சிவராத்திரி சிறப்பு சொன்ன கோயில்! 

மஹாவிஷ்ணு தாம் பெற்ற சாபத்தை இத்தலத்து இறைவனை வணங்கி நீங்கினார். படைப்புத்தொழிலை இழந்த பிரம்மன் தீர்த்தமொன்று ஏற்படுத்தி இத்தலத்து ஈசனை வழிபட்டு படைப்புத் தொழிலை மீண்டும் பெற்றான்.
சிவராத்திரி சிறப்பு சொன்ன கோயில்! 

மஹாவிஷ்ணு தாம் பெற்ற சாபத்தை இத்தலத்து இறைவனை வணங்கி நீங்கினார். படைப்புத்தொழிலை இழந்த பிரம்மன் தீர்த்தமொன்று ஏற்படுத்தி இத்தலத்து ஈசனை வழிபட்டு படைப்புத் தொழிலை மீண்டும் பெற்றான். தேவர்கள் மட்டுமின்றி விதிவசத்தால் கண்ணிழந்த ஓர் அந்தணனும் கண்பார்வை பெற்ற தலம் என இவ்வாலய பெருமைகளை தலவரலாறு கூறுகிறது.
 தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருவைகாவூர் கொள்ளிடத்திற்கும் காவிரிக்குமிடையே கொள்ளிடத்தின் தென்கரையில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலம். மேலும் மஹா சிவராத்திரித் தலம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
 திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருவைகாவூர் ஆகிய திருத்தலங்கள் மஹாசிவராத்திரி தலங்களாக போற்றப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டென்றாலும் திருவைகாவூர் சிவராத்திரியில் உபவாசம் இருந்து சிவனைத் தொழுததால் கண்ணெதிரே பலனுண்டு எனக்காட்டிய வரலாற்றுத்தலம் ஆகும்.
 வில்வவனமாயிருந்த இக்கோயிலுக்குள் தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், வேடன் ஒருவன் காட்டிலிருந்த மான் ஒன்றை துரத்திகொண்டு வந்தான். அது வில்வவனமாயிருந்த இக்கோயிலுக்குள் நுழைந்து முனிவரின்காலடியில் வீழ்ந்தது. முனிவர் அதற்கு பாதுகாப்பளிக்க வேண்டியது அவசியமாயிற்று. வேடன் அதனைத் துரத்திவிடச் சொல்லியும் முனிவர் கேட்காததால் கோபமடைந்தான். முனிவரைத் தாக்கத் தயாரானான்.
 சிவபெருமான் புலி வடிவெடுத்தார். வேடனைத் துரத்தினார். வேடன் பயந்து வில்வவனத்திற்குள் ஓடினான். அங்கு அடர்ந்து பரந்திருந்த ஒரு வில்வமரத்திலேறிக் கொண்டான். புலியும் மரத்தடியிலேயே இருந்தது. வேடன் கீழிறங்க பயந்து வேறு வழியின்றி மரத்திலேயே அமர்ந்திருந்தான். பசியும் பயமும் அவனை வாட்டின. இரவும் வந்தது. களைப்பு மிகுந்து உறக்கம் வருமோ? என அஞ்சி வில்வ இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவை புலியின் மேல் விழுந்து கொண்டிருந்தன. அன்று மஹாசிவராத்திரி தினம். அந்த வேடன் காலையிலிருந்தே உணவு எதுவும் உண்ணவில்லை. உறக்கமின்றி புலியாயிருந்த சிவபெருமான் மீது அவன் அறியாமல் வில்வத்தைக் கிள்ளிப் போட்டுக் கொண்டிருந்ததால் சிவனை வழிபட்ட புண்ணியமும் மோட்சமும் வேடனுக்குக் கிடைத்தது.
 அன்று அதிகாலையில் அவ்வேடன் ஆயுள் முடிவதாக இருந்தது. ஆதலால் தர்மராஜனான யமன் அவன் உயிரைக் கவர்ந்துச்செல்ல கோயிலுக்குள் நுழைந்தான். நந்திதேவரோ, அவன் வினையை செய்ய உள்ளே செல்கிறான் என நினைத்து, அவனைத் தடுக்கவும் இல்லை, பொருட்படுத்தவுமில்லை. தன் எதிரில் தன் அடியாரின் உயிரைக் கவர வந்த யமனைக் கண்டு வெகுண்டார் சிவபெருமான். யமனுக்குப் பாடம் புகட்ட நினைத்து தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றினார். கையில் கோலேந்தி யமனை விரட்டினார். யமன் தவறுணர்ந்து தப்பித்து ஓடினான்.
 சிவபெருமான் யமனைக் கோயிலினுள் அனுமதித்த நந்தி தேவர்மீது கோபம் கொண்டார். நந்திதேவர் இறைவனை நேரில் பார்க்க அஞ்சி பயந்து, வாயில் நோக்கித் திரும்பி யமனைத் தன்சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தினார். பின்னர் சிவபெருமானின்கட்டளைப்படி யமன் விடுவிக்கப்பட்டான். ஆலயத்தில் திருக்குளம் அமைத்து நீராடி, இறைவனை வழிபட்டு தன் பாவம் தீர்ந்தான் யமதர்மராஜன்.
 இதன் காரணமாகவே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல் இல்லாமல் இத்திருக்கோயிலில் நந்திதேவர் வாயிலை நோக்கி திரும்பி இருக்கிறார்.
 "வில்வாரண்ய சேத்ர மாஹாத்மியம்" என்ற நூல் இத்தலத்தின் சிறப்பைச் சொல்லுகிறது. சுயம்பு லிங்கமாக ஸ்ரீ வில்வாரண்யேச்வரர் சந்நிதியும் திருக்கோயிலும் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ளன. எதிரில் யம தீர்த்தம் உள்ளது.
 பிரகாரத்தில் ஆறுமுகப்பெருமான், வரப்பிரசாதியான வளைக்கை நாயகி அம்பாள், சண்டிகேசுவரர், நடராஜப் பெருமான், ஸப்தலிங்கங்கள், விஷ்ணு, பிரம்மா, கோலேந்திய தட்சிணாமூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர் .
 இவ்வாலாய கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபங்களை கற்றளியாக மாற்றித் திருப்பணி செய்தவன், கி.பி.11 ஆம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனாவான்.
 இந்தக் கோயிலில் மற்ற நாள்கள் போலல்லாமல் ஆண்டுக்கு ஒரு முறை மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மஹா சிவராத்திரியன்று பெரும் கூட்டம் திரளும். சிவராத்திரியன்று 4 கால பூஜையும் வேடனுக்கு மும்மூர்த்திகள் காட்சி தரும் மஹாசிவராத்திரி விழாவும் நடைபெறும்.
 இவ்வாண்டு, 13.02.2018 - மஹாசிவராத்திரி ஆகும். அன்றிரவு நான்கு கால பூஜையும்; வேடனுக்கு மும்மூர்த்திகள் காட்சியளித்த நிகழ்வும் நடைபெறும். 14.02.2018 - அன்று காலை 7.00 மணிக்கு திருவீதியுலாவும்; 15.02.2018 - அமாவாசை அன்று மதியம் 12.00 மணிக்கு யம தீர்த்தத்தில் தீர்த்தவாரியும்; இரவு 7.00 மணிக்கு தேவார பண்ணிசையுடன் ஓலைச்சப்பரத்தில் வீதியுலாக் காட்சி, வாண வேடிக்கையுடன் அதிவிமரிசையாக நடைபெறும். இந்நாள்களில் யம தீர்த்தத்தில் நீராடினால் ஆயுள் விருத்தியாகும் என்பர்.
 தொடர்புக்கு: 0437221095 / 75982 21095.
 - ஆர். ஜனனி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com