திருவள்ளூரில் ஒரு திருக்குளம்!

அமாவாசைத் திதியிலேயே தலைசிறந்த அமாவாசை திதி எதுவென்றால் அது "தை' அமாவாசை திதி தான். காரணம் உத்திராயணத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் இதற்குத் தனிச்சிறப்பு உண்டு. 
திருவள்ளூரில் ஒரு திருக்குளம்!

அமாவாசைத் திதியிலேயே தலைசிறந்த அமாவாசை திதி எதுவென்றால் அது "தை' அமாவாசை திதி தான். காரணம் உத்திராயணத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் இதற்குத் தனிச்சிறப்பு உண்டு. 
" பித்ருக்கள்' என்று அழைக்கப்படும் நமது மூதாதையர்கள் " தை அமாவாசை' நாளன்று, தங்களுடைய சந்ததியினர் தங்களுக்குத் தர்ப்பணம் விட்டு வயிற்றுப் பசியைப் போக்குவார்கள் என்று கருதி புனித நதிக்கரையோரம், புனிதமான நீர் நிறைந்த குளக்கரைகள் அலைபாயும் கடற்கரை போன்ற இடங்களில் வந்து காத்திருப்பார்கள்.
அப்போது நாம் நமது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் விட்டு தானதர்மங்கள் அன்னதானம் போன்றவற்றைச் செய்தால் நமது மூதாதையர்கள் நம்மை ஆசீர்வதித்துவிட்டு போவார்கள். 
அந்த ஆசீர்வாதமே நம்மை நம் வாழ்க்கையில் துன்பங்களின்றி துயரங்கள் இன்றி மேம்படுத்தி வாழவைக்கும். 
இந்த அற்புதமான தர்ப்பணம், தானதருமம், அன்னதானம் போன்றவற்றை "தை' அமாவாசையிலே செய்து நற்பேறு பெற சிறந்த இடம் திருவள்ளூரில் உள்ள "ஹ்ருத்தபாபநாசினி' திருக்குளமாகும்! திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தைச் சேர்ந்த இக்குளம் அகன்று விரிந்து காணப்படுகிறது.
ஒரு சமயம், மஹாவிஷ்ணுவின் பக்தன் ஒருவன் இக்குளக்கரையில் மிகுந்த ஆவேசத்தோடு ஸ்ரீமந்நாராயணனை நோக்கித் தவமிருந்தான். 
அவன் தவத்தை மெச்சிய ஸ்ரீமந்நாராயணன், அவன் எதிரில் தோன்றி அருள்தந்தார். 
பக்தியுடன் நாராயணனை வணங்கிய பக்தன், தை அமாவாசைத் திருநாளில் இந்த "ஹ்ருத்த பாபநாசினி' குளக்கரையில் தோன்றி காட்சி அளித்ததால் இது மிகவும் மகிமைமிக்க புண்ணிய தீர்த்தமாக விளங்கும் என்பதால் தை அமாவாசை அன்று இந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தவர்கள் சகல பாபங்களையும் போக்கிக் கொள்வார்கள்.
மேலும் பித்ருக்களின் சாபங்கள் நீங்க அருள்புரியும் படியாகவும் வேண்டினான். இது திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே, தை அமாவாசை அன்று நீராடி, பித்ரு காரியங்கள் செய்ய திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் ஆலயத்திலுள்ள ஹ்ருத்த பாபாநாசினி திருக்குளம் மிகவும் சிறந்தது. 
தை அமாவாசையன்று பின்னிரவு 2.00 மணி முதலே பக்தர்கள் இத்திருக்குளத்தில் மூழ்கி எழுந்து அவரவர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். 
தட்சனை வதம் செய்ததால் பரமேஸ்வரனை" பிரம்மஹத்தி' தோஷம் பற்றிக் கொண்டது. பரமேஸ்வரனும் இத்திருக்குளத்தில் மூழ்கி எழுந்து தம் தோஷத்தைப் போக்கிக் கொண்டார். 
ஒருசமயம், வடலூர் ஸ்ரீ ராமலிங்க அடிகளார் "குருப்பஞ்சகம்' என்ற ஐந்து பாடல்களை தை அமாவாசையன்று இக்குளத்தில் நீராடிவிட்டுப் பாடினார். அவர் பாடி முடித்ததும் அவருக்கு நீண்ட நாள்களாக இருந்து வந்த வயிற்று வலி நோய் தீர்ந்து போனது. 
பிறவியிலேயே வாய் பேசமுடியாத ஒருவர் ஒவ்வொரு அமாவாசையும் இக்குளத்தில் நீராடி பெருமாளை தொழுது வந்தார். ஒரு தை அமாவாசையன்று இக்குளத்தில் மூழ்கி எழுந்தபோது பேசும் ஆற்றல் கிடைக்கப்பெற்றார் என்கிறார்கள். 
இக்குளத்தின் கரையில் ஸ்ரீ கனகவல்லித்தாயார் சமேத அருள்மிகு வீரராகவப்பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளி அருள்புரிகின்றார். 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் ரயில்நிலையம் சென்று அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயிலை அடையலாம். 
தொடர்புக்கு: 044 2766 0378.
- ராமசுப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com