பகைமையை மன்னிப்போம்!

மாற்கு 11:25-இல் நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை
பகைமையை மன்னிப்போம்!

மாற்கு 11:25-இல் நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள் என்று இயேசு கூறினார்.
 பகைமை உணர்வு தேவையில்லாதது. பகைமை உணர்வுடன் நடந்து கொள்வதால் எதையும் சாதித்துவிட முடியாது. இந்த பகைமை உணர்வு மிகுந்த தீங்கானது. நாம் யார் மீது பகைமை உணர்வு கொண்டிருக்கிறோமோ, அவர்களால் நமக்கோ, நம்மால் அவர்களுக்கோ தீய செயல்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டிருக்கும், என கொள்ள வேண்டும். அப்படி எப்போதும் பகைமை பாராட்டுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கும், மனவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.
 பகைவனை அழிக்க வேண்டுமென்றால், பகைமையை அழிக்க வேண்டும். அதற்கு மிக முக்கியமான ஒன்றுதான் மன்னிப்பு. இந்த மன்னிக்கும் மனம் நம்மில் காணப்படும்போது நம் உடலும் உள்ளமும் நலமுடன் காணப்படும்.
 ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் நீதிபோதனை பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, மாணவர்களிடம் ""யார் மீதேனும் மன்னிக்க முடியாத கோபம் இருக்கிறதா உங்களுக்கு? யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
 வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் "ஆமாம்.. அய்யா' என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து "மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள்.
 மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரிடமும் ஒரு பையை கொடுத்தார், யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துகொள்ளுங்கள் என கூறினார்.
 "இந்தத் தக்காளி பையை எப்போதும் உங்கள் கூடவே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்கவேண்டும்' என கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள்.
 இரண்டு மூன்று நாள்கள் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில் ஆசிரியரிடம் சென்று, இந்த நாற்றமான பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர். "நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்' என்றார் ஆசிரியர்! அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.
 அப்போதே தக்காளி பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள், பகை மறந்து ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு வகுப்பறைக்கு திரும்பினர்.
 எப்போதும் தீய சிந்தனைகள், அதன் எண்ணங்கள், அதை செயலாக்கும் திட்டங்கள், செயலாக்கம் என நம் வாழ்வில் பெரும் பகுதியை செலவிடுகின்றோம். நம் எண்ணங்கள் இவ்வாறு பகைமை பாராட்டுவதால், நமக்கு ஏற்படும் இழப்புகள் பற்றி சிந்திப்பது இல்லை. பகைமை பாராட்டுவதில் முனைப்புகாட்டி, நம் சந்தோஷத்தை இழக்கிறோம்.
 நீதிமொழிகள் 19:11-இல் "மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.'' என்று சொல்லப்பட்டுள்ளதுபோல, நாமும் பிறருடைய பகைமையை, குற்றங்களை மன்னிப்போம் நலமுடன் வாழ்வோம்.
 - ஒய்.டேவிட் ராஜா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com