலி) தலைமையில் 11 ஆண்கள் 4 பெண்கள் சென்றனர். அக்குழுவில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மகள் ருக்கையா (ரலி) மருமகன் உத்மான் பின் அப்பான் (ரலி) இருந்தனர். சில நாள்களில் 83 ஆண்கள் 18 பெண்கள் சிறுவர்கள் அடங்கிய இரண்டாம் குழு சென்றது. 

நபித்துவம் பெற்ற 11 ஆம் ஆண்டில் யத்ரீப் (மதீனாவின் பழைய பெயர்) ஹஜ்ஜுக்கு வந்த கஜ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அறுவர் இறுதி நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ் ஒருவன் அவனின் தூதர் தூயநபி (ஸல்) அவர்கள் என்பதை ஏற்றதே மதீனா ஹிஜ்ரத்திற்கு அடித்தளம் அமைத்தது. அடுத்து, 12 ஆம் ஆண்டில் பன்னிருவர் 13 ஆம் ஆண்டில் 75 பேர் ஹஜ்ஜில் ஏக இறை கொள்கையை ஏற்றனர். 

நபித்துவம் கிடைத்து 13 ஆண்டுளாகியும் ஏக இறை கொள்கையை ஏற்றோர் எண்ணிக்கையில் கூடினாலும் எண்ணத்தில் ஏற்றமில்லாத தூற்றும் மூர்க்கர்களான மூட குறைஷிகளின் ஏடாகூட எதிர்ப்பு குறையவில்லை. பிறந்து 53 ஆண்டுகள் வாழ்ந்த மக்காவைத் துறந்து நபித்துவம் பெற்ற 13 ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 4 திங்கள்கிழமை காலை மதீனாவிற்குப் புறப்பட்டார்கள் புனித நபி (ஸல்) அவர்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இல்ல வாயிலில் பொல்லா குறைஷியர்கள் கொல்லும் வாளுடன் கொடுங்கண்கள் கொட்ட கொட்ட விழித்திருக்க யாசீன் சூராவின் முதல் ஒன்பது வசனங்களை ஓதி மண்ணை அள்ளி வீசி மா பாவிகள் பாராது ஆராதிக்கும் அல்லாஹ்வின் அருளால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வண்ணமான வரலாறு படைத்த திண்ணமான ஹிஜ்ரி ஆண்டைத் தீர்மானித்த பூரணமான பயணம் புறப்பட்டதைப் புனித குர்ஆனின் 8-30 ஆவது வசனம் வாகாய் உரைக்கிறது. தொடர்ந்து தோழர்கள் மக்காவிலிருந்தும் அபிசீனியாவிலிருந்தும் முதல் ஹிஜ்ரத் செய்தவர்களும் மதீனா வந்தனர். அபிசீனியாவில் இருந்து வந்தவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இரு ஹிஜ்ரத்களின் நன்மைகளைப் பெற்றவர்கள் என்று நல்வாழ்த்து கூறி வரவேற்றார்கள்.

ஆதி நபி ஆதம் பூமியில் இறக்கப்பட்ட நாளே ஆண்டின் முதல் நாளாய் ஆண்டு கணக்கு துவங்கியது. பின் நூஹ் நபி கால பிரளயத்திலிருந்தும் இப்ராஹீம் நபி, யூசுப் நபி வருகைகளையும் மூசா நபியும் அவர்களைப் பின்பற்றியோரும் எகிப்திலிருந்து வெளியேறிய நாளையும் தாவூது நபி, சுலைமான் நபி காலங்களையும் ஆண்டு துவக்கமாக கணக்கிட்டனர். ஈசா நபி பிறந்தபின் கி.பி., கி.மு. என்று காலம் கணக்கிடப்பட்டன. அப்ரஹாம் யானை படையுடன் கஃபாவைத் தாக்க முனைந்து நோக்கம் நிறைவேறாது நொந்து வெந்து மடிந்த நிகழ்ச்சியை நினைவுறுத்தும் ஆமுல்பீல் என்ற யானை ஆண்டும் நடைமுறையிலிருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா வருகையை கணக்காக கொண்டு மாதங்களைக் கணக்கிட்டனர் மக்கள். அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆட்சியின் நான்கு ஆண்டுகளிலும் இந்த கணக்கே கடைப்பிடிக்கப்பட்டது. ஏமன் ஆளுநர் அபூமூஸô அஷ் அரி (ரலி) கோரியபடி கடிதங்களில் நாள், மாதம், ஆண்டு கணக்குக் குறிப்பிடும் முறை ஏற்கப்பட்டது. முறையான முதியோர் அறிஞர் ஆலோசனைப்படி ஹிஜ்ரத்தைத் துவக்கமாக்கி ஹிஜ்ரி ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திய அஞ்சல்துறை அச்சிட்ட ஹிஜ்ரி 15 ஆம் நூற்றாண்டைக் குறிப்பிடும் சிறப்பு அஞ்சல் தலையை 3.11.1980 இல் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார்.

புத்தாண்டில் எத்திக்கும் ஏக இறை கொள்கையை ஏற்ற மக்கள் ஏற்றமுடன் போற்றற்குரிய அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்து வணங்கி வாழ வேண்டும். போரில்லா உலகம் உருவாக உறுதுணை புரிய வேண்டும். அமைதி அகிலத்தில் நிலவ ஆவன செய்ய வேண்டும். அல்லாஹ்வின் அருளும் கிட்டும்.
- மு.அ. அபுல் அமீன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com