நெஞ்சம் நெகிழ்விக்கும் நெல்லையப்பர்! 

அம்பிகை உமையம்மை எம்பெருமானிடம் இரு நாழி நெல்பெற்று வேணுவனம் அடைந்து அதனைக் கொண்டு முப்பத்து இரண்டு தர்மங்களையும் வளர்த்தாள்.
நெஞ்சம் நெகிழ்விக்கும் நெல்லையப்பர்! 

அம்பிகை உமையம்மை எம்பெருமானிடம் இரு நாழி நெல்பெற்று வேணுவனம் அடைந்து அதனைக் கொண்டு முப்பத்து இரண்டு தர்மங்களையும் வளர்த்தாள். அங்கேயே இருந்து தவம் செய்து ஈசனின் அருட்கோலக் காட்சி கண்டு மணக்கோலம் கண்டாள். இந்த அற்புதத் திருமணக்கோலத்தை தென்திசை வந்த அகத்திய முனிவருக்குக் காட்டியருளினார்கள் இறைவனும், இறைவியும்.
 பெருமை வாய்ந்த நெல்லையம்பதி திருத்தலத்தில் வேத சர்மா என்ற அந்தணச் சான்றோர் ஈசனின் நைவேத்தியத்திற்காகப் பலரிடம் பெற்றுவந்த நெல்லைக் காயவைத்து விட்டு நீராடச் சென்றார். எதிர்பாராமல் மழை பெரியதாய் பெய்யவே, "ஈசனே உனக்கு நைவேத்தியம் செய்யக் கொணர்ந்த நெல் என்னாகுமோ? காப்பாற்றி அருளுங்கள்' எனக் கதறியபடியே ஓடிவர, ஈசனின் பெரும் அருளால் நெல்லுக்கு வேலியிட்டார் போல அதனைச் சுற்றிலும் மழைபொழிய நெல்மட்டும் நனையாமால் இருந்த அதிசயத்தைக் கண்டு மழையென கண்ணீர் சொரிந்தார். இதனால் வேணுவன ஈசன் நெல்வேலி நாதர் எனப்புகழ் பெற்றார்.
 சுவேத கேது என்ற அரசன் மன முருகி நெல்வேலி நாதரை வணங்கி வந்தார். வாரிசு இல்லாத மன்னனுக்கு எல்லாமே ஈசன் என்ற சிந்தனையில் இரவு, பகல் பாராது பக்தி பூண்டான். அந்திமக் காலம் நெருங்கியது. எமதருமன் ஆலயத்துள் இருந்த அரசன் மீது பாசக்கயிற்றை வீசினான். இறைவன் காலனைக் காலால் கடிந்து "மன்னவன் விரும்பும் போது முக்தி பெறலாம்' என்று வரம் தந்து அருளினார். எனவே "கூற்றுதைத்த நெல்வேலி' எனச் சேக்கிழார் புகழ்ந்து பாடியுள்ளார்.
 சுவாமி சந்நிதி முதலாம் திருச்சுற்றில் காலசம்ஹார மூர்த்தியின் கோலம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த திருவிளையாடலை நினைவு படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதத்தில் பூரம், உத்திரம், ஹஸ்தம் ஆகிய நட்சத்திரத் தினங்களில் சிவ பூஜை செய்து பஞ்ச மூர்த்திகள் ஒரே ரதத்தில் உலா வரும் காட்சி அருமையானது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவரும் திருநெல்வேலி ஈசனைப் பாடிப் பரவியுள்ளனர். அழகிய சொக்கநாதப் புலவர் அருளிய காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், படிக்காசுப் புலவரின் தனிப் பாடல்கள் தலச்சிறப்பை விளக்குகின்றன. தமிழ்நாட்டில் குபேரலிங்கம் அமையப்பெற்றுள்ள சில திருக்கோயில்களில் திருநெல்வேலியும் ஒன்று. திருஞானசம்பந்தப் பெருமான் தன் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் திருநெல்வேலியுறை செல்வர் தாமே! என நிறைவு செய்திருப்பது இதற்குச் சான்றாகும்.
 இத்திருக்கோயில் சுவாமி கோயில், அம்மன் கோயில் என இரு பகுதிகளாக உள்ளது. இங்கு தெற்குப்பிரகாரம், மேலப் பிரகாரம், வடக்கு பிரகாரம் கீழ்ப் பிரகாரம் என்ற அமைப்புடன் உள்ளது. மணி மண்டபத்தில் இருந்து மேற்குப் பக்கமாக நேரே சென்றால் நெல்வேலி நாதரை வழிபடலாம். நெல்வேலி நாதருக்கு வடப்புறமாக கிடந்த கோலத்துடன் பெரிய உருவமாக ரங்கநாதரின் தரிசனம் அற்புதக் காட்சியாகும். புகழ்பெற்ற தாமிரபரணி நதிக்கரையில் வீற்றிருக்கும் ஈசன் தாமிர சபையில் நடராஜப் பெருமானாக அருள்பாலிக்கின்றார். தாமிர சபை மண்டபத்தின் உள்ளே சந்தன சபாபதியை வழிபாடு செய்யலாம். நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப் பெற்ற இசைத் தூண்கள் இவ்வாலயத்தில் பிரபலமாகும்.
 உயிர்களுக்குத் தவம் இயற்றும் முறையை அறிவுறுத்தற் பொருட்டு காந்திமதி அன்னை இங்கே கமல பீட நாயகியாக காமாட்சி என்னும் திருநாமத்துடன் தவக்கோலம் பூண்டு அருள் பொழிகின்றாள். எனவே இத்தலம், தட்சிண காஞ்சி எனவும், காமகோட்டம் எனவும் அழைக்கப் பெறுகிறது. அம்பிகை காந்திமதி தலையில் வைர மணி முடிக்கீரிடம், ராக்கோடி சூடி முகத்தில் புல்லாக்கு மூக்குத்தியுடன், நவமணிமாலை அணிந்தும், பாதங்களில் மணிச்சிலம்புகள் அணிந்தும் அழகுறக் காட்சி தருகின்றாள். இடப்புறம் கரம் தாழ்ந்தும், வலப்புறக் கரம் கிளியேந்தியும் காணப்படும் அற்புதத் திருக்கோலம். ஒளிபொருந்திய சந்திரனைப் போன்ற முகமுடையவள் என்பதால் காந்திமதி எனப் பெயர் கொண்டாள். இவளின் புன்னகையின் சக்திக்கு இணையுமுண்டோ? இவள் பூவிழி பார்வை பட்டால் தொல்லைகள் அகன்று விடும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்து சுவாமி தீட்சிதர் அம்பிகை மீது ஹேமாவதி ராகத்தில் அமையப்பெற்ற "ஸ்ரீ காந்திமதிம்' என்ற கீர்த்தனையை இயற்றி அருள்பெற்றார்.
 ஆறுமுக நயினார் சந்தியில் வித்யா சக்கரம் உள்ளது. இதனை வழிபாடு செய்து கல்வியில் மேம்படலாம். அமாவாசை பரதேசி என்னும் சித்தர் வழிபட்ட முருகன் கால் மாற்றி அமர்ந்து யோக சின் முத்திரையுடன் குருகுகனாகக் காட்சி தருகின்றார்.
 பனிரெண்டு மாதங்களும் உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. சுவர்ண புஷ்கரணி என்னும் பொற்றாமரைக் குளம், தல தீர்த்தமாகும். மூங்கில் தல விருட்சம். மதுரையை விட பெரிய கோயிலான இத்திருக்கோயில் சிற்பக் கலையின் சிகரமாகவே திகழ்கின்றது. இத்தகைய பெருமை மிக்க ஆலயத்தின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஏப்ரல் 27- ஆம் தேதி, காலை 09.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெறுகின்றது. தொடர்ந்து அன்று மாலை மகா அபிஷேகமும் இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் நடைபெறுகின்றன. யாகசாலை பூஜைகள் ஏப்ரல் 24 முதல் தொடங்குகின்றன.
 தொடர்புக்கு: 0462 2339910.
 - மீனாட்சி ஸ்ரீநிவாஸன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com