இழந்த பதவியை மீட்டுத்தரும் பட்டாபிஷேக ராமர்!

ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த ஒரு விடியற்காலை பயணத்தில் வில்வாரண்யம் ஒன்று குறுக்கிட்டது.
இழந்த பதவியை மீட்டுத்தரும் பட்டாபிஷேக ராமர்!

ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த ஒரு விடியற்காலை பயணத்தில் வில்வாரண்யம் ஒன்று குறுக்கிட்டது. அருகில் நந்தியாறு ஓடிக்கொண்டிருந்தது. ஒரு பெரிய வில்வமரத்தடியில் சீதையை இருக்கச்செய்து லிங்கங்களைத் தேடவும் பூஜைக்கு வேண்டியவற்றைக் சேகரித்துக் கொண்டுவரவும் சென்றனர். சீதையை உரிய ஏற்பாடுகளை செய்து வைக்கச் சொல்லிவிட்டு ராமனும் இலக்குவணனும் அனுமனை துணைக்கு வைத்துவிட்டுச் சென்றனர். சீதை வெகுதொலைவு நடந்துவந்த களைப்பால் மரத்தடியில் அமர்ந்தவள் கண்ணயர்ந்து விட்டாள். சிறிய தூக்கத்தில் ராமன் அனைத்திலும் வெற்றிபெற்று பட்டாபிஷேக ராமராக அரசாள்வதாக கனவு கண்டாள். சட்டெனக்கண் விழித்தாள். விடியற்காலைக் கனவு நனவாக வேண்டும் என நினைத்தபடியே நேரமாகி விட்டதாகவும் நினைத்தாள். அனுமன் காவல் நிற்பதை உணர்ந்து , அனுமனை அழைத்தாள். ராமனின் பூஜைக்கு லிங்கம் ஒன்று வேண்டும் என்றாள். 
பூஜைக்கு நேரம் கடந்துவிடும் எனவும் நினைத்தாள். தன் கையினால் நந்தியாற்றில் மணல் எடுத்து லிங்கம் ஒன்று உருவாக்கி வழிபட்டாள். சீதையின் வழிபாட்டிடையே சிவபெருமான் காட்சி தந்தார். சிவனிடம் தன் கணவர் போர் செய்த போது எந்தவித பாவம் நடந்திருந்தாலும் அதனைப் போக்க வேண்டினாள். தற்போது இருக்கும் நிலமையை மாற்றி முடிசூட உதவிடக் கேட்டுக் கொண்டாள். சிவபெருமானோ இந்தக் கோலம் மறைந்து பட்டாபிஷேக கோலத்தில் முடிசூட இருப்பதைச் சொன்னார். லிங்கபூஜைக்குரிய பொருட்களுடன் வந்த ராம லட்சுமணர்கள் நடந்ததைக்கேட்டு மகிழ்ந்தனர். அதே நேரம் காசியிலிருந்து கையில் லிங்கத்துடன் வந்தார் அனுமன். 
மணல் லிங்கம் செய்ய முதன் முதலில் அந்த வில்வவனத்தில் எடுத்த பள்ளத்திலிருந்து ஊற்று நீர் அளவின்றி ஊறிக்கொண்டிருந்தது. அருகிலேயே காசியிலிருந்து அனுமன் கொண்டுவந்த சிவலிங்கத்தையும் நிறுவினர். ஊற்றுநீர் எடுத்து அனைத்து லிங்கங்களையும் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் அயோத்திக்குப் பயணப்பட ஆயத்தமாயினர்.
அதேசமயம், ராமனின் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து நாடாண்டு கொண்டிருந்த பரதன், சக்கரவர்த்தித் திருமகன் வருகை தாமதப்பட, சிதையில் இறங்க தயாராகிக் கொண்டிருந்தான். அனுமனிடம் தாம் வந்து கொண்டிருப்பதாக தகவல் சொல்லி அக்னிப்பிரவேசத்தைத் தடுத்து நிறுத்துமாறு அனுப்பினார் ஸ்ரீராமர். சிவபெருமான் மகிழ்ந்து ராமனிடம் "இதற்கு அடுத்து நீங்கள் அயோத்திக்கு. சென்று பட்டபிஷேக ராமராகப் போகின்றீர்கள். இங்கிருக்கும் மக்கள் யாரும் அங்குவந்து காண இயலாது. அனைத்து மக்களும் அக்காட்சியைக் காண்பதற்கு முன்பாக இங்கேயே பட்டாபிஷேக ராமரின் திருக்கோலத்தை காட்டியருளுவீர்கள்' என்றார். 
சிவபெருமான் சொல்ல, மறுக்காமல் எந்தவிதமான அலங்காரப் பரிவாரங்களும் இல்லாமல் ராமன் நடுவிலும், வலப்புறம் இலக்குவன் வில்லோடும் இடப்புறம் கையில் மலரோடு சீதையும் பட்டாபிஷேகக் கோலத்தில் மூவரும் சிம்மாசனத்தில் சிம்மபீடத்தில் ஒரு முகூர்த்தகாலம் காட்சி தந்தனர். அனைவரும் வணங்கி மகிழ்ந்தனர். இத்தலம் திருஊட்டத்தூர் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் ஆகும். சீதை மணல் லிங்கம் செய்யத்தோண்டிய குழியிலிருந்து பிரம்மநீர் ஊற்றாகச் சுரந்து வந்ததை எடுத்து லிங்காபிஷேகம் செய்ததால் ஊற்றத்தூர், ஊட்டத்தூராக மருவி வழங்குகிறது. இந்த கோயிலுக்கு துவாரவாயில் மட்டும் உண்டு. 
வெளியில் ஸ்ரீகருடாழ்வார் பெருமாளைப் பார்த்துக்கொண்டும், அவருக்குப் பின்புறம் ஸ்ரீஅனுமார் ராமன் வந்து கொண்டிருக்கின்ற செய்தியை பரதனுக்குச் சொல்ல பறக்கத்துவங்கும் பாவனையில் வாயிலை நோக்கிக் கொண்டு இருக்கின்றார். விசாலமான மண்டபத்தில் ராமானுஜர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார, தும்பிக்கை ஆழ்வாரும் அருளுகிறார். கோயில் கருவறை மேல் இருதள நாகர விமானம் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி ஆகியோர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருளுகின்றனர். பட்டாபிஷேகக் கோலத்தை உறுதி செய்திட மூவரும் சிம்மபீடத்தில் நின்று அருளுகின்றனர். மூவரின் திருமுகங்களில் வருவோருக்கு அனுக்ரகம் செய்யும் திருமுக தரிசனம் காண முடியும்.
ஊட்டத்தூர் கோதண்டராமர் திருக்கோயில் எனப்படும் அற்புதமான கலையம்சத்துடன் கூடிய பட்டாபிஷேக ராமர் கோயில் குலோத்துங்க சோழன் பட்டமேற்றதன் நினைவாக அமைக்கப்பட்ட கோயில் எனவும் அதனால் அரசபதவி வேண்டும் என்போர் வந்து வழிபட்டால் நிச்சயம் பதவி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள், பெüர்ணமி மற்றும் புனர்பூச நாள்களில் தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால் பலன் நிச்சயம். 
அனைத்து விஷ்ணுபதி புண்யகால நாள்களுடன் தமிழ்வருடப்பிறப்பு, ஆடிமாதப்பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், மஹாளயபட்ச நாள்கள் ஐப்பசி மாதப்பிறப்பு , கார்த்திகை தீபம், அனுமத்ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய நாள்களில் தரிசனம் செய்வது நல்லது எனப்படுகிறது. 
இழந்த பதவி, பொருள் கிடைக்கவும் பிரிந்தவர்கள் சேரவும் தொழில் துவங்கும் முன்பும் மூலவருக்கு மாலை சார்த்தி பால் பழம் நிவேதனம் செய்வது பழக்கத்தில் உள்ளது. அமாவாசையில் பித்ருக்களுக்காக ராமேஸ்வரத்தில் சென்று செய்ய வேண்டிய பரிகாரங்களை ஆற்றங்கரையில் செய்துவிட்டு பட்டாபிஷேக ராமரை தரிசனம் செய்வது பாவங்கள் ஏதேனும் இருந்தால் விலகி குடும்ப நலன் உண்டாகும். 
ராமபிரான் துஷ்டர்களை அழித்தும் நல்லவர்களைக் காத்தும் அருளுவதற்காகவே மனித உருவில் பூரண அவதாரம் எடுத்தார். அதனால் அவருக்கு பாவம், தோஷம் ஏற்பட்டது என்றாலும் இறுதியாக அனைத்தும் ஊட்டத்தூரில் அவருக்கு முடிவுக்கு வந்தன. பட்டாபிஷேக ராமர் இருக்கும் இவ்வூர் எல்லையை சனிபகவான் நெருங்க மாட்டான். எவ்வகை சனிதோஷம் இருந்தாலும் அவர்களின் நட்சத்திர நாள்களில் வந்து இங்கு பட்டாபிஷேக ராமரை தரிசிக்க வேண்டும். நல்லெண்ணெய் தீபம் கோயிலுக்கு வெளியே ஏற்றிவிட்டுச் செல்லவேண்டும். அப்போது சனியின் தாக்கம் குறைந்து போகும் என்பது ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரமாகும். 
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 45 கி.மீ. தொலைவில் பாடலூர் வழியாக ஊட்டத்தூர் அடையலாம்.
தொடர்புக்கு: 93853 62278/ 94431 82278.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com