ஆசுரா நோன்பு

ஈருலகிலும் இறைவனின் படைப்புகள் பதிக்கப்பட்ட இறைமறை இயம்பும் இஸ்லாமிய வரலாற்று நிகழ்ச்சிகள் நடந்த முஹர்ரம் பத்தாம் நாள் (1.10.2017) ஆசுரா நாள்.
ஆசுரா நோன்பு

ஈருலகிலும் இறைவனின் படைப்புகள் பதிக்கப்பட்ட இறைமறை இயம்பும் இஸ்லாமிய வரலாற்று நிகழ்ச்சிகள் நடந்த முஹர்ரம் பத்தாம் நாள் (1.10.2017) ஆசுரா நாள். இஸ்லாத்தில் ரமலான் ஒரு மாத நோன்பு மூன்றாம் கடமையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ஆசுரா நோன்பைக் கடமையாக நோற்றனர். 

ஆசுரா ஹீப்ரு மொழி சொல். ஆசுரா யூதர்களின் திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாள். ஏக இறை கொள்கையை போதித்ததால் பிர்அவ்னின் பெருங்கொடுமைகளால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகிய மூசா நபியும் அவர்களைப் பின்பற்றியோரும் கடக்க நைல் நதியைப் பிளந்து வழி கொடுக்க வைத்த அல்லாஹ் ஆணவமாய் ஆண்டவன் நானே என்று ஆர்ப்பரித்து தறிகெட்டு நெறி பிறழ்ந்து தாண்டவமாடிய பிர்அவ்னையும் அவனுடைய படையையும் நைல் நதியில் மூழ்கடித்த இந்நாளையே ஆசுரா நாள் என்று யூதர்கள்  நோன்பு நோற்றனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முன்னோரான மூசா நபியையும் ஏற்றி போற்றும் இஸ்லாமியர்களும் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் பத்தில் "" ஆகரா நோன்பு நோற்றனர். ரமலான் மாத நோன்பிற்குப் பிறகு சிறப்பான நோன்பு அல்லாஹ்வின்அருளைப் பெறும் முஹர்ரம் மாத ஆசுரா நோன்பு'' என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு நோற்று அந்த ஆசுரா நோன்பை அவர்களைப் பின்பற்றியோரையும் நோற்குமாறு ஏவியதை எடுத்துரைக்கிறார் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். யூதர்கள் பத்தாம் நாள் மட்டும் ஒரு நாள் நோன்பு நோற்றனர். இஸ்லாமியர்கள் ஆசுராவிற்கு முந்திய ஒன்பது அல்லது பிந்திய பதினொன்று ஆகிய இரு நாள்களிலும் ஒரு நாளைச் சேர்த்து நோன்பு நோற்க பண்பு நபி (ஸல்) அவர்கள் பணித்தது அஹ்மத் நூலில் உள்ளது. இன்றும் இஸ்லாமியர்கள் ஆசுராவிற்கு முந்திய அல்லது பிந்திய ஒரு நாளைச் சேர்த்து இருநாள்கள் நோன்பு நோற்கின்றனர்.

நூஹ் நபி போதித்த ஏக இறை கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களைப் பிரளயத்திலிருந்து காப்பாற்ற ஏற்றி சென்ற கப்பல் ஆசுரா நாளில் ஜூது மலையில் நின்றது. பிரளயத்திலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த நூஹ் நபியும் அவர்களின் ஆதரவாளர்களும் நோன்பு நோற்றனர். நோன்பு திறக்க ஒவ்வொருவரிடமும் மீதமிருந்த ஏழு வகை பருப்புகளை ஒன்றாக கஞ்சிபோல் வேகவைத்து அனைவரும் அருந்தினர். அன்றிலிருந்துதான் நோன்பு திறக்க கஞ்சி காய்ச்சும் பழக்கம் ஏற்பட்டது.

ஆசுரா நோன்பைக் கடந்து சென்ற ஓர் ஆண்டின் தீமைகளுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததை இயம்புகிறார் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத். ரமலான் மாத முப்பது நாள்கள் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னரே நாங்கள் ஆசுரா நோன்பு நோற்றோம்; பித்ரா தர்மமும் கொடுத்தோம். ரமலான் மாத நோன்பு கடமையான பின்னரும் ஆசுரா நோன்பு தடை செய்யப்படவில்லை. அதனால் ஆசுரா நோன்பை நாங்கள் தொடர்ந்து நோற்றோம் என்று உரைக்கிறார் கைஸýப்னு ஸஃதிப்னு உபாதா (ரலி) நூல்- நஸஈ.

ஆசுரா நாளன்று தான் மக்காவில் உள்ள கஃபாவின் கதவுகள் திறக்கப்படுகின்றன. முதல் முதலாக உலகில் மழை பெய்தது ஆசுரா நாளன்றே. ஆசுரா நாளில்தான் உலக அழிவும் ஏற்படும்.

அகிலத்தில் அல்லாஹ்வின் படைப்புகள் நிலை பெற்ற, நினைவில் நிற்கும் நிகழ்ச்சிகள் நடந்த ஆசுரா நோன்பை இருநாள்கள் நோற்போம். போற்றி புகழும் அல்லாஹ்வின் ஏற்றமான அருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com