தாகம் தணித்த தயாளன் தயாநிதீஸ்வரர்!

வாலி ராவணனுடன் போரிட்ட சமயத்தில் வால் அறுந்துப் போனது. வாலியின் அறுந்த வால் வளர இறைவன் அருள் செய்த தலம், தஞ்சாவூர் மாவட்டம், வடகுரங்காடு துறையாகும்.
தாகம் தணித்த தயாளன் தயாநிதீஸ்வரர்!

வாலி ராவணனுடன் போரிட்ட சமயத்தில் வால் அறுந்துப் போனது. வாலியின் அறுந்த வால் வளர இறைவன் அருள் செய்த தலம், தஞ்சாவூர் மாவட்டம், வடகுரங்காடு துறையாகும். வாலி இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கித் துதித்ததால் அறுந்த வால் வளர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்காரணமாகவே, இத்தல இறைவனுக்கு "தயாநிதீஸ்வரர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டதாக ஆலயத் தலவரலாறு கூறுகிறது. 
இத்தல இறைவன் சிட்டுக்குருவி ஒன்றிற்கு மோட்சம் அளித்ததால் "சிட்டிலிங்கேஸ்வரர்' என்று அழைக்கப்பெறுகிறார். தயாநிதி என்ற திருநாமத்திற்கு ஏற்ப கருணைக்கடலாக விளங்குகிறார். இறைவியின் திருப்பெயர் "ஜடாமகுடநாயகி' 
ஒரு சமயம், கர்ப்பிணி பெண் ஒருத்தி இவ்வூர் வழியாக வந்தபோது மிகுந்த தாகம் ஏற்பட்டு தவித்தாள். சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. நாவறண்டு தாகத்தால் தவித்த அவள், "தாம் இறந்து விடுவோமோ' என்று அஞ்சியதுடன் இறைவனை நோக்கி மனதார வேண்டித் துதித்தாள். 
தண்ணீருக்காகத் தவித்த அப்பெண்ணின் தாகத்தைப் போக்க எண்ணிய சிவபெருமான், அருகிலிருந்த தென்னை மரத்தை வளைத்து இளநீரை பறித்துக் கொடுத்தார். கர்ப்பிணிக்கு தென்னையை வளைத்து இளநீர் பறித்துத் தந்ததால் "இறைவன், "குலைவணங்கிநாதர்' என்றும் போற்றப்படுகிறார்.
கருவறையில் சிவபெருமான் சுயம்புலிங்கத் திருமேனியுடன் காணப்படுகிறார். காவிரிக்கரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இது 274 -ஆவது தலமாகும். 
இவ்வாலயத்தில் அமைந்து அருளும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியை தரிசித்து வர, குருபலம் பெருகும் என்கின்றனர் பக்தர்கள். மேலும் அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து வழிபடுவது மிகுந்த நன்மையாகும். குறிப்பாக, குழந்தை வரம் வேண்டும் பெண்கள் இத்தல அம்பிக்கை ஜடாமகுடநாயகி அம்மைக்கு மஞ்சள் மாலை சார்த்தி வழிபட்டு வந்தால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஜதீகம்! அதோடு, திருமணம் வேண்டி பிரார்த்திப்பவர்கள் அம்மனுக்கு மஞ்சள் பூசியும் மருதாணி இட்டும் வழிபடுவதோடு, ஆலயத்துக்கு வரும் பெண்களுக்கும் மருதாணி இட்டு வேண்டுதல் செய்தால் விரைவிலேயே நல்ல வாழ்க்கைத் துணையை அடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு திருக்கார்த்திகையின்போது அம்பிகையை 1008 முறை வலம் வருவது விசேஷமான வழிபாடாகும். 
இவ்வாலயத்தில் பங்குனி உத்திர விழா, நவராத்திரி விழா, போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையிலும்; மீண்டும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
ஆலயம் செல்ல: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com