பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் 

புண்ணியவான்கள் வசம் இருக்கும் பொருள் போல, இறைவன் அனைவருக்கும் பயன் தருபவன். இறைவன் பொய்யர் உள்ளத்தில் ஒருபோதும் பொருந்தாதவன்.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் 

* புண்ணியவான்கள் வசம் இருக்கும் பொருள் போல, இறைவன் அனைவருக்கும் பயன் தருபவன். இறைவன் பொய்யர் உள்ளத்தில் ஒருபோதும் பொருந்தாதவன்.
- வடலூர் வள்ளலார்

* இறைவனுடைய பெருமையைப் புகழாமல் பிறருடைய பெருமைகளை அலங்காரமாகப் பேசுபவர்கள், தூய பசும்பால் அருந்துவதை விட்டுவிட்டு நாய்ப்பாலை அருந்துபவர்களுக்கு நிகர் ஆவர்.

* குற்றம் இல்லாத உள்ளம் எது எதை விரும்புகிறதோ, அதை எல்லாம் அளிப்பவன் அருட்பெரும்ஜோதி ஆண்டவன்.

* இந்த உடலை வளர்க்கும் பொருட்டு, இறைவனை மறந்து வாழ்வது இன்பம் தராது. இறைவனை நினைத்து நினைத்து நெஞ்சம் குழைய வேண்டும். அப்போதுதான் நற்கதி கிட்டும்.
- வள்ளலார்

* கேவலம் உபநிஷத் வாக்கியங்களை அத்தியயனம் செய்வதால் உண்டாகும் அர்த்த ஞானம் எல்லோருக்கும் கிடைக்கக்கூடும். அவர்கள் எல்லோரும் பரவித்தையை அறிந்தவர்களாக மாட்டார்கள். வேதத்தினாலும் குரு உபாசனையாலும் வைராக்கியத்தாலும் உண்டாகிற பிரம்மசாட்சாத்காரமே பரவித்தையாகும்.

* மனிதன் பூமியில் மறுபிறப்பை அடைவதற்கு இரண்டு வித்துக்களே காரணங்களாக இருக்கின்றன. முதலாவது துக்கம்; இரண்டாவது மன அந்தகாரம். இவை இரண்டும் அகங்காரம் காரணமாகவே ஏற்படுகின்றன. அகங்காரத்திற்கு ஞானம் இல்லாததுதான் காரணம்.
- ஆதிசங்கரர்

* சுகத்திலோ துக்கத்திலோ, விருப்பிலோ வெறுப்பிலோ, நம்மைப் போலவே எல்லா ஜீவன்களையும் கருத வேண்டும். எனவே நமக்கு இழைக்கப்படும்போது விரும்பத்தகாததாகத் தோன்றக்கூடிய துன்பங்கள் எதையும், மற்றவர்களுக்கு நாம் செய்யாமல் இருக்க வேண்டும்.
- யோக சாஸ்திரம்

* சாதுக்களின் தொடர்பால் பற்றின்மை ஏற்படும். பற்றின்மையால் மோகம் (மதிமயக்கம்) நீங்கும். மோகம் நீங்கினால் உறுதியான தத்துவஞானம் உண்டாகும். தத்துவஞானத்தால் ஜீவன்முக்தி நிலை வருகிறது. 
- பஜகோவிந்தம்

* மனிதப்பிறவி, முக்தியைப் பெற வேண்டும் என்ற ஆவல், மகா புருஷர்களை நாடி அடைதல் ஆகிய இந்த மூன்றும் அடைதற்கு அரியவைகள். இவை தெய்வத்தின் கிருபையால் மட்டுமே அடைய முடியும். 
- விவேகசூடாமணி

* நாரதர் வியாசருக்குத் தமது சுயசரிதையைக் கூறும்போது, முந்திய கல்பத்தில் சாதுக்களுக்குப் பணிவிடை செய்ததையும், அதன் காரணமாக அவர்களுடைய கிருபைக்குப் பாத்திரமாகி அடுத்த பிறவியில் தேவரிஷியானதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

* சமநோக்கு உள்ளவர்கள், சாந்தமானவர்கள், கோபம் அற்றவர்கள், அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்கள், நல்ல ஒழுக்கம் உடையவர்கள் ஆகிய இவர்கள்தான் மகான்கள் ஆவார்கள். மகான்களுக்குச் செய்யும் தொண்டு மோட்சத்திற்கு வாயில் என்றும், பெண்களுடன் கூட்டுறவு கொண்டவர்களின் தொடர்பு அக்ஞான வாயில் என்றும் கூறுவர். 
- பாகவதம்

* மூடனுடைய பாவம் அவனிடமே பிறந்தது, அவனே படைத்தது. வைரம் மற்ற மணிகளை அறுப்பது போல, அவன் செய்த பாவமே அவனை அழித்துவிடும்.
- புத்தர்

* மன்னிப்பு எனது தாய், திருப்தி என்னுடைய தந்தை. உண்மை எனது மாமன், அன்பு என்னுடைய தம்பி, பிரியம் எனது அம்மான் குழந்தை, பொறுமை என்னுடைய மகள். இவர்களே எனது உறவினர்கள். சாந்தி என்னைவிட்டுப் பிரியாத தோழி, புத்தி என்னுடைய வேலைக்காரி! இவர்களே எனது குடும்பத்தினரும் துணைவருமாக இருக்கிறார்கள். உலகம் முழுவதையும் படைத்த ஒருவனாகிய இறைவன் எனது நாயகன். அவனைக் கைவிடுபவன் பிறப்பிறப்புச் சுழலில் அகப்பட்டுப் பலவகைகளிலும் துன்பப்படுவான்.

* இறைவனின் நாமத்தை ஜபம் செய்து வா. இறைவனின் மீது அன்பு செலுத்து. ஒரு தெய்வத்தையே உறுதியாகப் பற்றியிரு. மக்களுக்குத் தொண்டு செய்து வா. இறைவனே எல்லாமுமாக இருக்கிறார். அவரையே எப்போதும் புகழ வேண்டும். அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவரோடு இரண்டறக் கலந்து இன்புற வேண்டும்.
- குருநானக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com