தோஷம் போக்கும் பொழிச்சலூர் சனிபகவான்! 

தோஷம் போக்கும் பொழிச்சலூர் சனிபகவான்! 

ஒருவருக்கு ஜாதகத்தில் சனி தசை நடக்கும் போதும்; ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவை நடக்கும் போதும்

ஒருவருக்கு ஜாதகத்தில் சனி தசை நடக்கும் போதும்; ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவை நடக்கும் போதும் ஏதேனும் ஒரு தொல்லையை அனுபவித்தே தீரவேண்டும் என்பது நிதர்சனமாக உள்ளது. சனீஸ்வரர் என்றாலே ஒரு பயம் வந்துவிடுகிறது. அவரது அருளைப் பெற, எள் விளக்கேற்றுவது காகத்துக்கு சாதம் வைப்பது போன்ற பரிகாரங்களைச் செய்கிறார்கள்.
சென்னை பல்லாவரத்துக்கு அருகில் அமைந்துள்ளது பொழிச்சலூர் அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்தரும் அகத்தீஸ்வரர் ஆலயம்! வடதிருநள்ளாறு என்று அழைக்கப்படும் இத்தலம், தொண்டைமண்டலத்தில் சனிபகவானுக்கான பரிகாரத்தலமாக விளங்குகிறது என்றால் மிகையாகாது. இங்கு எழுந்தருளியுள்ளசனிபகவான், பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் வள்ளலாக விளங்குகிறார்.
ஜாதகத்தில் ஜென்ம சனி, கண்ட சனி போன்ற காலங்கள் வரும்பொழுது சனிபகவான் மக்களை பலவாறு துன்புறுத்தி வந்த காரணத்தால் அவருக்கு ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்ள, இந்த பொழிச்சலூர் திருத்தலத்தில் நள்ளார் என்னும் புனித தீர்த்தத்தை உருவாக்கி சிவபெருமானை வழிபட்டு தமது பாவத்தைப் போக்கிக்கொண்டார் என்கிறது ஆலய வரலாறு!
வடக்கு பார்த்த ராஜ கோபுரம்! இறைவன் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவி ஆனந்தவல்லி தெற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை கஜபிருஷ்ட வடிவில் அமைந்து அதன் பழைமையை பறைசாற்றுகிறது. கருவறை திருச்சுற்றில் சிவாலய விதிப்படி, தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி, விநாயகப் பெருமான் போன்ற மூர்த்திகள் அருள்கின்றனர்.
அன்னை ஆனந்தவல்லி சந்நிதியின் அருகே தெற்கு நோக்கிய காலபைரவரை தரிசிக்கலாம். அடுத்ததாக, சனிபகவான் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் பக்தர்கள் சனிபகவானின் தோஷத்தைப் போக்கும் பொருட்டு சனீஸ்வரருக்கு விரதம் மேற்கொள்ளும் வழக்கமும் இருக்கின்றது.
அஷ்டம சனியின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிலிருந்துவிடுபட, சனிக்கிழமைகளில் பைரவருக்கு கருப்பு ஆடை அணிவித்து, நீலநிற மலர் மாலை, வடைமாலை சாற்றி வழிபடுகின்றனர். மேலும் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி மிளகு முடிச்சு தீபமும் ஏற்றி அர்ச்சிக்கின்றனர். ஏழரை சனியின் பாதிப்பிலிருந்து விடுபட, சனிக்கிழமை ராகு காலத்தில் வெற்றிலை மாலை சாற்றியும்; அர்த்தாஷ்டம சனி பாதிப்புள்ளவர்கள், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டும் நலம் பெறலாம். ராசிக்கு இரண்டில் சனிபகவான் இருக்கும்போது வெண்பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வழிபடவேண்டும் என்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, இவ்வாலயத்திற்கு வருபவர்கள், நாய், மாடு, காக்கைக்கு உணவிட்டு, தங்களது தோஷங்களைப் போக்கிக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அரசும் வேம்பும் இணைந்து காட்சி தருவதாலும் மண்டப பிரகாரத்தின் கூரையில் பாம்பு சின்னங்கள் புடைப்பு வடிவங்ககளாக காணப்படுவதாலும் சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபடுவதால் சர்ப்பத் தோஷங்கள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.
பூர்வ ஜென்மத்தில் மட்டுமல்லாது இந்த ஜென்மத்திலும் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களால் நம் வாழ்கையில் ஏற்படும் திருமணத்தடை, மகப்பேறுயின்மை, உடல் உபாதை நோய்கள், கடன்தொல்லை, வேலையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் நிரந்தரமில்லாத வேலை வாய்ப்பு, கணவன் மனைவி ஒற்றுமையாக இல்லாமல் இருப்பது, குடும்ப பிரச்சனைகளால் ஏற்படும் மனகஷ்டம், நிம்மதியின்மை அனைத்தும் நீங்கிட 36 நாள்களுக்கு இத்தல ஈசனை வழிபட்டு நலம் பெறுகின்றனர். ஜப-ஹோமங்கள், சாந்தி அபிஷேகம், தீபங்கள் ஏற்றுதல், அர்ச்சனைகள் செய்தல், தினமும் 15 நிமிடமாவது தியான நிலையில் அமர்ந்து வழிபடுவதால் மனதிற்குள் மனசாந்தி உண்டாவதை நாமே உணரலாம்.
இவ்வாலயத்தில் சனிதோஷ நிவர்த்தி பரிகார ஹோமம், நவகிரக ஹோமங்கள், பாவவிமோசனம் பரிகாரங்கள், அபிஷேகங்கள், அர்ச்சனைகளும் நடைபெறுகின்றன.
சனிபகவான் காயத்ரீ மந்திரம்
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
தினமும் காலை - 5.45 - நண்பகல் 12.00 வரையும் ; மீண்டும் மாலை - 4.00 -இரவு 08.30 வரை கோயில் திறந்திருக்கும்.
தொடர்புக்கு: 044 2263 1410.
- மோகனாமாறன்




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com