ஆனந்தம் அளிக்கும் ஆலக்கோயிலுடையார்!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டிலிருந்து தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்விளைந்தகளத்தூர் அமைந்துள்ளது
ஆனந்தம் அளிக்கும் ஆலக்கோயிலுடையார்!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டிலிருந்து தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்விளைந்தகளத்தூர் அமைந்துள்ளது. ஒத்திவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது இவ்வூர். பொன்விளைந்தகளத்தூர் செல்வதற்கு சற்று முன்னதாக "திருவானைக்கா' (திருவானைக்கோயில் என்று அழைக்கின்றனர்) என்ற ஊரில் திரிபுரசுந்தரி சமேத வாலீசுவரர் கோயில் சிறப்பாகப் போற்றி வழிபடப் பெறுகிறது.
 திருக்கோயில் கருவறை, முன்(மகா) மண்டபம் என்ற அமைப்புகளுடன் விளங்குகிறது. கருவறையில் இறைவன் லிங்க வடிவிலே எழுந்தருளி அருள்புரிகின்றார். சிறிய வடிவம் தான்! வாலி வழிபட்டதால் வாலீசுவரர் என அழைக்கப்படுகிறார். மகா மண்டபத்தில் 12 தூண்கள் உள்ளன. இதில் தெற்கு நோக்கி அம்பாள் திரிபுரசுந்தரி, அங்குசம் - பாசம் தாங்கியும் அபய - வரத முத்திரை கொண்டும் அருள்பாலிக்கிறாள்.
 கிழக்கு நோக்கிய திருக்கோயில். மகா மண்டபத்தில் கிழக்குப் பக்கம் உள்ள சாளரம் (ஜன்னல்) வழியே இறைவனை தரிசிக்கலாம். சாளரத்தின் குறுக்கு சட்டங்கள் மர வேலைப்பாடு போல நுண்ணிய சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சி அளிக்கிறது. சாளர குறுக்குச் சட்டங்களில் விநாயகர், மகாலட்சுமி, சங்கு ஊதும் சிவகணம், நடனமாடும் பெண் ஆகிய வடிவங்கள் சிறிய சிற்பங்களாகக் காட்சி அளிப்பது வியக்க வைக்கிறது.
 கருவறை செவ்வக வடிவமாக இருந்தாலும், விமானம் கஜபிருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. கருவறை தேவ கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, விஷ்ணுதுர்க்கை ஆகிய இறைவடிவங்கள் வழிபடப் பெறுகின்றன. தேவகோட்டத்தின் மேற் பகுதியில் மகரதோரணம் நடுவே நர்த்தன கணபதி வடிவம் காண்பது சிறப்பானது.
 கருவறையின் அடித்தளப்பகுதியில் குமுத வரிக்கு மேலாக சிவபெருமான் சிறப்பினைப் போற்றும் வகையில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுசிறு சிற்பங்கள் அழகாக காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.
 கல்வெட்டுகள்: இக்கோயிலின் தொன்மை வரலாற்றினை கோயில் சுவரில் காணப்படும் கல்வெட்டுகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், சம்புவராயர்கள், விஜய நகர மன்னர்கள் இக்கோயிலுக்கு பெருந்தொண்டு செய்துள்ளனர் என்பதை கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.
 விக்கிரமசோழன் (கி.பி.1127) காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாகும். "திரு ஆலக்கோயில்", "திரு ஆலக்கோயில் உடையார்" என்றே கல்வெட்டுகளில் இறைவன் குறிப்பிடப்படுகிறார். சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள திருக்கச்சூர் கோயிலும் "ஆலக்கோயில்" என்றே குறிப்பிடப்படுகிறது. இத்தலம் ஆலமரங்கள் நிறைந்த தலமாக விளங்கியிருக்க வேண்டும்.
 இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசு அதிகாரியான அநபாய மூவேந்த வேளாண் என்பவர் கோயிலில் வழிபாடுகள் நடைபெற சில ஊர்களை இணைத்து "குலோத்துங்க சோழன் திருநீற்று சோழ நல்லூர்" என்ற பெயரிலும், "அநபாய நல்லூர்" என்ற பெயர்களிலும் வழங்கியதை அறிய முடிகிறது. இரண்டாம் குலோத்துங்க சோழன் "அநபாயன்', "திருநீற்று சோழன்' என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தான் என்பது இங்கே நினைவுக்கூரத்தக்கது.
 மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1205) காலத்தில் இவ்வூருக்கு அருகில் உள்ள ஆத்தூரைச் சேர்ந்த பெண் ஒருத்தி இக்கோயிலில் விளக்கு எரிக்க நான்கு பசுக்களை அளித்தாள். இத்தர்மத்தினை இக்கோயிலில் இருந்த காளாமுக கோமடத்தைச் சார்ந்த ஞானராசிபண்டிதர், சைலராசி பண்டிதர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சைவ சமயத்தில் ஒரு பிரிவாக விளங்கிய காளாமுக சைவ மடம் இப்பகுதியில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
 சம்புவராய மன்னன் ராச நாராயண சம்புவராயர் காலத்தில் (1342) இக்கோயிலில் வழிபாடு சிறப்பாக நடைபெறவும், விளக்குகள் எரிய 15 பசுக்களும் அளித்தனர். மேலும் கோயிலைச் சுற்றியுள்ள நிலங்கள் அரசுக்கு செலுத்தப்படும் வரிகள் நீக்கியும் அளிக்கப்பட்டது. கோயில் பூஜைக்கும், திருப்பணிக்காகவும் கொடுக்கப்பட்டது என்பதை அறிகிறோம். விஜய நகர மன்னர்கள் காலத்தில் பங்குனி மாதத்தில் சிறப்பு வழிபாட்டிற்கும், திருப்பணிக்கும் தானங்கள் அளிக்கப்பட்டன.
 இத்தகைய சிறப்புவாய்ந்த திருக்கோயிலில் தற்பொழுது திருப்பணி மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கருவறை முன் மண்டபத்திற்கு முன் எழுந்தருளியுள்ள நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருக்கோயில் வாயிலில் நம்பிக்கை விநாயகர், ஜேஷ்டா தேவி எழுந்தருளியுள்ளார்கள். திருக்கோயிலின் குருக்கள் 15 - ஆவது தலைமுறையில் வந்தவராக இறைபணிகளை செய்து வருகிறார். பக்தர்கள் இக்கோயில் திருப்பணியில் ஈடுபட்டு நலம் பெறலாம்.
 தொடர்புக்கு: தயாளன் - 98439 14657.
 - கி. ஸ்ரீதரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com