ஒரே கோயில் மூன்று கைலாசநாதர்கள்! 

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது "செவிலிமேடு'. சிவலிங்கமேடு என்பதே காலப்போக்கில் செவிலிமேடானது

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது "செவிலிமேடு'. சிவலிங்கமேடு என்பதே காலப்போக்கில் செவிலிமேடானது. இப்பகுதியில் ஏரிக்கரையில் பழைமையான அருள்மிகு கைலாசநாதர் கோயில் உள்ளது. ஒரே கோயிலில் மூன்று கைலாசநாதர்கள் சந்நிதிகள் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
 கோயிலின் தெற்கு பகுதியில் உள்ள அழகிய நுழைவு வாயிலின் மேலே விதானத்தில் ராகுவும் - கேதுவும் கைலாசநாதரை வழிபடுவது போன்று அழகிய சுதை உருவம் அமைந்துள்ளது. அதன் இரு புறங்களிலும் ஆதிசங்கரும் காஞ்சி மகா பெரியவரும் அமர்ந்த கோலத்தில் வழிபடுவோருக்கு அருளாசி வழங்கும் கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு.
 இறைவன் கைலாசநாதர் எழுந்தருளி அருள்புரியும் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. பெரிய திருமேனி. கம்பீரமாகக் காட்சி தருகிறார். லிங்க பாணம் தாராலிங்கமாக விளங்குகின்றது. பல்லவர் காலத்திலேயே இங்கு கோயில் இருந்திருக்க வேண்டும் எனக்கருத முடிகிறது. கருவறையின் தெற்கு - வடக்கு பக்கங்களில் கிழக்கு நோக்கி இரு சிவன் சந்நிதிகள் அமைந்துள்ளது. இதனை தெற்கு கைலாசநாதர், வடக்கு கைலாச நாதர் என அழைக்கின்றனர். கோயிலின் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் சனிபகவான் தனிசந்நிதியில் அமைந்து அருள்கின்றார். கிழக்கு நோக்கி சனிபகவான் சந்நிதி அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
 திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் திருக்குளம் அமைந்துள்ளது. திருக்குளத்தில் வடகரையில் ராகு - கேதுவுக்கென்று தனி சந்நிதி அமைந்துள்ளது. உடல் நலம் வேண்டியும், துன்பங்கள் தீரவும் விளக்குகள் ஏற்றி வழிபடுகின்றனர். ராகு - கேது தோஷம் நீங்க இது சிறந்த பரிகாரத்தலமாகும். ஸ்ரீ கைலாசநாதர் கோயிலுக்குச் செல்ல, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து செய்யார், வந்தவாசி, திருவண்ணாமலைக்குச் செல்லும் பேருந்துகளில் சென்று செவிலிமேட்டில் இறங்கலாம்.
 - ஆர்.ரவிச்சந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com