திருமண வரம் தரும் கல்யாணராமர்!

ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும், தன் மகன் பரதனுக்கு பட்டம் கட்ட வேண்டும் என்பது கைகேயி தசரதனிடம் வேண்டிப்பெற்ற வரங்களாகும்.
திருமண வரம் தரும் கல்யாணராமர்!

ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும், தன் மகன் பரதனுக்கு பட்டம் கட்ட வேண்டும் என்பது கைகேயி தசரதனிடம் வேண்டிப்பெற்ற வரங்களாகும். முதல் வரத்தின்படி, ராமன் தன் தம்பி இலக்குவன் மனைவி சீதையுடன் வனவாசம் சென்றார். ராமன், ராவணன் அழிய வேண்டும் என்னும் விதியால் மனைவியைப் பிரிகிறார். வானர சேனைகள் அனுமன், சுக்ரீவன் ஆகியோர் சேர்ந்து காடு மலை நாடெங்கும் சீதையை தேடி அலைந்தனர். அப்போது குஸஸ்தலை ஆற்றங்கரை ஓரத்தில் வானரப்படைகளுக்காக உணவு சமைத்திட மடம் அமைத்து சமைக்கும் பணி நடந்தது. அந்த மடம் அமைந்த இடம் மடத்து குப்பம் என்று இன்று அழைக்கப்படுகிறது. சீதையைத் தேடுவது குறித்து சற்றுத்தொலைவில் கவலையுடன் ராமர் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவ்வாறு ராமர் நின்ற இடம் புண்ணியம் மிக்கது. அந்த இடமே இன்று ஊராகி ராமர் கோவில் என வழங்கப்படுகிறது. 

ராமாவதாரம் நிறைவடைந்து கிருஷ்ணனாக அவதரிக்க வேண்டிய காலம் வந்தது. விசுவாமித்திரர் மற்றும் சப்தரிஷிகள் திருமாலை ராமாவதாரத்தின் முக்கியமான ராமனின் திருக்கல்யாணக் காட்சியைக் காண்பதால் குறைவிலா செல்வமும் சுகமும் சேரும்; இழந்த பொருளும் கிடைக்கும்; பிரிந்தவர் சேருவர். அத்திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்திக்க வேண்டுமென விசுவாமித்திரருடன் அத்ரி, கவுதமர், ஜமதக்னி பாரத்துவாஜர், வசிஷ்டர், காசியபர், ஆகிய முனிசிரேஷ்டர்களோடு விரும்பினர். தங்களுக்கு அந்த அருட்காட்சி கிடைக்க வழி சொல்ல அனுமனை வேண்டினர். அனுமனும் தான் இந்த அவதாரத்தில் தொண்டனாக இருப்பதால் கருடாழ்வார் மூலம் உபாயம் பெற்று செயல்பட தெரிவித்தார். அனைவரும் கருடனை வேண்டினர். கலியுகத்தில் மக்களுக்கு அனுக்ரகம் செய்யவும் ராமபிரானின் திருமணக்கோலம் காணவும் கருடன் மூலமே ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். 
அந்த இடம் ராமன் சீதையைப் பிரிந்து தேடி வந்து நின்ற இடமாகும். அந்த குஸஸ்தலை ஆற்றின் கரையில் ஒரு பெரிய யாகசாலை அமைக்கப்பட்டது. ஒரு மண்டலத்திற்கு மேலாக திருமணக்கோல ராமனின் காட்சியைக் காண யாகவேள்வி நடந்து திருமாலுக்கு வேண்டுதல் செய்யப்பட்டது. ராமனும் சீதையும் திருமணக் கோலத்தில் காட்சிதர, அருகில் லக்ஷ்மணன் துணை நிற்க, அனுமன் கைபொத்தி வணங்க, அங்கிருந்த அனைவருக்கும் காட்சி தந்தனர்.

அனைவரும் நமக்கு ஏகபத்தினி விரதனான ராமன் காட்சி தந்தவன் பல மனைவியரை உடைய தசரதனின் மகனாகும். ராமன் நல்ல உதாரணமாக வாழ்ந்துள்ளதால் அவனது அர்ச்சாவதாரமாக தாசரதி கல்யாணராமனை தரிசித்து இந்த உலகத்து மக்கள் பலன் பெறுமாறு ஒரு கோயிலாக உருவாக்க வேண்டும் என முடிவு செய்தனர். அந்தப்பொறுப்பை இத்தலத்திற்கு அருகில் பர்ணசாலையில் தவம் செய்து கொண்டிருந்த சாலிஹோத்ர மஹரிஷிகளிடம் ஒப்படைத்தனர். அவரும் சூரிய புஷ்கரணி என்ற ஒரு தீர்த்தமும் எடுத்து சூரிய வம்சத்தைச் சேர்ந்த ராமர் திருக்கோயிலுக்கு அருகில் ஸ்ரீலக்ஷ்மணர் உடனுறை சீதாதேவி சமேத தாசரதி கல்யாணராமர் திருக்கோயிலையும் விக்ரகங்களையும் பிரதிஷ்டை செய்தார்.

முன்பு ராமன் நின்ற அந்த இடம், திருமணக்கோல ராமன் காட்சி தந்த அந்த கிராமமே,பின்பு ராமன் கோவில் என்று ஆனது. ராமர் கோயில் இருந்த இடமே ஊருக்குப் பெயராக ராமன் கோவில் கிராமம் என வருவாய்த்துறை பதிவேடுகள் அனைத்திலும் பதியப்பட்டு உள்ளது. 

இக்கோவில் 7 -ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த புராதனக்கோயில். பல்வேறு காலங்களில் புதுப்பிக்கப்பட்டு மக்கள் வழிபாட்டில் இருந்துள்ளது. இங்கு உள்ள மூலவர் சிலையும் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் காலத்து சிலைகளின் வடிவை ஒத்துள்ளது. எனவே, தற்போதுள்ள இக்கோயில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் மீண்டும் செஞ்சி நாயக்கர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.

மூலவராக, ஸ்ரீ ராமர், ஸ்ரீ லஷ்மணன், சீதாபிராட்டி, அனுமன் ஆகியோர் உள்ளனர். பல சந்நிதிகளில் உள்ளது போல் இல்லாமல் இங்கே சீதை ராமனுக்கு வலது புறத்திலும் லஷ்மணன் இடது புறத்திலும் அனுமன் ராமருக்கு இடதுபுறத்தில் தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தத்துடன் இருக்கிறார். வலது புறத்தில் சீதையுடன் கல்யாணக்கோலத்தில் நின்றதால் தந்தை பெயருடன் சேர்த்து தாசரதி கல்யாணராமன் சந்நிதி என்று அழைக்கிறனர். கோயில் கட்ட இடம் தேர்ந்தெடுத்து கொடுத்த கருடன் சந்நிதிக்கு எதிரில் வித்தியாசமான இறக்கைகளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 

இக்கோயிலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் முக்கியம். ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்றும் நடைபெறும் திருமஞ்சனத்தில் கலந்து கொள்வோருக்கு திருமணம் கைகூடும். ஒவ்வொரு ஏகாதசி திதி அன்று சிறப்பு அபிஷேகமும் ஹனுமத் ஜெயந்தியும் ஸ்ரீராமநவமியும் ஸ்ரீ கருட பஞ்சமியும் முக்கிய விழாக்களாக உள்ளன. பிற கோயில்களைப்போல் ஆண்டிற்கு ஒரு முறை பங்குனி மாதம் ஸ்ரீ ராம நவமி உற்சவம் நடைபெறுகிறது. ஆனால் ஸ்ரீராமநவமி துவங்கி பத்து நாள்கள் உற்சவம் நடைபெறும். 9- ஆம்நாள் திருக்கல்யாணம் 10- ஆம் நாள் பட்டாபிஷேகத்துடன் நடை பெறுகிறது. 

திருமணத் தடை, குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு இங்கு சீதைக்கு மஞ்சள் கிழங்கு மாலை சாற்றி பிரார்த்தனை செய்து கொண்டு இன்னல்கள் தீர்ந்தபின் பிராத்தனையை நிறைவேற்றி பலன் அடைகின்றனர். சந்நிதியில் உள்ள பால ஆஞ்சநேய ஸ்வாமிக்கு செந்தூரக்காப்பு பிராத்தனை செய்து கொண்டால் வெகு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது வழக்கத்தில் உள்ளது. சகல வினைகளையும் தீர்க்கும் கருடனுக்கு பிராத்தனை செய்து கொழுக்கட்டை நிவேதனம் செய்பவர்களும் உண்டு.

தாசரதி கல்யாணராமரை தரிசிக்க, காலை 7மணி - 11.30 வரை முடியும். சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் தொடர்வண்டி பாதையில் கடம்பத்தூரை அடுத்த செஞ்சிபானம் பாக்கம் ரயில்நிலையத்தில் இறங்கி அங்கிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ள ராமர் கோவில் என்னும் ஊரில் இவ்வாலயத்தை அடையலாம். 
தொடர்புக்கு: 86376 27575.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com