பாம்பாக மாறிய பாலமுருகன்..! 

பிரணவ மந்திரத்துக்குப் பொருள் தெரியாததால் படைக்கும் கடவுள் பிரம்மனையே சிறையில் அடைத்தான் முருகப் பெருமான். இது எல்லோருக்கும் தெரிந்த புராண வரலாறு.
பாம்பாக மாறிய பாலமுருகன்..! 

பிரணவ மந்திரத்துக்குப் பொருள் தெரியாததால் படைக்கும் கடவுள் பிரம்மனையே சிறையில் அடைத்தான் முருகப் பெருமான். இது எல்லோருக்கும் தெரிந்த புராண வரலாறு. இந்த செயலுக்காக மனம் வருந்தி முருகன் ஊர்ந்து செல்லும் பாம்பாக மாறியதாகக் கூறப்படுவதும் புராண வரலாறுதான். இப்படிப்பட்ட அரிய நிகழ்ச்சி நடந்த இடம்தான் கேரளாவில் இருக்கும் ஆதி நாகசுப்ரமணியா திருக்கோயில்.

தமிழகத்தில் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்று வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள குக்கி சுப்ரமணியா கோயில் முருகன் வழிபாட்டுக்கு பெயர் பெற்ற ஸ்தலம். இதுபோன்று கேரளாவில் ஆதி நாகசுப்ரமணியா என்ற பெயரில் திருச்சூர் அருகே குடி கொண்டிருக்கும் ஸ்தலம்தான் கண்ணிமங்கலம் கந்தன் கோயில்.

படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு தமக்கு எல்லாம் தெரியும் என்ற செருக்கு ஏற்பட, ஒரு சமயம் கயிலாயத்திற்கு வருகிறார். அங்கு எல்லோருக்கும் வணக்கம் தெரிவிக்கும் பிரம்மன், சிறு குழந்தையான கந்தனைக் கண்டு கொள்ளாமல் போய் விட, முருகன் அவரை வழிமறித்து, எல்லாம் அறிந்த பிரம்ம தேவரே பிரணவ மந்திரத்துக்குப் பொருள் உரைத்து விட்டு பிறகு செல்லுங்கள் என்று சொல்ல, சின்னஞ்சிறு பாலகனிடம் இக்கட்டில் மாட்டிக் கொண்டதை உணர்கிறார். கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஏதேதோ சொல்ல, அவரை சிறையில் அடைக்கிறார் முருகன். பின்பு படைப்புத் தொழிலையும் தாமே மேற்கொள்கிறார். உலகில் முருகனால் படைக்கப்படும் அனைத்து ஜீவராசிகளும் பொதுவான குணாதிசயங்கள் கொண்டதாக இருக்க, இறப்பு என்பதே இல்லாமல் போகிறது. தேவர்கள் இதை சிவபெருமானிடம் முறையிட, அவரிடமும் பிரணவ மந்திரத்துக்குப் பொருள் கேட்பதும் பின்பு தந்தைக்கே உபதேசம் செய்வதும் முருகப் பெருமானின் லீலைகள்.

ஆனால் மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவையே சிறையில் அடைத்ததற்காக மனம் வருந்தும் முருகன், கீழான பிறப்பெடுப்பதுதான் இதற்கு பிராயசித்தமாக இருக்கும் என்று கருதி பாம்பாக உருவெடுத்து பல இடங்களிலும் வசித்து வர, குமரனைக் காணாமல் பார்வதி தேவி கலங்கித் தவிக்கிறாள். மகனைக் காணாத துயரம் அவரை வாட்டி வதைக்க, ஆரம்பித்தது. இது பற்றி சிவபிரானிடம் முறையிட, எல்லாம் அறிந்த பரம்பொருள் பிரம்மனுக்கு கொடுத்த தண்டனைக்காக உன் மகன் பாம்பாக மாறி தாம் செய்த தவறை உணர ஆரம்பித்திருக்கிறான். நீதான் அவனைக் கண்டுபிடித்து அழைத்து வர வேண்டும் என்று சொல்கிறார்.

அழகு மகன் குமரனுக்கு இப்படி ஒரு நிலையா என்று மனம் வருந்துகிறார். பாம்பாக மாறிய மகன் மீண்டும் குழந்தையாகக் காட்சி தர வழி சொல்லுங்கள் என்று பரமேஸ்வரனிடம் மன்றாடுகிறாள். பாம்பு வடிவமெடுத்த முருகன் குழந்தையாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நீ 108 சஷ்டி விரதம் அனுசரிக்க வேண்டும். 108-ஆவது விரதத்தின் போது உன் விருப்பம் நிறைவேறும் என்று கூறுகிறார். ஆடவல்லானின் யோசனைப்படி உமாதேவி கடுமையாக சஷ்டி விரதம் மேற்கொள்கிறார்.

கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டியில் தேவர்கள், முனிவர்கள் புடைசூழ, விரதம் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது. அப்போது மஹாவிஷ்ணு அங்கு தோன்றி குட்டியாக இருக்கும் ஒரு நாகத்தின் தலையை தம் கையால் தொட, உடனே குமரன் குழந்தையாகக் காட்சி தருகிறார். பார்வதி தேவி மனம் பூரித்து மகனை முருகனாகக் காண்கிறார். இப்படிப்பட்ட அற்புதம் நிகழ்ந்த இடம்தான் கேரள மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள கண்ணிமங்கலம் ஆதி நாகசுப்ரமணியா ஆலயம் ஆகும்.

சிறிய ஊர் என்றாலும் முருகனின் மறு அவதார ஸ்தலம் என்பதால் கேரள மண்ணுக்கே உரிய இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும் கிழக்குத் திசை நோக்கி சந்நிதி அமைந்துள்ளது. ஆயிரம் தலையும் இரண்டாயிரம் நாக்குகளும் கொண்ட ஆதிசேஷன், இங்கு ஐந்து தலை நாகமாகக் காட்சியளிக்கிறார். திருமாலைத் தன் மடியில் தாங்கி சேவை சாதிக்கும் ஆதிசேஷன், மாலவனின் மருகனையும் தம் மீது தாங்கி நிற்கிறார். ஷண்முகக் கடவுள் அழகாக சிறிய உருவில் காட்சியளிப்பது அற்புதமான காட்சி.

கேரளக் கோயில்கள் பலவற்றில் மூலஸ்தானத்தில் இன்னும் மின் விளக்குகள் அமைக்கப்படாத நிலையில் குத்துவிளக்குகளின் ஒளியில் சந்நிதி மிளிர்கிறது. பொன்மயமாக ஜொலிக்கும் கமுகுப் பூக்களால் அழகாக அலங்கரித்திருக்கிறார்கள். நெய் தீபத்தின் பின்னணியில் பிரகாசிக்கிறான் கார்த்திகைச் செல்வன். தினந்தோறும் காலையில் நடைபெறும் பூஜையின் போது குமரனுக்கு குளிரக் குளிர நடக்கும் பால் அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சி.

மேற்குப் பிரகார பின்புறச் சுவரில் இரண்டு விநாயகர்கள் காட்சியளிக்கிறார்கள். மஹாவிஷ்ணு மற்றும் சாஸ்தாவுக்கும் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. பரசுராமர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயிலின் உள்ளே அழகான குளமும் உள்ளது. இதையொட்டி நான்கு புறமும் சுவர் எழுப்பி பெரிய வாசலுடன் அமையப்பட்ட மண்டபத்தின் உள்ளே ஒரு பெரிய புற்று காணப்படுகிறது. இதையடுத்து பிரமாண்ட அரச மரத்தின் கீழே பெரிய நாகர் சிலையும் அருகே சிறிது சிறிதாக இருபது நாகங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள புற்றுக்கு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். புற்றின் தோற்றமும், அமைந்திருக்கும் இடமும் பக்தி கலந்து மெய் சிலிர்க்க வைப்பதாக இருக்கிறது.

அதிகாலை ஐந்து மணியிலிருந்து பதினோரு மணி வரையிலும் மாலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டரை மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தமிழகத்தில் கந்த சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படுவது போல் கார்த்திகை மாதத்தில் வரும் குமார சஷ்டி இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்தான் பார்வதி தேவி விரதமிருந்து முருகனை மீண்டும் மகனாக கண்ட நாள். இது மட்டுமின்றி தைப் பூசம், பார்வதி தேவியிடம் ஞானப் பால் அருந்திய விழாவும் விசேஷமான நாள்கள்.

நாக தோஷம் உள்ளவர்கள் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தால் தோஷம் விலகி நன்மை பெறுவார்கள் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் ஏராளம். ஒரு மண்டலம், அரை மண்டலம் கால் மண்டலம் என்று விரதம் மேற்கொண்டு பால் அபிஷேகம் செய்து வந்தால் கைமேல் பலன் கிடைப்பதாக நம்புகிறார்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தாம்பூலப் பிரசன்னம் பார்த்து பரிகாரம் சொல்லும் வழக்கமும் இங்கு உள்ளது.

கோயில் அமைக்கப்பட்டதை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் பிரதிஷ்டா தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிரதிஷ்டா தினம் 28.04.2018 -அன்று நடைபெற இருக்கிறது. அன்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி பூர்ணாபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் வழங்கப்படுவதுடன் மாலை சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். இரவு நடைபெறும் வாண வேடிக்கை கண்கொள்ளாக் காட்சி! இந்த நாளில் குமரனை தரிசித்தால் சகல நன்மைகளும் கிட்டும் என்பது நிச்சயம்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது நெம்மேரா. இங்கிருந்து 1 கி.மீ. பயணம் செய்தால் கண்ணிமங்கலம் கோயிலை அடையலாம். பொள்ளாச்சி - திருச்சூர் சென்றாலும் நெம்மேராவை அடையலாம்.

தொடர்புக்கு: 85475 51443/ 93491 5270 / 98462 22956.

- ஸ்ரீபுரம் சுப்ரமணியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com