மயில் மலையில் மணக்கோலம்!

மயில் மலையில் மணக்கோலம்!

கயிலைமலையில் முருகப்பெருமான் தந்தை அருளால் கந்தகிரி அமைத்து அருளாட்சி செய்து கொண்டிருந்த சமயம்..பிரம்மனும், தேவர்களும் முருக வழிபாடு செய்ய வந்த போது வாசலில் நின்ற மயிலிடம்

கயிலைமலையில் முருகப்பெருமான் தந்தை அருளால் கந்தகிரி அமைத்து அருளாட்சி செய்து கொண்டிருந்த சமயம்..பிரம்மனும், தேவர்களும் முருக வழிபாடு செய்ய வந்த போது வாசலில் நின்ற மயிலிடம் முருகப் பெருமானுக்கு ஊர்தியாகும் பேற்றிற்காக பதுமன், சிங்கன், தாரகன் ஆகிய மூவரும் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள் எனக் கூறினர். இதனைக்கேட்ட மயில் இளகிய மனத்துடன் பெருமானை தியானித்து அவர்களுக்கு அருள்பொழியுமாறு கேட்டது. முருகப் பெருமானும் அவர்களைக் கணங்களாக்கித் தன் அருகில் வைத்துக்கொண்டார். 
மயில் செய்த நன்மையைத் தவறாகப் புரிந்துகொண்ட மூவரும் மயிலின் மூலம் தேவர்களைப் பழிவாங்கத் திட்ட மிட்டனர். பிறிதொரு நாள் திருமாலும், பிரம்மனும் தங்களின் அன்னம் மற்றும் கருட வாகனங்களுடன் கயிலைக்கு வந்தனர். அப்போது இவர்கள் மூவரும் மயிலிடம் மயிலை விட ஆற்றலில் தாங்களே பெரியவர்கள் என்றும் எங்களைப் போல் வேகமாய்ப் பறக்கும் சக்தி மயிலுக்கு இல்லை என்றும் கருடனும், அன்னமும் உன்னைக் கேலி பேசுகின்றன எனத்தூண்டி விட்டனர். மயிலும் அறியாமையால் கோபம் கொண்டு கருடனையும், அன்னத்தையும் விழுங்கி விட்டது.
கயிலை திரிசனம் முடிந்து திரும்பிய பிரம்மனும், திருமாலும் தங்களின் வாகனங்களைக் காணாது திகைத்தனர். சற்று நேரத்தில் நடந்ததை ஞானத்தால் உணர்ந்து மயிலின் செய்கை பற்றி முருகப் பெருமானிடம் முறையிட்டனர். 
முருகப்பெருமானும் மயிலை அழைத்து கண்டித்து கருடனையும் அன்னத்தையும் மீண்டும் வெளியே விடச் சொன்னார். மயில் பயந்து நடுங்கி அவைகளை வெளியே விட்டு விட்டது. பிரமனும், திருமாலும் முருகப்பெருமானிடம் விடைபெற்றுச் சென்றனர்.
முருகப் பெருமான், அடியவர்களுக்குச் செய்த இடையூறுகளுக்காக மயிலை மலையாகும்படி சபித்தார். பக்தியில் தவத்தில் மேலும் உறுதியாக இருக்க வேண்டித் தன்னை இவ்வாறு சபித்ததாக மயில் மனதில் கொண்டு கண்ணீர் சிந்தியது. தாங்கள் என் பிழையைப் பொறுத்து அருளிட வேண்டும் எனவும் பிரார்த்தித்தது. மனம் இரங்கிய முருகப்பெருமான் மயிலை நோக்கி "மயிலே, திருப்புத்தூருக்கு அருகில் உள்ள அரச வனத்திற்குச் சென்று தவமியற்றுவாயாக. உரிய காலத்தில் யாமே வந்து உம்மை ஆட்கொள்வோம்' என்று அருளினார்.
காலம் அறிவான் கருணை புரிவான் என்ற வாக்கிற்கிணங்க சூரசம்ஹாரம் நிறைவு பெற்றவுடன் கயிலையை நோக்கி வடபால் தலையும், தென்பால் தோகையையும் கொண்ட மயில் மலைக்கு முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலித்தார். சாபம் நீங்கிய மயில் தாங்கள் அடியவர்களுக்காக இக்குன்றில் நிரந்தரமாய்த் தங்கி அருள்பாலிக்கப் பிரார்த்தனை செய்தது. 
அதுமுதல் ஆறுமுகப் பரம்பொருளும் வள்ளி தெய்வானையுடன் தனித்தனி மயிலில் அமர்ந்து குன்றின் மீது அருட்கோலமாய் வேண்டுவோருக்கு வேண்டுவதே ஈந்து அருள்பாலித்து வருகின்றார்.
மயில்மலை, மயூரநகரம் அரசவனம், கண்ணபுரம், குன்றக்குடி எனப் பல பெயர்களைக் கொண்டு இத்தலம் விளங்குகின்றது. திருவண்ணாமலை ஆதீன கர்த்தர்களால் சிறப்புற நிர்வாகம் செய்யப் பெற்று வருகின்றது. மயில் தோகையின் அடியில் தோகையடி விநாயகர் அருள்கிறார். மலைமேல் ஏறும்போது கார்த்திகைப் பிள்ளையார் அருள்தருகின்றார். 149 படிகளைக் கடந்து மேலே சென்றால் இடும்பன் சந்நிதி, வல்லப விநாயகர் சந்நிதிகள் உள்ளன. 
மலைக்கோயிலில் நுழையும்போது வீரபாகுத் தேவர், நால்வர், சுற்றுப் பிரகாரத்தில் ஸ்ரீ சொர்ண விநாயகர், தட்சிணாமூர்த்தி, குழந்தை வடிவேலர், சுமித்ர சண்டீசர், மணிவாசகர், சிவகாமி அம்மை உடனாய நடராஜப் பெருமான், பைரவர், நவக்ரகங்களின் சந்நிதியைக் கடந்து ஆறுமுகப் பரம்பொருளின் அருட்சந்நிதியில் நிற்கின்றோம். தீராத பிளவை நோயைத் தீர்த்தருளியதற்காக மாமன்னர் மருது பாண்டியர் திருப்பணி செய்த ஆலயம் இது. மருதாபுரித் திருக்குளமும் அமைத்து வழிபட்டார்கள்.
முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் பன்னிருகரங்களுடன் தனி மயிலின் மீது அருளாட்சி செய்கின்றார். வள்ளியம்மையும், தெய்வானை நாச்சியாரும் தனித்தனி மயிலில் உள்ளனர். ஆறாவது திருமுகம் பின்புறம் இருப்பதால் பெரிய கண்ணாடியைப் பின்புறம் வைத்து அர்ச்சகர்கள் தீபாராதனை காட்டி அத்திருமுக தரிசனம் தருகின்றனர்.
அருகில் விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் சந்நிதி. அதனைத் தொடர்ந்து ஆறுமுகப் பெருமானின் உற்சவர்.
ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் தைப்பூசம், பங்குனி உத்திரத் திருவிழாக்கள் வெகு சிறப்பாகும். குன்று தோராடலின் முந்தையதாகிய குன்றக்குடி அருணகிரிப் பெருமானால் பாடப்பெற்றது. திருணத்தடை நீக்கம், மக்கட்பேறு, பிள்ளை எழுதி வைத்தல் ஆகிய பிரார்த்தனைகள் எம்பெருமானால் உடனடியாக நிறைவேற அருளப்பெறுகின்றது. 
இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 21 ஆம் தேதி தொடங்குகிறது. ஐந்தாம் நாள் (25.3.2018) - திருக்கல்யாண உற்சவம். ஒன்பதாம்நாள் (29.3.2018 ) - பங்குனி உத்திர நன்னாள். 30.3.2018 - தீர்த்தவாரி.
காரைக்குடியிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலும் பிள்ளையார் பட்டியிலிருந்து 2 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது குன்றக்குடி தலம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com