பிறவிப் பாவம் நீக்கிடும் பிரம்மபுரீஸ்வரர்! 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள பிரம்ம தேயம் எனப்படும் பிரம்மதேசத்தில் உள்ளது பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இவ்வூரின் மையப்பகுதியில் பாதாளீஸ்வரர் ஆலயமும்
பிறவிப் பாவம் நீக்கிடும் பிரம்மபுரீஸ்வரர்! 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள பிரம்ம தேயம் எனப்படும் பிரம்மதேசத்தில் உள்ளது பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இவ்வூரின் மையப்பகுதியில் பாதாளீஸ்வரர் ஆலயமும் வடக்கு திசையில் ஏரிக்கரையின் அருகில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. பல்வர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர மன்னர்கள் போற்றி வணங்கிய அற்புதத் தலம் இது! பிரம்மன் வழிபட்டதால் இத்தல ஈசன் பிரம்மபுரீஸ்வரர் ஆனாதாகவும் அதனால் இந்த ஊருக்கு பிரம்மதேசம் என்ற பெயர் வந்ததாகவும் ஆலய வரலாறு தெரிவிக்கிறது. இவ்வாலயத்துக்குச் செல்லும் வழியில் "தேரடி விநாயகர்' சந்நிதி உள்ளது.
 ஊரின் வடக்குத் திசையில் உயர்ந்த மலைகள், வயல் வெளிகளுடன் அற்புதமாக காட்சியளிக்கும் இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கல்வெட்டு தகவலின்படி இக்கோயில் சோழ மன்னர்கள் காலத்தவை என்றும்; ஆராய்ச்சியின் போது கிடைத்த துர்க்கை சிலையை வைத்துப் பார்க்கும் பொழுது இது பல்லவர் காலத்திலும் இருந்திருக்கலாம் என்கின்றனர். மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய " மீனாட்சி கலித்தொகை' யில் இந்த பிரம்ம தேசம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 இவ்வாலயம், தொல்லியியல் துறையின் மூலம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. நந்தியப்பர் மேற்கு நோக்கி இறைவனை வழிபடுகிறார். வலது புறம் பெரிய மண்டபம் உள்ளது. இது அம்மையின் சந்நிதியாக இருந்திருக்கலாம். மேற்கு நோக்கி உள்ளே சென்றால் பிரம்மாண்டமான திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. இதில் இரட்டைப் பிரகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட, உருண்டை வடிவ கல்லால் ஆன தூண்கள், அற்புதமான வடிவமைக்கப்பட்டு, நான்கு புறமும் கல் மண்டபத்தை தாங்கி நிற்கின்றன.
 கிழக்கு நோக்கிய இறைவனின் கருவறை சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் பிரம்மபுரீஸ்வர் லிங்கத் திருமேனியாக காட்சி தருகின்றார். முகப்பு மண்டபத்தின் வடக்கில் தெற்கு நோக்கிய தனிச்சந்நிதியில் அன்னை பெரியநாயகி என்ற திருநாமத்தோடு நின்ற திருக்கோலத்தில் அருள்கிறாள். மேல் வலது கரத்தில் அல்லி மலரும் மேல் இடது கரத்தில் தாமரை மலரும் தாங்கியபடி இருக்க, கீழ்வலது கரம் அபய முத்திரையோடும் கீழ் இடது கரம் வரத முத்திரையோடும் ஆனந்த தரிசனம் தருகின்றாள்.
 பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வயானையுடன் வஜ்ரப்படை, சக்திப்படை ஏந்திய முருகப்பெருமான், துர்க்கை, காலபைரவர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் நவக்கிரகச் சந்நிதியும் அமைந்துள்ளன. தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா அருள்பாலிக்கின்றனர்.
 குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால் வியாழக்கிழமைகளில் இவ்வாலயத்தில் உள்ள குருபகவானை வழிபடுவது மிகவும் நல்லது. திங்கள்கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர நாள்களில் இத்தல இறைவனை வழிபடுவது சிறப்பாகும்.
 பிறவிப் பாவங்கள் தீரவும் திருமணத்தடை , புத்திரபாக்கியம், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் இவ்வாலயத்தில் உள்ள இறைவனை வழிபடுவதால் நம் விருப்பங்கள் நிறைவேறும்.
 விழுப்புரம்- செஞ்சி சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவிலும்; செஞ்சியிலிருந்து தென்கிழக்கே 21 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்த பிரம்மதேசம் திருத்தலம்.
 - களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com