திராட்சை தோட்டத்தை நமக்கு குத்தகைக்கு விட்ட கர்த்தர்!

இவ்வழகிய உலகம், நாம் காணும் மரம், செடி கொடிகள், விளை நிலங்கள், காய்கனிகளை கடவுள் படைத்து நமக்கு கொடுத்தார்.

இவ்வழகிய உலகம், நாம் காணும் மரம், செடி கொடிகள், விளை நிலங்கள், காய்கனிகளை கடவுள் படைத்து நமக்கு கொடுத்தார். இவற்றை பெற்ற நாம் நம் இருதயத்தை கர்த்தருக்கு அற்பணித்து நன்றியுடன் வாழ்தலை கர்த்தர் எதிர்பார்க்கின்றார். ஆனால் மனிதன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்ற செய்தியை இயேசு ஆண்டவர் ஓர் உவமை கதையின் மூலம் நமக்கு சொல்கின்றார்.
""வீட்டு எஜமானனாகிய ஒரு மனிதர் இருந்தார். அவர் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதைச் சுற்றிலும் வேலியடைத்து அதில் ஓர் ஆலையை நாட்டி கோபுரத்தையும் கட்டி தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு புற தேசத்துக்கும் போயிருந்தார். 
கனி காலம் சமீபித்த போது அதில் கனிகளை வாங்கிக்கொண்டு வரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினார். தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து ஒருவனை அடித்து, ஒருவனை கொலை செய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். பின்னும் அவர் முந்தினவர்களிலும் அதிகமான வேறு ஊழியக்காரரை அனுப்பினார். அவர்களையும் அப்படியே செய்தார்கள். கடைசியிலே அவர் என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினார். 
தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று இவன் சுதந்தரத்தைக் கட்டிக் கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு அவனைப் பிடித்துத் திராட்சைத் தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலை செய்தார்கள். அப்படியிருக்க, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் வரும்போது அந்த தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்தக் கொடியவனைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறு தோட்டக்காரரிடத்தில் திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு கொடுப்பான் என்றார்கள்(மத்தேயு 21:33-41)
இவ்வழகிய உலகம்தான் திராட்சைத் தோட்டம். இவ்வுலகத்தின் சொந்தக்காரர் கர்த்தர். இவ்வுலகில் வாழும் நம்மிடம் கர்த்தர் குத்தகைக்கு இவ்வுலகை கொடுத்துள்ளார். நமக்கு இவ்வுலகில் நல்நவாழ்வு, உண்ண நல்ல உணவு, ஏற்ற காலத்தில் நல்ல மழை தந்து நம்மிடத்தில் கொடுத்த இவ்வுலகின் குத்தகையை நம்மிடம் கேட்கின்றார். நாம் கடவுளுக்கு கீழ்படிந்து வேதாகமம் கூறும் நல்போதனைப்படி வாழ்தல் வேண்டும். நமது இதயத்தில் இறைவனுக்கு கொடுக்கும் இடமே நாம் திராட்சை தோட்டக்காரருக்கு கொடுக்கும் குத்தகை. ஆனால் நாம் கர்த்தருக்கு நன்றி என்னும் குத்தகை தராமல் கர்த்தர் நம்மை நல்வழிபடுத்த அனுப்பிய கடவுளின் தீர்க்கத்தரிசிகளை அடித்து கொடுமைப்படுத்தி பலரை கொன்று போட்டோம்.
கர்த்தர் தம் மகனாகிய இயேசுவை நம்மிடத்தில் அனுப்பினார். இயேசுவின் போதனைகள் நாம் கடவுளுக்கு நன்றியுள்ள வாழ்வும் கடவுளின் நல்வழியை போற்றி சக மனிதரிடம் அன்பும் பரிவுடன் வாழும் குத்தகையை கேட்கின்றார். ஆனால் கர்த்தரின் ஒரே மகனாகிய இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்று போட்டோம். சிலுவையில் பாடுபட்டு தமது பரிசுத்த ரத்தத்தை சிந்தி இயேசு நம்மை மீட்டுக்கொண்டார். அவரின் அன்பின் போதனைகள் நம்மை நல்வழிபடுத்தும். இவ்வுலகம் நமக்கு நன்மை தரும்படி திரும்பவும் கொடுக்கப்பட்டுள்ளது. நம் ஆண்டவருக்கு நம் இதயத்தை காணிக்கையாக கொடுப்போம். பக்தியும் அன்பும் மனித நேயமும் நம்மை மறுவாழ்வு என்னும் பரலோக வாழ்வுக்கு வழி நடத்தும். 
- தே. பால் பிரேம் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com