எருக்க இலையுடன் அருக்கன் வழிபாடு! 

உலகில் எத்தனையோ தெய்வ உருவங்கள் இருந்தாலும் ஞாயிறு என்று போற்றப்பெறும் சூரியனே கண் கண்ட தெய்வம். ஆம்! தெய்வமாக போற்றப்படும் தெய்வங்களில் சூரியன் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகிறார்
எருக்க இலையுடன் அருக்கன் வழிபாடு! 

உலகில் எத்தனையோ தெய்வ உருவங்கள் இருந்தாலும் ஞாயிறு என்று போற்றப்பெறும் சூரியனே கண் கண்ட தெய்வம். ஆம்! தெய்வமாக போற்றப்படும் தெய்வங்களில் சூரியன் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகிறார். அவர் மிகவும் உஷ்ணமுள்ளவராக இருந்தாலும் மிக்க இரக்க குணமுள்ளவர். கேட்டதைக் கொடுக்கும் தன்னுடைய "ஸ்யமந்தகம்' என்னும் மணியைத் தனது பக்தரான சத்ராஜித்துக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார். சூரியஒளியே உலகில் எல்லா உயிரினங்களும் இயங்க காரணமாக இருக்கிறது. செடி கொடிகளின் உணவே சூரிய வெளிச்சம்தான். சூரியன் இல்லாவிட்டால் உலகமே இல்லை எனலாம். ஒரு காலத்தில் மகான்கள், சூரிய ஒளியைப் பார்க்காவிட்டால், அன்றைய தினம் சாப்பிடவே மாட்டார்கள். பெருமை பெற்ற சூரியனைப் போற்றும் நாள்தான் ரதசப்தமி. இவ்வருடம், ஜனவரி 24 ஆம் நாள் இத்திருநாள் கொண்டாடப் படுகிறது.
 உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி. ஒருமுறை காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு மெதுவாக அன்னம் பரிமாறிக்கொண்டிருந்தாள். அந்தவேளையில் ஓர் அந்தணர் வந்து தனக்குப் பசிப்பதாகவும் உடனே உணவு வேண்டுமென்று கேட்க, கணவருக்குரிய பணிவிடைகளைச் செய்து விட்டு, அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள். இதனால் மிகவும் கோபம் கொண்ட அந்த அந்தணர், உடனே கவனிக்கவேண்டுமென்ற தர்மத்தை புறக்கணித்த, அதிதியின் கர்ப்பம் கலையட்டுமென்று சபித்துவிட்டார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி தன் கணவரிடம் அதனைக் கூற, காஷ்யப முனிவர், அதிதிக்கு என்றைக்கும் அழிவில்லாத மகன் நமக்கு பிறப்பான் என்று ஆறுதல் கூறினார். அதன்படியே ஒளி பொருந்திய புத்திரன் ஒருவன் தை மாதம் சுக்லபட்ச சப்தமி அன்று அவர்களுக்குப் பிறந்தான். அவனே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலகை உலா வரும் சூரியன்.

ரத சப்தமி அன்று எருக்கன் இலையை வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்யவேண்டுமென்று புராணங்கள் கூறுகின்றன. நினைத்த நேரத்தில் உயிர்துறக்கலாம் என்று வரம் பெற்றிருந்த பீஷ்மர் குருஷேத்திரத்தில் அம்புப்படுக்கையில் உத்திராயண புண்ணிய காலத்திற்காகக் காத்திருந்த போது அங்கு வந்த வியாசரிடம் எந்த பாவமும் செய்யாத தான் எதனால் துன்பத்தை அனுபவிக்கிறேன் என்பதை தெரிவிக்க வேண்டுமென்று கேட்க, அவர் பீஷ்மர் துரியோதனன் அவையில் பாஞ்சாலி மானபங்கப்படுத்தப்பட்டபோது அதைத் தடுக்காமல் வாளாவிருந்த பாவத்தைச் சுட்டிக்காட்டி, பாவம் செய்யாவிட்டாலும், பாவம் நடக்கும்போது அதனைத் தடுக்காததும் பாவமே என்றும், அந்த ஒரு பாவமே அவருக்கு இருப்பதாகவும் கூற, அந்த பாவத்தைத் தடுக்காத தன் புத்தி, கண்கள், தோள்கள், கால்கள் ஆகியவைகளை சூரியனைக் கொண்டு எரித்துவிடுமாறு கூறினார் பீஷ்மர். சூரியன் எப்படி எரிப்பார்? எருக்கம் என்பதற்கு வடமொழியில் அர்க்கம் என்று பெயர்.

அர்க்கம் என்றால் சூரியன் என்றும் பொருள்படும். அதனால் புத்தியால் பாவத்தைத் தடுக்காமல் இருந்ததற்காக, தலையில் ஓர் எருக்கு, அதனைப் பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்கு இரண்டு, கைகளால் தடுக்காமல் இருந்ததற்காக இரண்டு தோள்களுக்கு இரண்டு, ஓடிச் சென்று பாவத்தைத் தடுக்காமல் இருந்த இருகால்களுக்கு இரண்டு என பீஷ்மர் உடலில் எருக்க இலையை வைக்கச் சொன்னார் வியாசர். அம்புப் படுக்கையில் கிடந்த அவர் மீது ஆதவனின் கிரணங்கள் பட அந்த பாபமும் நீங்கினார் என்கிறது புராணம். அந்த நாள்தான் ரதசப்தமி.

இதன் பொருட்டே அறிந்தோ, அறியாமலோ, செய்யும் பாபம் தீர எருக்க இலைகளை வைத்து ரதசப்தமி அன்று சூரிய பகவானை மனிதில் தியானித்துக் கொண்டு ஸ்நானம் செய்வது வழக்கத்திற்கு வந்தது. மறுநாள் அஷ்டமி அன்று மேலுலகேகினார் பீஷ்மர்.

நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்த பீஷ்மருக்கு யார் பித்ருக் கடன் செய்வது என்று கேள்வி எழுந்தபோது, வியாசர் நைஷ்டிக பிரம்மச்சாரிக்கும், உண்மையான துறவிக்கும் பித்ருக் கடன் என்பது அவசியமே இல்லாமல் அவர்கள் உயர்நிலைக்குப் போய்விடுகிறார்கள். அவ்வாறு பீஷ்மர் சென்றாலும் சத்யவிரதரான பீஷ்மருக்கு பாரத தேசமே நீர்க்கடன் அளிக்கும். ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக் கொண்டு,

 "ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
 ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
 ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸý ஜன்மஸý
 தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நௌமி ஸப்தமி !
 தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
 மம பாபம் வ்யபோஹய !'

 - என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்நானம் செய்து பாவங்களைப் போக்கிக் கொண்ட மக்கள், அடுத்த நாள் அஷ்டமி திதியன்று பீஷ்மருக்கு நீர்க்கடன் அளிப்பர் என்றார். அதனால் இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்காகவும், முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால் அவர்களுடைய ஆசியால் சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

சூரிய தோஷம் நீங்கவும் சூரியனின் அருள் பெறவும் சூரிய பகவானுக்கு ரத சப்தமியன்று அபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சித்து வழிபடுதல் நலம். பொதுவாக, சூரியன் உதிக்கும் சமயத்தில் குளித்து முடித்து, தனது அன்றாட கடமைகளை செய்ய தொடங்கு பவரிடம் செல்வம் சேரும் என்பது சாஸ்திரம். ரத சப்தமி எனப்படும் "சூரிய ஜெயந்தி' அன்று எருக்க இலை ஸ்நானம் செய்து பாவங்கள் நீங்கப்பெற்று, அருக்கனின் அருளைப் பெறுவோம்.

 - ரஞ்னா பாலசுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com