குந்திதேவி வழிபட்ட தர்மாபுரம்!

நமது முன்னோர்கள் ராமாயண, மகாபாரத காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நீதிகள், நியாயங்கள், வாழ்வு நெறி முறைகளை நாம் பின்பற்ற ஏதுவாக சில செயற்கறிய செயல்களைச் செய்துள்ளனர்.
குந்திதேவி வழிபட்ட தர்மாபுரம்!

நமது முன்னோர்கள் ராமாயண, மகாபாரத காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நீதிகள், நியாயங்கள், வாழ்வு நெறி முறைகளை நாம் பின்பற்ற ஏதுவாக சில செயற்கறிய செயல்களைச் செய்துள்ளனர். சான்றாக சில ஊர்களுக்கு புராண காலப் பெயர்கள் வைத்தும் அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு அது சம்பந்தமான திருநாமங்கள் சூட்டியும் பழைய நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும் விதமாக நமது சிந்தனையை வலுப் பெறச் செய்துள்ளார்கள்.
அவ்வகையில் ஏற்பட்டதே காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள தர்மாபுரம் என்னும் கிராமம். இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் குந்தீசுவரர். தன்னுடைய மைந்தர்களாகிய பஞ்சபாண்டவர்கள் வனவாச வாழ்க்கை மேற்கொண்ட தருணத்தில் அவர்கள் நல்லபடியாக திரும்பி நாட்டிற்கு வரவும் லட்சியத்தை அடையவும் இத்தல இறைவனை வேண்டி குந்திதேவி பூஜித்து வழிபட்டதாக கர்ணபரம்பரை வரலாறு கூறுகின்றது. அதனால் இத்தலம் குந்தீசுவரம் என சிறப்பித்து அழைக்கப்படுகின்றது. மேலும் இக்கிராமத்தைச் சுற்றி உள்ள பெயர்களும் மகாபாரதத்துடன் தொடர்பு உள்ளனவாக உள்ளன. சான்றாக இவ்வூருக்கு அருகில் உள்ள திருவாதூரில் தர்மர் வழிபட்ட தர்மேஸ்வரர் கோயிலும் சின்ன வெண்மணியில் பீமன் வழிபட்ட பீமேஸ்வரர் கோயிலும் பெரிய வெண்மணியில் அர்ச்சுனன் வழிபட்ட விஜயேஸ்வரர் கோயிலும் நாகமலையில் நகுலன் வழிபட்ட நகுலேஸ்வரர் கோயிலும் தேவனூரில் சகாதேவன் வழிபட்ட சகாதேவேஸ்வரர் கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
வயல்கள் சூழ்ந்த இயற்கைச் சூழலில் தர்மாபுரம் குந்தீஸ்வரர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் வேதநாயகி. ஒரு சிவாலயத்திற்கு தேவையான அனைத்து சந்நிதிகளும், கோஷ்ட தெய்வங்களும் அமையப் பெற்று விழாக்கோலங்கள் பூண்ட ஆலயம் இது. இவ்வாலயத்தில் காணப்படும் மரகதக்கல் தண்டாயுதபாணி சிலை மாட்சிமை மிகுந்து காண்போர் கவனத்தை ஈர்க்கின்றது. அழகு மிக்க ஞானசம்பந்தப் பெருமான் திரு உருவச்சிலையையும் தரிசிக்கலாம். மிகப்பழைமையான இவ்வாலயத்தில் 1960 - 70 -ஆம் ஆண்டுகளில் சில சிறிய பணிகள் மேற்கொண்ட தகவல்களை கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியலாம். 
மற்றபடி, பெரிய அளவில் திருப்பணிகள் நடந்தேறி நிச்சயம் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது ஆலயத்தில் கோயில் மண்டபம், கருவறை, கருவறை விமானம், கிணறு என்று எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்காமல் செடிகள், மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. சிவன் கோயில் கருவறை விமானம் தடித்த அரசமர வேர்களால் சூழப்பட்டு பழுதடைந்துள்ளது. வெகு விரைவில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ள வேண்டிய தருணத்தை ஆலயம் எதிர்நோக்கியுள்ளது. இந்த காலகட்டத்திலும் ஒரு காலபூஜை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. முக்கியமான விசேஷ நாள்கள் கொண்டாடப்படுகின்றது. பாலாலயம் நடந்தேறி பத்து வருடங்கள் ஆகிவிட்டதாக அறியப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் 11- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை கே.கே. நகரில் உள்ள அண்ணாமலையார் அறப்பணிக் குழுவினர் இங்கு உழவாரப் பணியை மேற்கொண்டு கருவறையின் மேல் ஊடுருவி வளர்ந்துள்ள செடி, மரங்களை கட்டடத்திற்கு எந்த பங்கமும் வராமல் அகற்றுகின்றனர். இந்தப்பணியில் தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேராசிரியர் ஆனந்தராஜ் தலைமையில் பங்கேற்கின்றனர். திருக்கோயில் முழுவதும் தூய்மைப் படுத்துகின்றனர்.
சிவனுக்கும், சிவனடியார்க்கும் திருத்தொண்டு செய்தால் என்னென்ன மகத்தான நன்மைகள் நடக்கும் என்பதற்கு வலுவான ஆதாரம் இருக்கின்றது. அந்த ஆதாரத்தை சிவபெருமானே நந்தி தேவருக்கு உபதேசித்துள்ளார். சைவ உப ஆகமங்களில் ஒன்று "விசுவசாதாக்கியம்' இந்த ஆகமத்தில் "சிவபுண்ணியம்' என்றொரு பகுதி உள்ளது. இதிலிருந்து செந்தமிழ் செய்யுளாக மொழி பெயர்க்கப்பட்ட 143 பாடல்களில் சிவன் கோயில் திருப்பணி செய்பவர்கள் அடைகின்ற நற்பலன்களை பட்டியலிடப் பட்டுள்ளதைக் காணலாம். இதனைக் கருத்தில் கொண்டு திருக்கோயில்களை மெழுகுதல், சுத்தப்படுத்துதல், உழவாரப்பணி மேற்கொள்ளுதல் திருவிளக்கு ஏற்றுதல், இறைவனை வாயாறப் போற்றி பாடுதல் போன்ற மென்மையான செயல்களில் ஈடுபட்டு இறையருளை எளிதாகப் பெறுவோம்! பழம் பெருமைவாய்ந்த குந்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ள உன்னதமான உழவாரப் பணியில் பங்கேற்று, ஆலய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்.
மதுராந்தகம் - பவுஞ்சூர் சாலையில் 15 கி.மீ தொலைவில் உள்ள வெளிக்காடு என்னுமிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது தர்மாபுரம். மதுராந்தகத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளது.
தொடர்புக்கு: 98840 80543 / 94439 03047.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com