பொன்மொழிகள்!

பிரம்மத்தை தியானம் செய்யுங்கள். ஒப்பிட இல்லாதவனாய், தானே தானாய், சச் சித் ஆனந்தமாய் உள்ள பரம்பொருளை தியானம் செய்யுங்கள்.
பொன்மொழிகள்!

பிரம்மத்தை தியானம் செய்யுங்கள். ஒப்பிட இல்லாதவனாய், தானே தானாய், சச் சித் ஆனந்தமாய் உள்ள பரம்பொருளை தியானம் செய்யுங்கள்.
- ஜாபால உபநிஷதம்


உனக்கு முக்தியில் விருப்பம் இருக்குமானால், புலனின்பத்தை விஷத்தைப் போல வெகு தூரத்தில் ஒதுக்கித் தள்ளிவிடு. திருப்தி, இரக்கம், பொறுமை, நேர்மை, மனஅமைதி, புலனடக்கம் ஆகியவற்றை எப்போதும் பரிவுடன் கைக்கொண்டு வாழ்ந்து வர வேண்டும்.


நன்மையை விரும்பும் நல்லவர்களின் சொல்லாலும், குருவின் உபதேசத்தாலும், தன்னுடைய சிறந்த யோசனையாலும் ஞானவழியில் செல்பவனுக்கு நற்பயன் தானே கூடிவருவது உண்மை.
- விவேகசூடாமணி


அறிவின் இலட்சியம் உலகத்தை வெல்வது அல்ல; அறிவைக் கொண்டு இறைவனைப் பணியும்போதுதான் அது நிறைவு பெறுகிறது. 


ஒருவருடைய உள்ளமும் உடைமையும் கிருஷ்ணனுக்கு அர்ப்பணமாகும்போதுதான், அறிவு பூரணமாகிறது என்பதை நன்றாக உணர வேண்டும்.
- ஸ்ரீ சைதன்யர்

ஒருவன் உயிருடன் இருக்கும்போது எல்லோராலும் போற்றப்படுகிறான். ஆனால் கூடுவிட்டு ஆவி சென்றபின்பு, அந்த உடல் பயங்கரமான தோற்றம் தருகிறது. அதைப் பார்த்து உலகம் முழுவதும் வெறுப்பினால் தன் இரண்டு கண்களையும் மூடிக்கொள்கிறது. என்னே இந்த உடலின் அவலநிலை! 
- ப்ரபோத சுதாகரம்

ஆசைகள் உள்ளவனுக்குத் தீமை இருப்பது தெரியாது; ஆசைகள் உள்ளவன் அறியாமையால் தவிப்பான்.
- யுதிஷ்டிரர் (மகாபாரதம்)

தெளிவு பெற்ற மனதினால், அசைவின்றி உடலில் விளங்கும் மெய்யான சிவபரஞ்சுடரைப் பார்த்து அர்ச்சிப்பதே ஞானிகளின் வழிபாடாகும்.
- ஒளவை குறள்

இறைவன் கிருபையால்தான் முக்தி கிடைக்கிறது. சத்தியபொருளான அவர்தான் எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கிறார்.
- குருநானக்

இந்த உலகில், மந்திரம் ஆகாத எழுத்தில்லை. (எல்லா எழுத்துக்களையும் மந்திரமாகப் பயன்படுத்த முடியும்.) மருந்தாகப் பயன்படுத்த இயலாத மூலிகைகள் இல்லை. அதுபோல, உலகில் முற்றிலும் பயனற்ற மனிதன் என்று யாரும் இல்லை. அதாவது, உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனாலும் ஏதாவது ஒரு விதத்தில் பயன் உண்டு. அது சிறியோரானாலும் பெரியோரானாலும் சரி. ஆனால், தங்கள் திறமையை உணர்ந்து தங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மனிதர்கள் மிகச் சிலரே ஆவர்.

புலமையும் ஆளுமையும் ஒருபொழுதும் சமமாகாது. அரசன் தன் நாட்டில் மட்டும்தான் மதிக்கப்படுகின்றான். ஆனால் கல்வி கற்ற ஒரு வித்வானோ எங்கும் மதிக்கப்படுகின்றான். 

எவனொருவன் தினம் தினம் காலையில் சூரியனை குனிந்து வணங்குகிறானோ (சூரிய நமஸ்காரம் செய்கிறானோ), அவன் ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும் வறுமையை அடையமாட்டான். (சூரியன் எவ்வாறு நாள் தவறாமல் சரியான நேரத்தில் உதித்து மறைகிறதோ, அதுபோல் நாம் நம் செயல்களைக் குறித்த நேரத்தில் செய்ய வேண்டும்.) கற்பனை செய்வதாலும் ஆசைப்படுவதாலும் செயல்கள் நடப்பதில்லை. முறையாக முயற்சி செய்தால்தான் செயல்கள் நிறைவுபெறும். சிங்கம் தூங்கிக்கொண்டிருந்தால் அதன் வாயில் தாமாக இரை வந்து விழாது. 
"சுபாஷிதம்' ஒரு சம்ஸ்கிருத சுலோகம்

உடலளவில் தங்களை யோகியாக பலரும் செய்துகொள்வார்கள். ஆனால் பலரும் மனதை அவ்விதம் செய்துகொள்வதில்லை. 
- கபீர்தாசர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com