பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

மனிதப்பிறவி அரிதாயினும் அதுவே மிகுதியும் அஞ்சத்தக்கது. ஏனென்றால் மனிதர்கள் தங்கள் செயல்களால் இந்தப் பிறவிக்குப் பிறகு வரும் பிறவியில் மேலாயினும் கீழாயினும் போகக்கூடும். 
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* மக்கள் தங்களுக்கு வரும் இன்ப துன்பங்களை வினைவழியே விட்டு, இறைவனை முற்றிலும் நம்பியிருக்க வேண்டும். அவன் சம்மதத்தின்படியே அனைத்தும் நடைபெறும் ஆதலால், பயனை நோக்காமல் இருப்பதே உயர்ந்த பண்பாகும். 

* மனிதப்பிறவி அரிதாயினும் அதுவே மிகுதியும் அஞ்சத்தக்கது. ஏனென்றால் மனிதர்கள் தங்கள் செயல்களால் இந்தப் பிறவிக்குப் பிறகு வரும் பிறவியில் மேலாயினும் கீழாயினும் போகக்கூடும். 
- பாம்பன் சுவாமிகள்

* மேருமலையை வில்லாகக் கொண்டவர், வெள்ளிமலையான கயிலாயத்தின் சிகரத்தில் வசிப்பவர், நாகராஜனை நாண்கயிறாகக் கொண்டவர், திரிபுரர்களை அழித்தவர், தேவர்களால் துதிக்கப்பட்டவர் அப்படிப்பட்ட சந்திரசேகரனான பரமேஸ்வரனை நான் சரணடைகிறேன். என்னை யாரால் என்ன செய்ய முடியும்?
- ஸ்ரீ சந்திரசேகராஷ்டகம் 

* ஒரு செயலை நாளை செய்ய வேண்டுமென்றால் இன்று செய். இன்று செய்ய வேண்டுமென்றால் இப்போதே செய். ஒரு கணத்தில் பிரளயமே வந்துவிடலாம், பின்னர் செய்வதுதான் என்ன? - கபீர்தாசர்

* இறைவனே! திருநீறு பூசிய மெய்யடியார்களுக்குச் சதா விருந்து வைப்பதால் வருகிற வறுமையையும், விரதமிருந்து இளைக்கிற உடம்பையும் எனக்குக் கொடு.
- சிவப்பிரகாச சுவாமிகள்

* எரிகிற நெருப்பை நீரினால் அணைப்பது போல, மனதில் எழுகிற கோபத்தைப் புத்தியினால் அடக்குகிறவனே மகாத்மா.கோபத்தை அடைந்த எவன்தான் பாவத்தைச் செய்யமாட்டான்?கோபத்தினால் ஆட்கொள்ளப்பட்டவன் பெரியோர்களையும் கொன்றுவிடுவான். தீய சொற்களால் சாதுக்களை அவமதித்தும் பேசுவான். அவன் எது சொல்லத்தக்கது, எதுசொல்லத்தகாதது என்பதை அறியான்.பாம்பு தன் சட்டையை உதறித் தள்ளுவதைப் போல, எழுகிற கோபத்தைப் பொறுமையினால் உதறித் தள்ளுபவனே புருஷன் என்று கருதப்படுவான்.
- ராமாயணத்தில் ஹனுமான் சொன்னது

* காட்டிலோ, போரிலோ, பகைவர், வெள்ளம், நெருப்பு ஆகியவற்றின் நடுவிலோ, பெருங்கடலிலோ, மலையுச்சியிலோ இருப்பவனாயினும், அந்த மனிதனை முற்பிறவியில் செய்யப்பட்ட புண்ணியங்கள் (நல்வினைகள்) காப்பற்றுகின்றன.
- பர்த்ருஹரி

* எல்லோரும் சித்தர்களாக ஆகிவிட முடியாது. மக்கள் தங்கள் சித்தத்தை அடக்குவது கடினம். ஆனால் அவர்கள் சிறந்தவர்களாக விளங்க முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் எண்ணங்களில் பரிசுத்தமானவர்களாக இருக்க வேண்டும்.
- மயான யோகியார்

* தீமை செய்தால் தீமை செய்வதுதான் உலக வழக்கம். ஆனால் தீமை செய்தாலும் நன்மை செய்வது உத்தமர் வழக்கம். 
- குருநானக்

* நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றாலும் காண்பதற்கு அரிது எல்லையில்லாத சிவம்.
- அவ்வை குறள்

* ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கையின் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சந்தர்ப்பங்களும் காரணங்களும் உண்டாகின்றன. ஆனால் அவையெல்லாம் அறிவில்லாதவனைத்தான் பாதிக்குமே தவிர, விவேகமுள்ளவனை அணுகாது.
- மகாபாரதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com