முனீஸ்வரன்- ஏழு நாடுகளின் சாமி!

தஞ்சாவூரை மராத்தியர்கள் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கிய போது ஆன்மீகத்திற்கும் கலை மற்றும் கட்டடக் கலைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
முனீஸ்வரன்- ஏழு நாடுகளின் சாமி!

தஞ்சாவூரை மராத்தியர்கள் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கிய போது ஆன்மீகத்திற்கும் கலை மற்றும் கட்டடக் கலைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அப்படி, தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னரான துளஜா மகாராஜாவும் திருவிடைமருதூரில் மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கு தினசரி ஐந்து கால பூஜைகளும், வருடாந்திர திருவிழாக்களும் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்று கருதி திருவிடைமருதூர் தாலுகாவில் இறைத்தொண்டு செய்வதற்கு என ஏழு கட்டளைகளை, ஏழு ஊர்களை தானமாக கொடுத்தார்கள்.
 இன்றைக்கும் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 10 கி. மீ. தொலைவில் "முதல் கட்டளை' என்கிற கிராமம் இருப்பதை பார்க்க முடியும். இந்த முதல் கட்டளை கிராமம் தான் ஏழு கட்டளைகளுக்கும் தலைக்கட்டளை. துர்க்கையம்மன் பெயரால் வழங்கப்படும் "அம்மன்குடி' என்ற ஊர் "ஏழாம் கட்டளை'. இந்த ஏழு கட்டளைகளிலும் விளையக்கூடிய விளைச்சலைக் கொண்டு திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வர கோயிலின் திருவிழாக்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று துளஜா மகாராஜா உத்தரவிட்டார்.
 ஆனால் ஒரு முறை முதல் கட்டளை முதல் ஏழாம் கட்டளை வரை உள்ள 7 கிராமங்களின் நெல் வயல்களில் விளைவிக்கப்படும் நெற்பயிர்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்து கருகி விடுவதும், வெள்ளம் வந்து அழிந்து போவதுமாக இருந்தது. ஏழு கட்டளை கிராம மிராசுதாரர்களுக்கு பெரும் துயரத்தை தந்தது. மழையோ, புயலோ இல்லாத போது விலங்கு கூட்டங்களால் பயிர்கள் அழிந்து போயின. உடனே 7 கிராம முக்கியஸ்தர்கள் திரண்டு போய் துளஜா மகாராஜாவை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
 ஏழு கிராமங்களின் அழிவுக்கு இந்த ஏழு கிராமங்களின் காவல் தெய்வமாக முதல் கட்டளையில் இருக்கும் முனீஸ்வர சாமிக்கு கிராம மக்கள் விழா எடுக்காததும், வழிபாடு செய்யாததுமே காரணம் என்று அரண்மனை ஜோதிடர்கள் மூலம் அறிந்து கொண்ட மகாராஜா தன் தவறை உணர்ந்தார்.
 கிராம மக்களை அழைத்து ஆண்டு தோறும் ஏழு கட்டளைகளின் காவல் தெய்வமான முனீஸ்வர பெருமானுக்கு விழா நடத்தவும் வழிபாடு செய்யவும் உத்தரவிட்டார்.
 அதன்படி, அன்று முதல் இன்று வரை இந்த ஏழு கிராம மக்களும் ஆண்டு தோறும் விழா எடுத்து வழிபட்டு வருகின்றனர்.
 முதல் கட்டளையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆலமரத்தின் கீழ் இருக்கிறார் முனீஸ்வரர். இன்றைக்கும் இரவு நேரங்களில் தீப்பந்தம் ஏந்திச் சென்று ஏழு கட்டளைகளையும் முனீஸ்வரன் பார்வையிட்டு காவல் காப்பதாக இவ்வூர் மக்கள் நம்புகின்றனர்.
 கும்பகோணத்திலிருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் திருநாகேஸ்வரத்திற்கு அருகில் முதல் கட்டளை கிராமம் உள்ளது.
 முனீஸ்வரனுக்கு புதிதாக கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு நல்லருள் பெறலாம்.
 தொடர்புக்கு: 94870 31796 / 73391 92633 . - ஆதலையூர் சூரியகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com