கோ பத்ம விரதம்!

"கோமாதா!' என்று போற்றப்படும் பசுவை எல்லா நாள்களிலும் வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
கோ பத்ம விரதம்!

"கோமாதா!' என்று போற்றப்படும் பசுவை எல்லா நாள்களிலும் வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதுவும் குறிப்பிட்ட நாள்களில் வரும் "கோமாதா' விரதத்தன்று வழிபட சகல பாக்கியங்களும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழலாம்' என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
கோமாதாவான பசுவிற்காக விரதம் மேற்கொண்டு வழிபடுவதற்கு என்று சில நாள்கள் உள்ளன. அவை, கோவர்த்தனவிரதம், கோபத்ம விரதம். 
அந்த வகையில் "கோ பத்ம விரதம்' இந்த வருடம் ஆனி அமாவாசையை அடுத்த ஏகாதசியில் துவங்குகிறது. இது ஆஷாட பூர்ணிமாவில் முடியும். இது ஐந்து நாள் விரதம். ஐந்து நாள்களும் கோபூஜை செய்து ஒருபொழுது மட்டுமே உணவு உண்டு விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும். ஆஷாட மாதத்து ஏகாதசி நாளில் மட்டும் விரதம் இருந்து பூஜிப்பதுதான் "கோபத்ம விரதம்' எனப்படுகிறது. இந்த வருடம் ஜூலை -23, வளர்பிறை ஏகாதசி ஆகும்.
கோமாதாவான பசு தோன்றியது குறித்து புராணங்கள் பலவாறு கூறுகின்றன. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருபாற்கடலைக் கடையும் பொழுது முதலில் ஆலகால விஷம் தோன்றியது. உலகத்தைக் காக்கும் பொருட்டு ஈசன்அந்த ஆலகால விஷத்தை உண்டார். 
உமையவள் அந்த விஷத்தை சிவனின் கண்டத்தில் கைவைத்து அழுத்தி நிறுத்தினாள். ஆலகால விஷம் தோன்றியபிறகு, பல அரிய பொருள்கள் திருபாற்கடலில் தோன்றின. அதில் ஒன்றுதான் "காமதேனு' காமதேனு பசுவிற்கு மானசீகமாக ஐந்து கன்றுகள் பிறந்தன. அவை, பட்டி, விமலி, சயனி, நந்தினி, கொண்டி ஆகும். 
இருப்பினும், சிவபெருமான் அருளால் நான்கு பசுக்கள் தோன்றியதாகவும் புராணம் கூறுகிறது. அந்த நான்கு பசுக்களையும் நான்கு திசை தெய்வங்களுக்கு அளித்தார். இந்திரனுக்கு சுசிலை என்ற பசுவை அளித்தார். அடுத்து எமனுக்கு கபிலை, வருணனுக்கு ரோகிணி, குபேரனுக்கு காமதேனு பசுவையும் அளித்தார் என்று சிவபுராணம் கூறுகிறது.
சிவ வழிபாட்டில் ஐந்து வகை பசுக்கள் சிறப்பாக சொல்லப்படுகிறது. அவை: நந்தை, சுபத்ரை, சுரபி, சுசிலை, சுமனை என்பன. இவற்றிடமிருந்து கிடைக்கும் பாலால் சிவனை வழிபட தனித்தனி பலன்கள் உண்டு. நந்தை பசு கபில நிறம் உடையது. இதன் அதிதேவதை வாயு. இதன் தயிர் சிறப்பானது. சுபத்ரை கரிய நிறம். இதன் அதிதேவதை விஷ்ணு. இதன் நெய் மிகவும் சிறப்பானது. சுமனை, சிவந்த தாமிர நிறம். வருணன் இதன் அதிதேவதை. இதன் கோஜலம் (மூத்திரம்) சிறப்புடையது. சுசிலை புகை அல்லது பொன்னிறம் கொண்டது. சந்திரன் இதன் அதிதேவதை. இதன் பால் விசேஷம். சுரபி வெள்ளை நிறம் கொண்டது. அக்னி இதன் தேவதை. இதனுடைய சாணம் மிகச் சிறப்புடையது. 
இந்த ஐந்து வகையான பசுக்களிடமிருந்து பெறும் பொருள்களைக் கொண்டு (பால், தயிர், நெய், கோமயம், சாணம்) பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது. பால் அமிர்தத்திற்கு சமமானது. தயிர் பலத்தைத் தரக்கூடியது. மேலும் வாதத்தை குணப்படுத்துவது. நெய் நினைவாற்றலை ஊக்குவிக்கக்கூடியது. உடலில் வலுவையும் வாத, கப ரோகங்களையும் நீக்கி உடலுக்கு அழகினைக் கூட்டும் சக்தி கொண்டது. கோமூத்திரம், வாதபித்த கபத்தை நீக்குவதுடன் வயிற்று நோய் முதலியவைகளை குணப்படுத்தக் கூடியது. 
காமதேனுவின் வாரிசுகளான தேவ அம்சத்தைக் கொண்ட பசுவை குறிப்பிட்ட நாள்களில் விரதம் மேற்கொண்டு வழிபட்டால் முக்கோடி தேவர்களையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன்கள் பெற்று வளமுடன் வாழலாம்.
விரதம் மேற்கொண்டு கோமாதாவை வழிபட இயலாதவர்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு ஒரு கைப்பிடி புல் அல்லது இரண்டு வாழைப்பழங்களை ஆகாரமாகக் கொடுத்து அதன் பின்புறம் தொட்டு வணங்கினாலும் நலம்பல பெறலாம் என்று வேத நூல்கள் கூறுகின்றன.
- டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com