தியாக திருநாளின் விழுமியம்

'பக்ரீத்' என்னும் உருது மொழி சொல்லால் குறிப்பிடப்படும் ஹஜ் பெருநாளுக்குத் "தியாகத் திருநாள்' என்ற பெயரும் உண்டு.
தியாக திருநாளின் விழுமியம்

'பக்ரீத்' என்னும் உருது மொழி சொல்லால் குறிப்பிடப்படும் ஹஜ் பெருநாளுக்குத் "தியாகத் திருநாள்' என்ற பெயரும் உண்டு. இப்ராஹீம் நபி இறைவன் கட்டளையை ஏற்று திட்டமிட்டு மாற்றம் ஏதுமின்றி மனமாச்சரியம் தளர்ச்சி தடுமாற்றம் இல்லாது செய்த தியாகத் திருநாளே ஹஜ் பெருநாள். 22.08.2018 -இல் கொண்டாடப்படும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகளைத் தினமணி வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதுபோன்ற பல தியாக வரலாறுகளைத் தியாகம் என்பதே இஸ்லாம் என்று பாடி சுருங்க செல்லி விளங்க வைத்தார் மறைந்த இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா.
 உலகில் முதன் முதலில் ஆதிநபி ஆதம் அவர்களின் மகன்களில் விவசாயி காபீல் மோசமான உணவு பொருளைக் குர்பானியாக வைத்தார். மற்றொரு மகன் ஹாபீல் கால்நடைகளை உடையவர். ஆடுகளைக் குர்பானியாக வைத்தார். இறையச்சமுடைய ஹாபீலின் குர்பானி ஏற்கப்பட்டது. இறை கட்டளையை மீறிய காபீலின் குர்பானி ஏற்கப்படவில்லை. இதனையே இறையச்சம் உடையவர்களின் குர்பானியைத்தான் இறைவன் ஏற்கிறான் என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 5-27 ஆவது வசனம். இதன்பின் ஒவ்வொரு வகுப்பினருக்கும் குர்பானி கடமையாக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது 22-34 ஆவது வசனம்.
 தனக்கு மிஞ்சியதைக் கொடுப்பது தானம். தனக்கு உரியதைக் கொடுப்பது தயாளம். தன்னையே கொடுப்பது தியாகம். தன் மகன் இஸ்மாயிலை இறைவன் கட்டளைக்குப் பணிந்து இப்ராஹீம் நபி துணிந்து பலியிட முனைந்ததை அணிந்துரைக்கிறது அருமறை குர்ஆனின் 37-105 ஆவது வசனம்.
 என் தொழுகையும் என் பலி (குர்பானி)யும் என் வாழ்வும் இறப்பும் அனைத்தையும் ஆளும் அல்லாஹ்விற்கே உரியவை என்ற 6-162 ஆவது வசனப்படி இன்றும் பக்ரீத்தில் கொடுக்கப்படும் குர்பானியும் இப்ராஹீம் நபி அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவும் திண்ணமான உறுதியுடனும் இருக்க வேண்டும். இதைத்தான் நீங்கள் கொடுக்கும் குர்பானியின் மாமிசமோ ரத்தமோ இறைவனிடம் செல்வதில்லை. உங்கள் உள்ளத்தில் உள்ள இறையச்சமே இறைவனை அடைகிறது என்று 22-37 ஆவது வசனம் அறிவிக்கிறது. அதனால்தான் அல்லாஹ் இஸ்மாயில் நபிக்குப் பதிலாக ஒரு கொழுத்த பருத்த ஆட்டை இறக்கி வைத்ததை இயம்புகிறது 37- 107 ஆவது வசனம்.
 இந்நிகழ்ச்சியை உன் இன மக்களைப் பல்கி பெருக்கி உலகின் பல பாகங்களிலும் பரவ செய்து உன் வழி மரபு உங்களுக்கு ஆசி கூறுவர் என்று பலி பீடத்தில் (குர்பானி கொடுத்த இடத்தில்) அசரீரி ஒலித்ததாக யூதநூல் தோரா குறிப்பிடுகிறது.
 குர்பானி இப்ராஹீம் நபியின் வழி என்று வள்ளல் நபி (ஸல்) அவர்கள் விளக்கியதை விளம்புகிறார் ஜைது பின் அர்கம் (ரலி) நூல்- இப்னு மாஜா. குர்பானி கறியை மூன்று பங்கிட்டு ஒரு பங்கை ஏழைகளுக்கும் ஒரு பங்கை உறவினர்களுக்கும் கொடுத்து குர்பானி கொடுத்தவர் ஒரு பங்கை எடுத்து பயன்படுத்தலாம். எனினும் முழு குர்பானியையும் ஏழைகளுக்கு வழங்குவது ஏற்றம்.
 தியாகத் திருநாளில் விழாவின் விழுமியத்தை விளங்கி இல்லாதோரின் இல்லாமையை இல்லாமல் ஆக்க தயாள மனத்தோடு தாரளமாய் ஏராளமாய் ஏழைகளுக்குத் தானம் வழங்கி தியாகம் புரிந்து சகோதரத்துவம் பேணும் சமத்துவ சமுதாயம் உருவாக உறுதி பூணுவோம். இறுதி நாளின் அதிபதியாம் இறைவனின் அருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com