காளி காத்த சுயம்புங்கம்!

காவிரி ஆறு பிரிந்து கிளையாறுகளாக விரியும் பல ஆறுகளில் ஒன்று பசும்புலியாறு. இவ்வாற்றின் இடப்புறமாக வடக்கில் சுமார் 4 கி.மீ. தொலைவில் பிரம்மரிஷி வசிஷ்டர் ஆசிரமம் அமைந்திருந்தது.
காளி காத்த சுயம்புங்கம்!

காவிரி ஆறு பிரிந்து கிளையாறுகளாக விரியும் பல ஆறுகளில் ஒன்று பசும்புலியாறு. இவ்வாற்றின் இடப்புறமாக வடக்கில் சுமார் 4 கி.மீ. தொலைவில் பிரம்மரிஷி வசிஷ்டர் ஆசிரமம் அமைந்திருந்தது. ஆற்றின் வலப்புறம் அமைந்திருந்த அகத்தியரின் ஆசிரமத்தில் தொடர்ந்து யாகங்கள் நடைபெறுவது வழக்கம். ஆதலால் யாகசாலைகள் அமைந்திருந்தன. தொடர்ந்த யாகம் நடப்பதால் அப்பகுதி "யக்ஞபுரம்' ஆயிற்று.
தினமும் அகத்தியரின் ஆசிரமத்தில் நிகழும் யாகத்தில் பங்கு பெற பசும்புலி ஆற்றைக் கடந்து வருவார். யக்ஞபுரத்தை ஒட்டிய சிறிய கிராமத்து சிறுவர்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும்போது யாகம் பூஜைகளைக் காண்பார்கள்.
யக்ஞபுரத்து சிறுவன் ஒருவன் தானே சிவ பூஜை செய்து வழிபட விரும்பினான். மறுநாள் மற்ற சிறுவர்களுடன் ஆற்று மணலில் சிவலிங்கம் ஒன்று அமைத்து ஓட்டி வந்த பசுக்களின் பாலைக் கறந்து மணல் லிங்கத்தின் மீது பொழிந்தான்.
மாலை தொழுவத்திற்கு வந்த மாடுகளின் பால் குறைவதைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் சந்தேகம் கொண்டனர். மறுநாள் மாடு செல்லும்போது சிறுவனின் தந்தையும் பின் தொடர்ந்தார். மகன் மணல் லிங்கத்திற்கு பசும் பால் கறந்து அபிஷேகம் செய்வதைக் கண்டார். சினம் தலைக்கேற செய்வதுணராமல் ஆற்று மணல் லிங்கத்தைச் சிதைக்க வியர்த்து பேச்சு மூச்சற்று கீழே விழுந்தார்.
சிதைந்த சிவலிங்கத்திலிருந்து குருதி வழிந்தது. அப்போது பத்திர காளி அங்கு தோன்றி திருநடனம் செய்து இருகைகளாலும் சிதைந்த சிவலிங்கத்தை விரல் நுனி முதல் முழங்கை வரை உள்ள பகுதியால் இரண்டு கரங்களாலும் சேர்த்து கரைந்து போகாமல் அணைத்துச் சேர்த்தாள். அன்று தை வெள்ளிக்கிழமை. உருளை வடிவில் இருந்த மணல் சிவலிங்கம் சேர்த்து அணைத்த இரு கரங்களுக்கிடையே நீள் செவ்வக வடிவாய் இறுகியது.
வழியில் வந்த வஷிஷ்டரும் இக்காணக் கிடைக்காத காட்சியைக் கண்டு வணங்கினார். உடனே சிவனும் அம்மையும் ஒன்றாகி அம்மையப்பராக வசிஷ்டருக்கு நடனக் கோலத்தில் அருள்காட்சி நல்கினர்.
மணல் லிங்கம் செய்த மகனும் அம்மையப்பரைக் கண்டு மனதார வேண்டி ஒருவரம் வேண்டும் எனக் கேட்டு, இவ்விடத்தில் எனக்காக சிவலிங்க வடிவில் காட்சிதந்த நீங்கள் எங்கும் இல்லாதத் திருவுருவில் இங்கு காட்சி தருவதால் தொடர்ந்து இதே கோலத்தில் இவ்வுருவில் இருந்து இங்கு வந்து வணங்குவோருக்கு வேண்டியதை அருளும் வகையில் நிலையாகக் காட்சி தந்தருள வேண்டும் என வேண்டினான். அதனை ஏற்றுக் கொண்டார் சிவபெருமான்.
சிவனோடு காட்சி தந்த உமையம்மை இறைவனுக்குத் துணையாக ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்ற பெயரோடு தனிசந்நிதி கொண்டிருக்கின்றாள். பத்ரகாளி நடனம் செய்து உருவாக்கிய ஈசன் ஆதலால் இக்கோயிலில் பத்ரகாளி அருவமாய் இருப்பதாகவும் தனிசந்நிதியில் உள்ள பத்ரகாளி உற்சவருக்கே அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது. மூலவர் நடேஸ்வரசுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி விமானங்களுடன் இருந்து அருள்புரிகின்றனர்.
மணலால் உருவான மூலவர் சுயம்பு மூர்த்தி நடேஸ்வரசுவாமிக்கு பால் நல்லெண்ணெய் தீர்த்தம் கொண்டு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. சாதாரண நாள்களில் நீள் கன செவ்வக வடிவில் இருக்கும் மூலவரான சுயம்பு மணல் லிங்கத்தின் மீது குவளை ஒன்று பாதுகாப்புக்காக கவிழ்க்கப்பட்டிருக்கும். பூஜை நேரத்தின் போதும் அவசியமான நேரங்களில் மட்டும் குவளை இல்லாத சுயம்புத் திருமேனியை தரிசனம் செய்யலாம்.
இத்திருக்கோயிலுக்கு திங்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி, அமாவாசை, பெüர்ணமி தினங்களில் தரிசனம் செய்வதை புண்ணியமாகக் கருதுகின்றனர்.
இக்கோயிலில் அருவமாய் உள்ள பத்ரகாளியை கெüரவிக்கும் விதமாக தைமாதம் வரும் நான்கு வெள்ளிக் கிழமையிலும் ஸ்ரீபத்ரகாளியம்மனுக்கு காலை10.00 மணியளவில் கலசபூஜை, ஹோமம், மகாஅபிஷேகம் நடைபெறும் . இரவு 8.00 மணியளவில் சிறப்பு புஷ்பஅலங்காரத்துடன் படையல் நடைபெறுவதுடன்அம்பாள் வீதி உலாவும் நடைபெறும்.
மாசி முதல் வெள்ளிகிழமை காலை10.00 மணியளவில் சண்டிஹோமம், மகாஅபிஷேகம், தீபாராதனையுடன் மாலை 6.00 மணியளவில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவமும் நவசக்தி அர்ச்சனை, தீபாராதனையும் நடைபெறும். இவ்வழிபாடுகளில் கலந்து கொள்வோர் தீமைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் பெறுவர்.
இத்திருக்கோயில் கிழக்கில் சிறிய 3 நிலை ராஜ கோபுரமும் தெற்கில் சிறிய நுழைவு வாயிலும் அமைந்துள்ளன . நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புதுச்சேரி அருள்மிகு நடேஸ்வரஸ்வாமி திருக்கோயில். நாகப்பட்டினத்தில் இருந்து சிக்கல் வழியாக வரும் நகரப்பேருந்துகள் இவ்வூருக்குச் செல்கின்றன. சிக்கலிலிருந்து ஆட்டோக்களும் இயங்குகின்றன.
தொடர்புக்கு: தொலைபேசி 86675 19199/ 87781 48807.
- இரா.இரகுநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com