வரதராஜனுக்கு வரவேற்பு!

மக்கள் மன மகிழ்ச்சியுடன் நீர் நிலைகளுக்குச்சென்று அங்கு இறைவனை வழிபட்டு மன நிறைவு கொள்ளும் விழாவே "தெப்பத்திருவிழா' வாக அமைகிறது.
வரதராஜனுக்கு வரவேற்பு!

மக்கள் மன மகிழ்ச்சியுடன் நீர் நிலைகளுக்குச்சென்று அங்கு இறைவனை வழிபட்டு மன நிறைவு கொள்ளும் விழாவே "தெப்பத்திருவிழா' வாக அமைகிறது.
 காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி, வரலாற்றுச்சிறப்பும் ஆன்மிகச்சிறப்பும் உடைய ஊராகத் திகழ்கிறது. இவ்வூரின் கிழக்குப் பகுதியில் நீர் நிறைந்து அழகாகக் காட்சி அளிக்கும் பெரிய ஏரி ஒன்று உள்ளது. சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த ஏரியினால் பயன் அடைகின்றன. சங்க காலத்தில் திரையன் என்ற மன்னனால் ஏற்படுத்தப்பட்ட ஏரி என்பதால் "திரையனேரி' என அழைக்கப்பட்டு, பின்னாளில் "தென்னேரி' என்று அழைக்கப்பட்டது.
 தென்னேரி கிராமத்தில் கந்தளீசுவரர், ஆபத்சகாயேசுவரர் என இரண்டு சிவாலயங்களும் கல்யாண வெங்கடேசப் பெருமாள் (விஜய நாராயணப்பெருமாள்) கோயிலும் உள்ளன. இக்கோயில்களில் காணும் கல்வெட்டுகளில் இவ்வூர், "உத்தமச் சோழ சதுர்வேதி மங்கலம்' எனவும், "திரையனூர் ஆன குலோத்துங்கசோழ சதுர்வேதிமங்கலம்'. தென்னேரி ஆன குலோத்துங்கசோழச் சதுர்வேதிமங்கலம் எனவும் பெயரிட்டு அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது. உத்தம சோழனின் தாயாரான செம்பியன் மாதேவியால் எடுக்கப்பட்ட அழகிய கோயில்கள் இவை. இவ்வூரில் உள்ள ஏரி, இம்மடி குமார தாத்தாச்சாரியரால் சீரமைக்கப்பட்டு மதகுகள் கட்டி "தாதசமுத்திரம்' எனப் பெயரிடப்பட்டதையும் அறிய முடிகிறது. இவ்வேரி இன்று சமுத்திரம் போலத்தான் பெரியதாகக் காட்சி அளிக்கிறது.
 தென்னேரி கிராமத்திற்கு கிழக்கே சுமார் அரை கி. மீ. தொலைவில் "தென்னேரி அகரம்' என்ற பகுதி உள்ளது. இவ்வூரில் மேற்கு நோக்கி மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயிலாக விளங்கினாலும் வழிபாடு சிறப்புடையது. இங்கு காணப்படும் கருடபகவானின் திருவுருவம் வணங்கிய கோலத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளின் பார்வைக்கு நேராக அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.
 கொடிமரத்தை அடுத்து முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை அமைந்துள்ளது. கருவறையில் ஸ்ரீநிவாசப்பெருமாள் இரண்டு அடுக்கு தாமரை மலர் போன்ற பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் அழகே அழகு! சக்கரம், சங்கு ஏந்திய திருக்கரங்களுடன் புன்னகைத் தவழும் திருமுகத்துடன் வழிபட வரும் அன்பர்களின் துன்பங்களைப் போக்கும் அற்புத வடிவம்! ஆழ்வார்கள், ஆசார்யர்கள் திருமேனிகள் மேலும் சந்நிதிக்கு அழகு சேர்க்கின்றன. திருச்சுற்றில் வடகிழக்கு மூலையில் உள்ள மடப்பள்ளி காஞ்சி வரதராஜப்பெருமாள் தெப்பத்திருவிழாவிற்காக இக்கோயிலுக்கு வரும்பொழுது பயன்படுத்துவார்கள். தென்கிழக்குப் பகுதியில் உள்ள மடப்பள்ளி இக்கோயிலுக்கானது.
 தெற்குத் திருச்சுற்றில் அலர்மேல்மங்கை தாயார் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதிக்கு முன்னர் உள்ள நான்கு கால் மண்டபத்தில் ராமர், லட்சுமணர், சீதை, நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், தும்பிக்கை ஆழ்வார், துவாரபாலகர்கள் போன்ற அழகிய புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன.
 இதனை அடுத்து, வடக்கு நோக்கி காஞ்சி தேவராஜ சுவாமி என்னும் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது. "கண்ணாய் ஏழுலகுக்கு உயிராய் எங்கார்வண்ணனை' என்று திருமங்கையாழ்வார் போற்றுவது போல அழகே உருவாக கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். இச்சந்நிதி அருகே சிறிய திருவடி "வீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன்அருள்புரிகிறார், இக்கோயிலில் (04.02.2018 - 07.02.18 ) பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தென்னேரி கிராமத்திற்கு காஞ்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள் தெப்பத் திருவிழாவிற்காக எழுந்தருளும் வைபவம் சிறப்பாக நடைபெறும்.
 தாதசமுத்திரம் என்ற பெரிய ஏரியில் தெப்பத்திருவிழா நடைபெறும்.
 தென்னேரி கிராமத்திற்கு எழுந்தருளும் காஞ்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள், தென்னேரி, அயிமச்சேரி, நாவட்டிகுளம், திருவங்கரணை, குண்ணவாக்கம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று சேவை சாதித்து தென்னேரி அகரம் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை தெப்ப உற்சவத்திற்கு தென்னேரி தாதசமுத்திரம் ஏரிக்கு எழுந்தருளுகிறார். திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் அகரம் கோயிலுக்கு எழுந்தருளி, காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளும் வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது.
 இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இத்திருவிழாவினை பெரிய உற்சவமாக சிறப்பாக நடத்துகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இத்திருவிழாவினைக் கண்டு பெருமாளை வழிபட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களைத் தேடி காஞ்சியிலிருந்து வரும் வரதராஜருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். இத்திருவிழா தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
 தென்னேரி அகரம் ஸ்ரீநிவாசப்பெருமாள், பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறார். திருமணத் தடை, குடும்ப பிரச்னைகளை இப்பெருமாள் நீக்குகிறார். முதலியாண்டான் சுவாமி சீடர்கள் இக்கோயிலின்மீது ஈடுபாடு கொண்டு வழிபாட்டினைச் சிறப்பாக செய்துகொண்டு வருகின்றனர். ஆலய வளர்ச்சிக்கும் வழிபாடு தொடர்ந்து நல்லமுறையில் நடைபெறவும் திருமால் அடியார்கள் பொருளுதவி செய்து பெருமாளின் பேரருளைப் பெறலாம்.
 தென்னேரி தாதசமுத்திரம் ஏரியில் நடைபெறும் தெப்பத்திருவிழா, மாசிமாதம் சுக்லபட்ச தசமி நாளில் 25.02.2018 - அன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
 சென்னையிலிருந்து தாம்பரம் வழியாக, படப்பை, ஓரகடம், வாரணவாசி வழியாக தென்னேரியை சென்றடையலாம். மேலும் சென்னை-ஸ்ரீபெரும்புதூர் வழியாக, சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் வழியாகவும் தென்னேரிக்கு சென்று வரலாம்.
 தொடர்புக்கு : 99418 67700 / 98402 24752.
 - கி. ஸ்ரீதரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com