ஆதிசங்கரர் செய்த நன்மைகள்! 

ஆதிசங்கரர் இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்கும் வழிபாட்டு நெறிமுறைக்கும் திருத்தல தரிசன சேவைக்கும் மிகப்பெரிய இலக்கணமாகத் தோன்றியவர்.
ஆதிசங்கரர் செய்த நன்மைகள்! 

ஆதிசங்கரர் இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்கும் வழிபாட்டு நெறிமுறைக்கும் திருத்தல தரிசன சேவைக்கும் மிகப்பெரிய இலக்கணமாகத் தோன்றியவர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதம் முழுவதும் பாதயாத்திரையாகவே சென்று இந்து சமய வாழ்வியல் நெறியின் பெருமைகளையும் அத்வைத சித்தாந்தக் கோட்பாடுகளின் அருமையையும் உலகம் முழுவதும் உணரச் செய்த பேரருளாளர்! மக்களின் பல்வேறு சமயச்சடங்குகளை நெறிமுறைப்படுத்தி சாத்வீக முறையில் அமைதியான வழிபாட்டு வழியை அறிமுகப் படுத்தி நடைமுறையில் கொண்டு வந்த பெருமைக்குரியவர் ஆதிசங்கரர்.
 முப்பத்திரண்டு ஆண்டுகளே இப்பூவுலகில் வாழ்ந்து இறையருளில் கலந்த அந்த மாமுனிவர் பாரதத்தின் பெருமை வாய்ந்த பன்னிரு ஜோதிர்லிங்கங்கள், பராசக்தியின் பல்வேறு பரிணாமங்களான ஐம்பத்தொரு ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை முதலியவற்றைச் செய்து சிறந்த ஆன்மிக தொண்டாற்றியுள்ளார். பசுபதிநாதர், பூரி, சிருங்கேரி, காஞ்சி, சிதம்பரம் ஆகிய திருத்தலங்களுக்கு கயிலாயத்திலிருந்து கொண்டு வந்த பஞ்சலிங்கங்களை அளித்துள்ளார். அவை, இன்றும் பூஜிக்கப் பெற்று வருவதே அவரின் அருள்கொடைக்கு எடுத்துக்காட்டாகும்.
 ஆதிசங்கரர் இந்து சமயத்தின் அடிப்படை நூல்கள் என்று கருதப்படும் பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள், பகவத் கீதை, வேதாந்த சாத்திரங்கள் போன்றவற்றுக்கு அற்புதமான பேருரை கண்டவர். சிவானந்தலஹரி, சௌந்தர்யலஹரி, விவேக சிந்தாமணி போன்ற பல நூல்களையும் ஆதிசங்கரர் இயற்றியுள்ளார்.
 இந்து சமயத்தின் பல்வேறு வழிபடு கடவுள் கொள்கைகள் உள்ளன. இறைவனை அடையும் பொருட்டு மார்க்கங்களை ஆறு வகையாகப் பிரித்தார். அவை, காணபத்தியம்- கணபதி, கௌமாரம்- முருகன், சைவம்- சிவன், சாக்தம்- அம்பிகை, வைணவம்- திருமால், சௌரம்- சூரியன் ஆகும். மக்கள் அவரவர் விருப்பப்படி, இந்த அறுவகை வழிபாட்டு நெறிமுறையைக் கடைப்பிடித்து பரம் பொருளை உணர வழிவகுத்தவர் இவரே. மேலும் வேதத்திற்கு சரியான வ்யாக்கியானம் செய்துள்ளார். வேதத்திலும் சாஸ்திரத்திலும் சொல்லப்பட்ட கர்மாக்களையும் கடமைகளையும் சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கூறியுள்ளார்.
 ஆதிசங்கரர், அவருடைய உபதேசங்களில் மனிதன் தன் வாழ்க்கையில் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று விளக்கிக் காட்டியிருக்கிறார். இதைக் கர்மம் என்று சொல்வார்கள். வேதத்தில் மனிதன் நல்வாழ்வுக்காக இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று கர்மாக்கள் பற்றியதும் அதன் அவசியங்களும் ஆகும். மற்றது பிரம்மத்தைப் பற்றியது. வேதத்தில் சொல்லியபடி அவனவன் கர்மாக்களை ஒழுங்காக அனுஷ்டிக்க வேண்டும் என்கிறார். மனது பரிசுத்த நிலையில் இருந்தால் தான் வேதாந்த விசாரத்திற்கு யோக்யதை உள்ளவனாய் இருக்கமுடியும்.
 வேதாந்த விசாரம் செய்தால்தான் ஞானம் சம்பாதிக்க முடியும். ஞானம் அடைந்தவுடனே அவன் மோட்சத்திற்கு அருகதையுள்ளவன் ஆகிறான். சாஸ்திரங்களைக் கற்றறிந்த பண்டிதர்களுக்கு பிரம்ம சூத்திரம் போன்ற "ப்ரஸ்தான த்ரய பாஷ்யங்கள்' செய்தருளியிருக்கிறார். மேலும் மக்களை நல்வழி படுத்த நாடெங்கும் நான்கு மடங்களை நிறுவினார். அவை இன்றும் நற்பணியாற்றி வருகின்றன. 20.04.2018 - ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்த புண்ணிய தினமாகும்.
 - டி.எம். இரத்தினவேல்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com