என்ன தவம் செய்தனை யசோதா?

பகவான் கிருஷ்ணனை தேவகியின் மைந்தன் என்று சொல்வதிலோ, அல்லது வசுதேவன் புத்திரன் என்று சொல்வதிலோ அல்லது நந்தகோபன் குமாரன் என்று சொல்வதிலோ இல்லாத புளகாங்கிதம்
என்ன தவம் செய்தனை யசோதா?

பகவான் கிருஷ்ணனை தேவகியின் மைந்தன் என்று சொல்வதிலோ, அல்லது வசுதேவன் புத்திரன் என்று சொல்வதிலோ அல்லது நந்தகோபன் குமாரன் என்று சொல்வதிலோ இல்லாத புளகாங்கிதம் அவனை "யசோதை பாலன்' என்று அழைப்பதில் பக்தர்களுக்கு ஏற்படுமாம். கர்ப்பம் தரிக்காமலேயே கண்ணனுக்கு பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் பாக்கியம் பெற்றவள் அல்லவா யசோதை? பாலகிருஷ்ண லீலைகளை அணுஅணுவாக அனுபவித்தவள் யசோதை. அகில உலகையும் கட்டியாளும் அந்த பரமாத்மாவை உரலில் கட்டிப்போட்ட உத்தமி அவள். சனகாதி முனிவர்களும், தேவாதி தேவர்களும் தங்களுக்கு யசோதையின் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறார்களாம். யசோதைக்கு கிடைத்த பாக்கியம், கர்ப்பவாசம் தரித்து கிருஷ்ணனை பெற்று எடுத்த தாய் தேவகிக்கும் கிடைக்கவில்லை. அதனால் அவள் மிகவும் குறைப்பட்டுக் கொண்டாளாம். அதனை குலசேகர ஆழ்வார், தனது "ஆலை நீள் கரும்பு' என்னும் பாசுரத்தில் கண்ணனது பிள்ளைச் செயல்களைக் காணப் பெறாத "தேவகியின் புலம்பல்' என்ற தலைப்பில் அழகாக சித்தரித்துள்ளார்.
குருவாயூரப்பன் சந்நிதியில் "ஸ்ரீமந் நாராயணீயம்' காவியத்தை இயற்றிய நாராயண பட்டத்ரி, அதில் "யசோதை அண்டம் முழுவதும் உள்ள அனைத்துப் புண்ணிய சீலர்களையும் வென்றுவிட்டாள்! என்னே வியப்பு!' என்று வியந்து கூறுகிறார். "ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்' என்பது ஆண்டாள் நாச்சியாரின் வாக்கு. ஸ்ரீ நாராயண தீர்த்தர் தனது கிருஷ்ண லீலாதரங்கிணி பாடல்களிலும், ஸ்ரீ ஜயதேவர் தனது கீத கோவிந்தத்திலும் இன்னும் பல அருளாளர்களும் தங்களது இசைக் காவியத்திலும் பாடி பரவசம் அடைந்துள்ளார்கள். முத்தாய்ப்பாக, சுமார் 350 வருடங்களுக்கு முன் அவதரித்த ஊத்துக்காடு வேங்கடகவி என்ற மகான் தான் கிருஷ்ண தரிசனம் பெற்றதோடு மட்டுமில்லாமல் அவர் இயற்றிய தமிழ் பாடல்களின் (கீர்த்தனைகள்) மூலம் நம்மையும் அந்த ஆனந்த அனுபவநிலைக்கு இட்டுச்செல்கின்றார். அதில் ஒன்றுதான். "என்ன தவம் செய்தனை யசோதா? எங்கும் நிறை பரபிரும்மம், "அம்மா' என்றழைக்க..." என்று தொடங்கும் பாடல், இன்றளவும் பாடப்படும் எளிய தமிழ் பாடல்.
இத்தனை பாக்கியம் யசோதைக்கு எதனால் ஏற்பட்டது? சுகப்பிரம்ம ரிஷி பரீட்சித் மகாராஜாவுக்கு கூறுவதாக அமைந்த புராண வரலாற்றின்படி அஷ்ட வசுக்களில் சிறந்தவரான துரோணரும் அவரது மனைவியுமான தராவும் வம்சவிருத்தி நிமிர்த்தமாக பிரம்மனிடம் ஒரு வித்தியாசமான வரம் ஒன்றை வேண்டிப் பெற்றனர். அதாவது, "பிரபஞ்சத்தில் மீண்டும் பிறக்கும்போது உன்னதமான பிரபுவாகிய புருஷோத்தமன் தனது வசீகரமான குழந்தையுருவில் எங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும். எங்களுடன் பகவான் நிகழ்த்தும் பால்ய லீலைகளைக் கேட்ட மாத்திரத்தில் எல்லோரும் பிறவிக்கடலைக் கடக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக ஆக வேண்டும்! என்றனராம். பிரம்மன் இந்த வரத்தை அளித்ததால் பிருந்தாவனத்தில் துரோணர் நந்த மகா ராஜாவாகவும், தரா அவரது மனைவி யசோதையாகவும் தோன்றினார்கள் என்கின்றது. (ஆதாரம்: இஸ்கானின் வெளியீடான "கிருஷ்ணா')
தனது அவதார நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு பகவான் கண்ணன் தனது வளர்ப்பு தாய், தந்தையரிடம் விடை பெற்று தன் அண்ணன் பலராமனுடன் துவாரகைக்கு ஏகினான். கம்ச வதத்திற்குப் பிறகு துவாரகை மன்னனாக முடி சூட்டும் வைபவத்தின் போது, குழுமியிருந்த பொதுமக்களின் பக்கம் பகவான் கிருஷ்ணன் தன் பார்வையை செலுத்திய வண்ணம் இருந்தார். அருகிலிருந்த பலராமர், குலகுரு, முதலியோர்கள் ஏதும் புரியாமல் தவித்தனர். பார்வையாளர்கள் மத்தியில் சரியாக சீவப்படாத தலையுடனும் பழைய புடவையை அணிந்து கொண்டு மிகவும் எளிமையாகத் தென்பட்ட பெண்மணியை தனது அருகில் வரும்படி செய்தார் கிருஷ்ணர். பிறகு சபையோர்களைப் பார்த்து தன்னை வளர்த்து ஆளாக்கிய அன்னை யசோதையே அந்த பெண்மணியென்றும் அவள் கையால் மகுடம் வாங்கித் தரிப்பதே தனக்கு பெருமை என்றும் கூறி அவ்வாறே செயல்பட்டார்.
கண்ணனின் இந்த செய்கைக்கு கூடியிருந்தோர் ஆர்பரித்து ஆராவாரம் செய்தனர். அதோடுமட்டுமில்லாமல் யசோதையை பார்த்து "யாதுவரம் வேண்டும்?' என கிருஷ்ணர் கேட்க, யசோதையும், "கண்ணா, இனி நான் எத்தனை பிறவி எடுத்தாலும் உனது தாயாக அதுவும் வளர்ப்புத் தாயாகும் பேற்றினை அருள வேண்டும்! என வேண்டினாள். பகவானும் அவ்வாறே ஆகட்டும் என்று வரமளித்தார். அவ்வரத்தினால் யசோதை தன் அடுத்த பிறவியில் வகுளாதேவியாகப் பிறந்து கலியுக தெய்வமாம் வேங்கடரமணன் என்கின்ற ஸ்ரீநிவாஸனுக்கே வளர்ப்புத் தாயாகும் வாய்ப்பைப் பெற்றாள். என்னே யசோதை யின் பெருமை!
எதிர்வரும் செப்டம்பர் 2 , 3 -ஆம் தேதிகளில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மகோத்சவம் நடைபெறுகின்றது.
- எஸ்.வெங்கட்ராமன்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com