குலம் தழைக்க குலதீபமங்கலம்!

"தட்சிண பினாகனி' என்று புகழப்படும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பழைமையான ஊர்களில் ஒன்று குலதீபமங்கலம். வேளாண்மை வளத்துடன் திகழும் இக்கிராமத்தை அந்தகாலத்திலிருந்து
குலம் தழைக்க குலதீபமங்கலம்!

"தட்சிண பினாகனி' என்று புகழப்படும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பழைமையான ஊர்களில் ஒன்று குலதீபமங்கலம். வேளாண்மை வளத்துடன் திகழும் இக்கிராமத்தை அந்தகாலத்திலிருந்து இக்காலம் வரை பல மகான்களும், அருளாளர்களும் தங்கள் விஜயங்களினால் மென்மேலும் புனிதப்படுத்தி வருகின்றனர். "அகரம் குலதீபமங்கலம்' என்ற பெயருடன் ஆன்மீக மணம் கமழ விளங்குகிறது.
 அமைந்துள்ள ஆலயங்கள்: காவல் தெய்வங்களிலிருந்து காக்கும் தெய்வங்கள் வரை குடிகொண்டுள்ள அனைத்து ஆலயங்களையும் இவ்வூரின்கண் தரிசிக்கலாம். பல குடும்பங்கள் குலதெய்வமாக வணங்கப்படும் அய்யனார், சுடுமண் சிற்பத்தினால் ஆன குதிரை, யானை உருவங்கள் சூழ ஊரின் நுழைவு வாயிலில் கோயில் கொண்டுள்ளார்.
 தென்கிழக்குப் பகுதியில், வயல்களின் நடுவே துர்க்கையம்மன் மேடு என்று அழைக்கப்படும் பகுதியில் அம்பிகை துர்கை சங்கு சக்ரம் ஏந்தி கலைமானுடன் ஒரு பெரிய கற்பாறையில் புடைப்புச்சிற்பமாகக் காட்சியளிக்கின்றாள். தொன்மையான பல்லவர்கள்கால கலையம்சத்துடன் திகழும் இந்த அம்பிகையை ஊர்மக்கள் பயபக்தியுடன் வழிபடுகின்றனர்.
 அகன்ற வீதியுடன் திகழும் அக்ரகாரத்தின் நுழைவில் உள்ளது அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோயில் நித்ய பூஜைகள் மற்றும் விழாக்கள் குறைவின்றி நடைபெறும் ஆலயமாகத் திகழ்கின்றது. இறைவன் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் அம்பலத்திற்கு தானம் அளிக்கும் செய்தினை தெரிவிக்கும் சோழர்கள் கால கல்வெட்டு உள்ளது.
 வீதியின் நடுவே உள்ள பஜனை மடத்தில் ராமர் பட்டாபிஷேகம், மற்றும் பாமா ருக்மணியுடன் இருக்கும் கிருஷ்ணபகவான் ஓவியப்படங்கள் வழிபடப் படுகின்றது. பல வருடங்களுக்கு முன் சித்திகள் பல கைவரப்பெற்ற வாசுதேவ பரபிரும்மம் என்ற அருளாளரால் பூஜிக்கப்பட்ட பெருமையுடையது இந்த படங்கள்.
 பஜனை மடத்திற்கு அருகில் உள்ளது கனகவல்லித் தாயார் சமேத வீரராகவப் பெருமாள் சந்நிதி. மூலஸ்தானத்திலேயே கல்யாண கோலத்துடன் திருமணத் தடைகளை நீக்கும் தெய்வீகத் தம்பதிகளாக கண் நிறைந்து காட்சியருளுகின்றனர் பெருமாளும் தாயாரும். சிறிய திருவடி, பெரிய திருவடி சந்நிதிகளும், கருட வாகனமும் ஆலயத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. வீதியின் கடைசியில் திரௌபதி அம்மன், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் தீமிதித் திருவிழாவில் பல கிராமங்களிலிருந்தும் பங்கேற்பர். விழாக்காலங்களில் 15 நாட்களுக்கு "பாரதம்' வாசிக்கப்படுகின்றது.
 பாதம் பதித்த புனிதர்கள்: குறுமுனி அகஸ்தியர் இங்கு சிலகாலம் ஆற்றங்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வாசம் செய்ததாக செவிவழிச் செய்தி உண்டு. இக்கூற்றை நிரூபணம் செய்யும் வகையில் திரௌபதி அம்மன் கோயிலில் இருக்கும் பகுதி "அகஸ்தியர் மூலை' என்று வழங்கப்படுகின்றது. அரசாங்க பதிவேடுகளிலும் இப்பெயரே உள்ளது. காஞ்சி மகாசுவாமிகள் 1925 -ஆம் வருடம் ஒரு தடவை விஜயம் செய்ததுடன் அதன்பின் 1946 -ஆம் வருடம் இவ்வூருக்கு அருகில் துரிஞ்சல் ஆற்றுப் பகுதியில் உள்ள வசந்த கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டிருந்த சமயத்தில் அடிக்கடி இவ்வூருக்கு விஜயம் செய்துள்ளார்.
 சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகள் ஒரு வருடம் இங்கு வந்து அனுக்கிரகித்துள்ளார்கள். தபோவனத்துப் பேரருளாளர் ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் நினைத்த போதெல்லாம் இவ்வூருக்கு வருவாராம். முதன் முதலில் சிவ - விஷ்ணு ஆலயத்தில் மின்சார வசதி வந்தவுடன் அதனை திறந்து வைத்துள்ளார். குலதீபத்தை பிரகாசிக்க செய்தார் என்பர்.
 திருவண்ணாமலையிலிருந்து குகை நமச்சிவாய சித்தர் இவ்வூருக்கு வந்துள்ளார். யோகி ராம் சுரத்குமார் (விசிறி சாமியார்), தயானந்த சரஸ்வதி சுவாமிகள் போன்ற அருளாளர்கள் விஜயம் செய்துள்ளார்கள். இவ்வூரில் வாழ்ந்த பெரியோர்கள் சிலர் சாஸ்திர சம்பிரதாயங்களில் பாண்டித்யம் பெற்று பிற்காலத்தில் சந்நியாஸ தீட்சைப்பெற்று இங்கேயே சித்தியடைந்து அதிஷ்டானவாசியாக உள்ளனர். தற்காலத்தில் பரனூர் மகான் ஸ்ரீ கிருஷ்ணப்ரúமி சுவாமிகள், திருக்கோயிலூர் ஜீயர் சுவாமிகள், மஹாராண்யம் பூஜ்யஸ்ரீ முரளீதரஸ்வாமிகள் போன்ற அருளாளர்கள் இங்கு அடிக்கடி விஜயம் செய்த வண்ணம் உள்ளனர்.
 ருத்ராபிஷேகமும், ராதாருக்மணி கல்யாணமும்: இவ்வூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இவ்வூர் வாசிகள் ஆண்டு தோறும் ஒன்று கூடி மஹன்யாச ஏகாதச ருத்ரஜப ஹோமத்தையும், ருத்ராபிஷேகத்தையும், பஜனோத்வ பத்ததியில் ராதாகல்யாண மகோத்ஸவத்தையும் பெரிய அளவில் நடத்தி வருகின்றார்கள். அவ்வகையில் இந்த வைபவங்கள் இவ்வாண்டு, ஆகஸ்ட் 17, 18, 19 தேதிகளில் நடைபெறுகின்றது.
 திருக்கோவிலூரிலிருந்து மணலூர் பேட்டை வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது குலதீபமங்கலம்.
 தொடர்புக்கு: 94440 12905 / 94430 45976.
 - எஸ்.வெங்கட்ராமன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com