ஏற்றம் தரும் திருவோணம் திருநாள்!

தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் முதலான நான்கு புருஷார்த்தங்களை தரக்கூடிய விஷ்ணுவின் நட்சத்திரமாக திருவோணம் அமைந்துள்ளது. திருவோணம் என்பது 27 நட்சத்திரங்களில் ஒன்று.
ஏற்றம் தரும் திருவோணம் திருநாள்!

தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் முதலான நான்கு புருஷார்த்தங்களை தரக்கூடிய விஷ்ணுவின் நட்சத்திரமாக திருவோணம் அமைந்துள்ளது. திருவோணம் என்பது 27 நட்சத்திரங்களில் ஒன்று. இதனை, வடமொழில் "சிரவணம்' என்றும் குறிப்பிடுகிறார்கள். இவ்வாண்டு, திருவோணம் திருநாள் 25.08.2018 - அன்று வருகிறது.
திருமாலின் தசாவதாரங்களுக்கும் முந்தைய ஸ்ரீ ஹயக்ரீவனின் நட்சத்திரம் திருவோணமாகும். வாமன அவதாரமும் சிரவண தினத்திலேயே அமைந்துள்ளது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் திருப்பதி ஸ்ரீநிவாஸனின் நட்சத்திரமும் சிரவணமாக அமைந்துள்ளது. சிரவண நட்சத்திரத்தின் ஏற்றம் மிகவும் பெருமை வாய்ந்ததாக அமைந்துள்ளதால் பக்தர்கள் அந்த தினத்தையே ஒரு விரத தினமாக அனுஷ்டித்து திருமாலின் அருளைப் பெறுகிறார்கள். சிரவணம் என்ற தன்மை முதலாவதாக கொண்டாடப்படுகிறது. 
திருவோண நட்சத்திரத்தில் திருப்பதி ஸ்ரீநிவாஸனின் "மணி'யின் அம்சமாக புரட்டாசி மாதத்தில் வைணவ குருவான சுவாமி தேசிகர் அவதரித்ததுடன் சிறந்த ஹயக்ரீவ உபாஸகராகவும் விளங்கினார்.
மத்வ சம்பிரதாயத்திலும் ஸ்ரீ வாதிராஜ சுவாமிகள் தோன்றியதும் திருவோணத் திருநாளே! அதனால்தான் இரண்டு மஹான்களும் ஸ்ரீஹயக்ரீவ உபாஸகர்களாக விளங்கினார்கள். இந்த மஹநீயர்களால் திருவோண நட்சத்திரத்திற்கே பெருமை ஏற்படுகிறது என்று பெருமை கொள்ளலாம். 
முதலாழ்வார்கள் என்று போற்றப்படும் மூவரில் "பொய்கையாழ்வார்' காஞ்சியில் ஐப்பசி திருவோணத்தில் அவதரித்தவர். அதேபோன்று திருவோணம் திருநாள் திருப்பதி ஸ்ரீநிவாஸனை முன்னிட்டு, புரட்டாசி மாதத்தில் ஸ்ரீ நிவாஸனுக்கு பிரம்மோத்ஸவமாகக் கொண்டாடப்படுகிறது. பல திருத்தலங்களில் பிரம்மோத்ஸவம் போன்ற திருவிழாக்கள், திருவோண நட்சத்திரத்தை ஆரம்ப நாளாகவோ அல்லது முடிவு நாளாகவோ வைத்துக் கொண்டாடப்படுகிறது. 
எந்தெந்த தலங்களில் ஸ்ரீநிவாஸப் பெருமாள் பிரதான பெருமாளாக அமைந்துள்ளாரோ அத்திருத்தலங்களில் திருவோணம் திருநாள் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. புகழ்பெற்ற ஸ்ரீநிவாஸ தலங்களில் கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ள "ஒப்பில்லா அப்பன்' திருக்கோயிலில் "சிரவண தீபம்' ஏற்றப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அச்சமயத்தில் எம்பெருமானைத் தரிசிப்பவர்களுக்குப் பெருமாள் அர்ச்சகர் வாயிலாக பக்தர்களுக்கு அருள்வாக்கு நல்குகிறார். 
சென்னையிலிருந்து மதுராந்தகம் செல்லும் பாதையில் வேடன்தாங்கல் ஊருக்கு அருகில் அமைந்துள்ள தென்திருப்பதி என்று போற்றப்படும் திருமலை வையாவூரில் ஒவ்வொரு திருவோணத்தன்றும் திருவோண விழா நடைபெறுகிறது.
திருவோணம் திருநாள் விசேஷமாக ஹயக்ரீவரை முன்னிட்டு திருவஹிந்திபுரத்தில் ஆவணி மாதம் 10 நாள்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருவோண நட்சத்திரத்தன்று விரதம் இருந்து எம்பெருமானை ஆராதிப்பவர்கள் எல்லாவித மேன்மையும் அடைவார்கள். பொதுவாக, திருவோணம் திருநாள் விஷ்ணுவின் அம்சத்தைக் கொண்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மக்கள் ஆவணி மாத திருவோணம் திருநாளை, "ஓணம்' பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.
- எஸ்.ஆர்.எஸ். ரெங்கராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com