மாணவரின் மதிப்புயர் மரியாதை

இந்தியாவில் பேராசிரியராய் பணியில் அமர்ந்து பல மாணவர்களைப் பல துறைகளிலும் பளிச்சிட செய்து இந்திய அயலுறவு துறையில் தூதராக தூய பணி புரிந்து
மாணவரின் மதிப்புயர் மரியாதை

இந்தியாவில் பேராசிரியராய் பணியில் அமர்ந்து பல மாணவர்களைப் பல துறைகளிலும் பளிச்சிட செய்து இந்திய அயலுறவு துறையில் தூதராக தூய பணி புரிந்து இந்திய குடியரசு தலைவராய் கோலோச்சிய தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர்- 5, ஆசிரியர் நாள்.
 ஆணவம் அழித்து மானமோடு வாழ கல்வி தானம் தரும் ஆசிரியர்களுடன் மாணவரின் மதிப்புயர் மரியாதையான உறவுக்கு ஈடான உறவு இவ்வுலகில் வேறெதுவும் இல்லை. ஞாலம் ஞாயிறிலிருந்து ஒளி பெறுவதுபோல மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து அறிவொளி பெற்று அறியாமை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து ஒளிவிட்டு பிரகாசிக்கின்றனர். விழி திறந்த ஆசிரியர்களை அழியாத அருந்தொண்டால் பழியறு பணியாற்றி ஒரு தலைமுறையை பாங்குற வாழ்ந்து ஓங்கு புகழ் பெற்று அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகளாகவும் விளங்க செய்கின்றனர்.
 ஒரு நாட்டில் ஒழுக்கம் ஓம்பும் ஒப்பற்ற சமுதாயம் உருவாக அடித்தளம் அமைப்பவர்கள் ஆசிரியர்கள். அப்படி அமையும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உறுதுணை புரிபவர்களும் ஆசிரியர்களே.
 உலக மக்களுக்கு உண்மையை கற்பிப்பவராகவே அனுப்பப் பட்டதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக கூறுகிறார் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்- தாரமி. "கற்ற கல்வியை மற்றவர்களுக்குக் கற்று கொடுப்பவர் மறுமை நாளில் மன்னரரைப் போன்று வருவார்'' என்ற மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியைப் பகர்கிறார்- அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்- பைஹகீ.
 "உபகாரத்திற்குப் பகரம் உபகாரமே'' என்ற 55- 60 ஆவது குர்ஆன் வசனப்படி ஆசிரியர்களை மதித்து மரியாதை செய்து அவர்களுக்கு உரிய உதவிகளை வாழ்நாள் முழுவதும் வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் செய்ய வேண்டும். சட்டமேதை ஷாபி இமாம் அவர்கள் ஐயமகற்றும் விளக்கம் கூறுகையில் எங்கள் ஆசிரியர் மாலிக் இமாம் அவர்கள் கூறினார்கள் என்று மரியாதையுடன் ஆசிரியரைப் பெருமை படுத்துவார்கள்.
 ஆசிரியர்கள் பள்ளியில் கல்லூரியில் பல்கலைக் கழகத்தில் தரும் பாட பயிற்சிகளைப் பயிற்றுவித்தபடி முயற்சியோடு முடிப்பது ஆசிரியர் மாணவர் உறவைப் பலப்படுத்துவதோடு பயன்மிக்கதாகவும் அமையும்; நயனுடைய நன்மக்களாக மாணவர்களை மாற்றும். " பணிவுடனும் பணிவிடையுடனும் கல்வியைத் தேடியவர் வென்றவரே'' என்று ஷாபி இமாம் இயம்பியது இக்பால் பி அல்மாயிர் ரி ஜால் என்ற நூலில் உள்ளது.
 உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்து பிற்றை நிலை பிறழாது கற்ற நிகழ்ச்சி. அப்பாஸிய கலீபா ஹாரூண் ரஷீது அவரின் ஒரு மகனை அஸ்மயீ என்ற பெரியாரிடம் குருகுல முறையில் கல்வி கற்க அனுப்பினார். ஒருமுறை மன்னர் மகனைப் பார்க்க சென்றார். அப்போது ஆசிரியர் ஒலு (தொழுகைக்காக கைகால் முகம் கழுவி சுத்தம்) செய்ய அரசரின் மகன் நீரூற்றினார். ஆசிரியர் அவரின் கால்களைக் கழுவினார். மன்னரோ அவரின் மகனின் ஒரு கையால் நீரூற்றி மறுகையால் ஆசிரியரின் காலைக் கழுவிவிட ஏவும்படி வேண்டினார். நூல் - தஃலீமுல் முத அல்லிம். மாணவர்கள் தவறான சொல்லால் செயலால் ஆசிரியர்களின் உள்ளங்களைப் புண்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வது பண்புடையதல்ல. பண்புடன் ஆசிரியர்களிடம் நடந்துகொண்டால் ஆசிரியர்களும் மாணவர்களிடம் அன்பும் அக்கறையும் இரக்கமும் காட்டி இன்முகத்துடன் மாணவர்கள் பன்முகத்தன்மை உடையவர்களாக உன்னத பல்கலையும் பயிற்றுவிப்பர்.
 மாணவர்கள் கல்வி பெற ஆறு அம்சங்கள் தேவை என்று அலி (ரலி) கூறுகிறார்கள். (1) புத்திக்கூர்மை (2) கற்கும் ஆவல் (3) பொறுமை (தேவையான பணம் (5) காலம். இந்த ஐந்து அம்சங்கள் உள்ள மாணவர்களுக்கே ஆறாவது அம்சமாகிய நேர்வழியைக் காட்டி நெறிபடுத்த ஆசிரியர்களால் முடியும். நூல்- தஃலீமுல் முத அல்லா. ஆசிரியர் சொல்லிலும் செயலிலும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்கால்த்தில் எண்ணி ஏற்று நடக்கும் நுண்ணிய திண்ணிய நடைமுறையாக இருக்க வேண்டும்.
 ஏழ்மையில் உள்ள மாணவர்களுக்கு உரிய கல்வியைக் கற்பித்து வாழ்க்கையில் உயர உதவுவது ஆசிரியர்களின் உத்தம பணி. அப்படி உயர்ந்த மாணவர்கள் ஆசிரியர்களை வாழும் காலவமெல்லாம் வாழ்வளித்த வள்ளல்களாக நன்றி செலுத்துவதை நினைவு கூர்வதைக் காண்கிறோம்.
 இமாம் அபூஹனிபா ஏழை மாணவர் அபூ யூசுபிற்குப் பொருளுதவி புரிந்து கல்வி கற்பித்தார்கள். அம்மாணவர் சட்ட வல்லுநராகி அப்பாஸிய பேரரசில் மஹதி, ஹாதி, ஹாரூன் ரஷீது ஆகிய மூன்று கலீபாக்களின் ஆட்சியில் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். நூல்- முகத்தி மத்துல் ஹிதாயா.
 மாணவர் ஆசிரியருக்கு இடையே நல்லிணக்க நல்லுறவு தொடர்வது கால விரையமின்றி கல்வி கற்று ஞாலம் போற்றிட வாழ வழி வகுக்கும்.
 - மு.ஆ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com