நல்லிணக்கம் நபி வழி 

வேற்றுமை பாராட்டாத வேறுபாடுகளில் கூறுபடாத ஒற்றுமையே சமூக நல்லிணக்கத்தின் அடிப்படை. அந்த அடித்தளத்தில் அமைந்த நல்லிணக்கமே வளர்ச்சிக்கு வழிவகுத்து நாட்டு முன்னேற்றத்திற்கும் உதவும்.
நல்லிணக்கம் நபி வழி 

வேற்றுமை பாராட்டாத வேறுபாடுகளில் கூறுபடாத ஒற்றுமையே சமூக நல்லிணக்கத்தின் அடிப்படை. அந்த அடித்தளத்தில் அமைந்த நல்லிணக்கமே வளர்ச்சிக்கு வழிவகுத்து நாட்டு முன்னேற்றத்திற்கும் உதவும். நாடு நலமும் வளமும் பெற்று வலுவோடு விளங்கும்; வல்லரசும் ஆகும்.
 வள்ளல் நபி (ஸல்) அவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தினார்கள். நபி பட்டம் பெறுவதற்கு முன்னரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அரபி சமூகங்களுக்கு இடையே நிலவிய கருத்து மோதல்களையும் மோதல்களினால் உண்டான விளைவுகளையும் பிளவின் விளைவாய் தோன்றிய பகையையும் நீக்கி போக்கி அமைதியை ஏற்படுத்தினார்கள் சுற்றுபுற ஒற்றுமையால் சூழலைச் சுகமானதாக ஆக்கினார்கள்.
 புனித கஃபாவை புனரமைத்து கட்டி ஹஜருல் அஸ்வத் கல்லைக் கஃபாவில் பதிக்கும் வாய்ப்பைத் தங்களுக்கே தர வேண்டும் என்று ஒவ்வொரு குல பிரிவினரின் தலைவர்களும் உரிமை கோரி மோதல் உண்டாக இருந்தது. காலையில் முதலில் கஃபாவிற்கு வந்த இளைஞர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஒற்றுமையை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை உருவாக்க உத்தம நபி (ஸல்) அவர்கள் ஒரு துணியில் ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்து அனைவரும் அத்ததுணியைப் பிடித்து கஃபாவில் கல்லைப் பதித்து ஒற்றுமையின் வெற்றியை அந்த அரபியர்களுக்கு புரிய வைத்தார்கள்.
 நபித்துவம் பெற்று இறைதூதை எடுத்துறைத்து ஏக இறை கொள்கையை ஏற்றவர்களுக்கு இடையில் அவர்கள் எக்குலம் எப்பிரிவினர் ஆயினும் அனைவரும் ஏற்ற தாழ்வற்ற ஒரே சமுதாயம் ஆக ஒன்றுபட்டு வாழ வழி வகுத்தார்கள். மதீனாவிற்குச் சென்ற பின்னும் மக்கா மதீனா வாசிகளை ஒன்றுபட்டு வாழ செய்தார்கள். அவர்களுக்கு இடையில் திருமண உறவுகளும் உண்டாயின. " நீங்கள் அனைவரும் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும் ஒரே வகுப்பினரே. உங்கள் அனைவருக்கும் இறைவன் ஒருவனே. அவனையே வணங்குங்கள்'' என்று கூறும் குர்ஆனின் 21-92 ஆவது வசனப்படி ஒருவனே இறைவன் என்ற ஒரே கொள்கையைத்தான் ஆதி நபி ஆதம் முதல் இறுதி நபி முஹம்மது (ஸல்) வரை அனைவரும் போதித்த கொள்கை ஒற்றுமையை வலியுறுத்தி நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதே.
 பிரிய நபி (ஸல்) அவர்கள் பிரிவினைக்குரிய காரணிகளைக் கண்டு களைந்தார்கள். கருத்து மோதல்கள் பிணக்குகள் ஏற்பட்டால் அதனை நீக்கும் வழியறிந்து நீக்கி அவர்களை ஒர் நேர்கோட்டில் கொள்கையில் ஒன்றிணைந்தார்கள். வேறுபட்டால் உங்கள் உள்ளங்களும் ஊறுபடும் என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை முஸ்லிம் நூல்களில் காணலாம்.
 அல்லாஹ்வும் உங்கள் மார்க்கத்தைப் பிரித்து பிளவுபடுத்துவோர் உங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்ததே அருமறை குர்ஆனின் 6-159ஆவது வசனம், ""சொர்க்கத்தின் நடுவில் இருக்க விழைவோர் சமுதாயத்தோடு சேர்ந்து வாழ வேண்டும்'' என்ற நபிமொழியை திர்மிதீ நூலில் காணலாம். ஒற்றுமை ஒரு சமுதாயத்தின் நேரான, சீரான, சிறப்பான, அமைதியான, நிம்மதியான வாழ்விற்கு அடிப்படை. சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையை இலக்காக கொண்டு இயங்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாசத்தோடும் நேசத்தோடும் உதவி செய்து கொண்டு விட்டு கொடுத்து வாழ வேண்டும்.
 அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றி பிடித்து கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விட வேண்டாம். விரோதிகளான உங்கள் இதயங்களில் அன்பையும் பிணைப்பையும் உண்டாக்கினான் என்ற 3-103 ஆவது வசனம் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் பகைவர்களாக இருந்தவர்கள் இப்பொழுது இணக்கமாக இருப்பதை இயம்புகிறது. மீண்டும் 8-46 ஆவது வசனம், " அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள், பிணங்காதீர்கள். பிணக்கம் துணிவை இழந்து துன்பப்பட வைக்கும்'' என்று பிணங்கி பிரிவதன் பேராபத்தை எச்சரிக்கிறது.
 சிறுவர்களிடம் இரக்கம் காட்டவும் பெரியவர்களுக்கு உரிய உரிமையை வழங்கி சிறப்பு செய்ய செம்மல் நபி (ஸல்) அவர்கள் செப்பியதை ஒப்புவிக்கிறார் அம்ரு பின் ஸýஜப் (ரலி) நூல்- அபூதாவூத், திர்மிதீ. மக்களுடன் கலந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும். பிறருக்குத் தீங்கு இழைக்க கூடாது. பிறரால் துன்பம் ஏற்பட்டால் பொறுமை காக்க வேண்டும் என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் நல்லிணக்க காரணிகளைக் கவினுற மொழிகிறார் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்- அஹ்மது, திர்மிதீ.
 நன்மையில் ஒருவருக்கொருவர் உதவுவதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். பணிவு நல்லிணக்கத்தை உருவாக்கும் என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை இயாழ் பின் ஹிமார் (ரலி) இயம்புவது முஸ்லிம் நூலில் உள்ளது. அநாதைகளிடம் கடுமையாக பேசக் கூடாது; யாசிப்பவரை விரட்டக்கூடாது என்று விளக்கமாக கூறுகிறது விழுமிய குர்ஆனின் 93-9,10 ஆவது வசனங்கள்.
 இறை நம்பிக்கை உடையோர் சகோதரர்கள். அவர்களுக்கு மத்தியில் சமரசம் செய்யுங்கள் என்ற 49-10 ஆவது வசனம் இறை விசுவாசிகள் சகோதரரர்கள். அவர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டால் இரு பிரிவினரையும் சேராத பொது மனிதர் சமரசம் செய்து வைக்க இவ்வசனம் இயம்ப அடுத்த 49-11 ஆவது வசனம் சண்டை ஏற்படும் காரணங்களைக் கூறி அக்காரணங்களைத் தவிர்க்க,
 அறிவுறுத்துகிறது. ஒரு கூட்டத்தினர் மற்றொரு கூட்டத்தினரைப் பரிகசிக்க வேண்டாம். பரிகசிக்கப்படுவோர் மேலானவர்களாக இருக்கலாம். பெண்கள் பெண்களைப் பரிகசிக்க கூடாது. உங்களுக்கு இடையே பழித்துரைக்காதீர்கள். புனைப் பெயர்களால் அழைக்காதீர்கள்.
 அரபு நாட்டில் வாழ்ந்த பனீதமீம் கிளையினர் அவர்களை உயர்வாகவும் மற்றவர்களை மட்டமாகவும் மதிப்பவர். அவர்கள் பிலால் (ரலி), ஸல்மான் (ரலி), அம்மார் (ரலி), கப்பாப் (ரலி), ஸýஹைப் (ரலி) முதலில் ஏழைத் தோழர்களை ஏளனமாக எண்ணி நகையாடுவர். அறிவிப்பவர் - முஹாத்தில் (ரலி) நூல்- ரூஹுல் பயான், மாநபி (ஸல்) அவர்களின் மனைவியரில் அன்னை உம்மு ஸல்மா (ரலி) குள்ளமானவர். மற்ற மனைவியர் அவர்களைக் குட்டைப் பெண் என்று கேலி செய்வர். இத்தகைய கேலி கிண்டல்களைக் கூறுவது கூடாது என்று கூறுகிறது மேற்குறிப்பிட்ட வசனம்.
 அடுத்த 49-12 ஆவது வசனம் புறம் பேசுவதும் கூடாது என்று கூறுகிறது. புறம் பேசுவது ஒற்றுமையை குலைக்கும். ஒற்றுமை குலைந்தால் வேற்றுமை பெருகும். நல்லிணக்கம் நலிவுறும். நாடும் வலிவும் பொலிவும் இழக்கும். ஓரணியில் திரள்வது ஒற்றுமையாக இருப்பது ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்து நபி வழியில் நல்லிணக்கத்தோடு நல்லவாழ்வு வாழ்வோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com