வாழ்வாதார வழிகள்

உலகைப் படைத்த இறைவன் உலகில் உருவாக்கிய உயிரினங்களுக்கு உரிய வாழ்வாதாரங்களை வகைவகையாய் தொகை தொகையாய் தோன்றிட செய்தான்.

உலகைப் படைத்த இறைவன் உலகில் உருவாக்கிய உயிரினங்களுக்கு உரிய வாழ்வாதாரங்களை வகைவகையாய் தொகை தொகையாய் தோன்றிட செய்தான். தோன்றிய வாழ்வாதாரங்களை ஊன்றி உழைத்து பிறரிடம் கையேந்தாமல் பிழைத்து வாழ நிலைத்து நிம்மதியாய் வாழ, அல்லாஹ்தான் அனைவருக்கும் வாழ்வாதாரங்களை வழங்குபவன் என்ற 51-58 ஆவது எழில்மறை வசனம் உலகிலுள்ள அனைத்தையும் மனிதனின் நலனுக்காகவே இறைவன் படைத்து அவற்றை துய்ப்பதற்குரிய தகுதியையும் ஆற்றலையும் அளித்துள்ளதை அறிவிக்கிறது. ஆற்றலைக் கொண்டு வாழ்வாதாரங்களைத் தேடிபெற வேண்டும். தேடுதல் உழைப்பையும் முயற்சியையும் உள்ளடக்கியது. வானம் பூமியில் உள்ளவற்றை அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தி கொடுத்துள்ளான் என்ற 45-13 ஆவது வசனம் வானத்தையும் பூமியையும் கட்டுப்பாட்டில் இயங்கவைக்கும் இறைவனின் வாரி வழங்கும் வலக்கை வற்றாது. இரவிலும் பகலிலும் அருள் மழையைப் பொழிந்து கொண்டேயிருப்பதை இயம்புகிறது.
கருணையும் மேன்மையும் நிறைந்த இறைவன் அனைத்து படைப்பினத்திற்கும் அனைத்து வாழ்வாதாரங்களை வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளதைப் போற்றற்குரிய குர்ஆனின் 11-6 ஆவது வசனம் கூறுகிறது. உணவு அளிக்க அல்லாஹ் பொறுப்பு ஏற்காத எந்த உயிரினமும் உலகில் இல்லை. அவை வாழும் இடத்தையும் இறந்து அடங்கும் இடத்தையும் அறிந்தவன் அல்லாஹ். சிறிய சீண்டப்படாத உயிரினத்தையும் அல்லாஹ் விட்டு விடுவதில்லை. கருவறை கரு முதல் பருவத்தைக் கடந்த பழுத்த கிழம் வரை அனைவருக்கும் அனைத்திற்கும் அல்லாஹ் நிர்ணயித்த வாழ்வாதாரத்தை யாரும் குறைக்க கூட்ட முடியாது. இதை மனிதன் உணர்ந்தால் உணர்ச்சி வயப்பட்டு பதறி உதறும் உள்ள உளைச்சலுக்கு உள்ளாக நேராது என்று மஙானி என்னும் நூலில் குறிப்பிடப் படுகிறது. உலகில் உயிரினங்கள் நிலத்திலும் நீரிலும் வானிலும் வாழ்கின்றன. அவை அனைத்திற்கும் உரிய வாழ்வாதாரங்களை வகைப்படுத்தி வழங்குகிறான் வள்ளன்மை மிக்க அல்லாஹ். 
வாழ்வாதாரங்கள் அல்லாஹ்வின் அருள்கொடையே. நலம், வளம், கல்வி, செல்வம் குன்றாது நன்றாற்றும் நற்குணம், வாழ்க்கை துணை, தூய பண்புடைய நேயமான குழந்தைகள் அனைத்தும் அல்லாஹ் தரும் வாழ்வாதாரங்களே. 
இதற்கு மேலும் கிடைக்கும் கண்ணியமும் சிறப்புகளும் இறைவனின் நிறப்பமான கருணையின் பேராதாரங்கள். மன்னிப்பவனும் மகா கருணை உடையவனுமான அல்லாஹ் அளிக்கும் வாழ்வாதாரங்கள் நாம் எண்ணி கணக்கிட முடியாத ஏராளமானவை என்று உரைக்கிறது உத்தம குர்ஆனின் 16-18 ஆவது வசனம்.
மனிதர்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதாரங்களில் வகைவகையான ஏற்ற தாழ்வுகளும் மாற்றங்களும் இறைவனின் நாட்டப்படி நடப்பவை என்று நவில்கிறது நற்குர்ஆனின் 16-71 ஆவது வசனம். அல்லாஹ் உங்களில் சிலரைவிட சிலரைச் செல்வத்தில் மிகைக்க வைத்து இருக்கிறான். இந்த ஏற்ற தாழ்வுகள் எல்லா வேலைகளும் ஏற்றபடி நடக்க மாற்றமாய் இருக்க வேண்டியது இயல்பு என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 43-32 ஆவது வசனம். ஒவ்வொரு மனிதனும் அவனுக்குரிய வாழ்வாதாரங்களைத் தேடுவது அவனுடைய கடமை. வாழ்வாதாரங்களைத் தேடி முயற்சிப்பது அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடப்பதின் அடையாளம். இம்முயற்சிகளில் இறைவன் இட்ட கட்டளைகளைக் கவனத்தில் பதித்து தடம் பிறழாது உடன்பாட்டோடு உழைப்பது. இறைவன் அருளால் வெற்றியை ப் பெற்றிட உதவும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சுற்றி நற்றோழர்கள் அமர்ந்திருந்தனர். வாகைமிகு வனப்பும் தோற்றப் பொலிவும் ஆற்றலும் ஏற்ற ஆளுமையும் உடைய இளைஞர் ஒருவர் வந்தார். அந்த இளைஞர் இறை வழியில் பணி புரிந்தால் புண்ணியம் பெறுவார் என்று பெருமானார் (ஸல்) அவர்களின் பிரிய தோழர்கள் உரிய முறையில் உரையாடினர். அப்பொழுதுது உத்தம நபி (ஸல்) அவர்கள் யார் அவருடைய பெற்றோர்களுக்காக உழைக்கிறாரோ, யார் அவரின் குடும்பத்திற்காக உழைக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் பயணிப்பவர். பிறரிடம் கையேந்தாமல் உழைப்பவரும் அல்லாஹ்வின் பாதையில் உள்ளவரே என்று உரைத்ததை அறிவிப்பவர்- அபூஹுரைரா (ரலி) நூல்- நஸஈ. 
வீட்டிலிருந்து வாழ்வாதாரம் தேடி அலுவலகத்திற்கோ, வணிக வளாகத்திற்கோ, தொழிற்சாலைகளுக்கோ, பிற தொழில் அகங்களுக்கோ சென்று பணிபுரிபவர் அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுபவரே. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆடு மேய்த்தார்கள்; வணிகம் செய்தார்கள்; வியாபாரம் செய்தார்கள்; தொழில் புரிந்தார்கள். உத்தம நபி (ஸல்) அவர்களும் தோழர்களை ஆக்க வழியில் வாழ்வாதாரம் தேட ஊக்கம் ஊட்டினார்கள். உலகில் உள்ள உயினரினங்களுக்காக உரிய வாழ்வாதாரம் சிறு முயற்சியிலும் கிடைக்கலாம்; பெரும் உழைப்பிலும் உருவாகலாம்; உடனே உருவாகலாம்; தாமதமாகவும் பயன்தரலாம். தளராது முயல்வது அல்லாஹ்வின் அருளோடு வாழ்வாதாரம் பெறும் வழி.
அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் அனுமதிப்பட்ட நல்லவைகளையே உண்ணுங்கள்; நீங்கள் நம்பும் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்ற 5-88 ஆவது வசனத்தில் அனுமதிக்கப்பட்டது என்பது குர்ஆன் கூறும் ஆகுமானதை உண்டு ஆகாததைத் தவிர்ப்பது நலமான வாழ்விற்கு ஆதாரம் என்பதை எடுத்துரைக்கிறது. அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்பது வாழ்வாதாரத்தை நேரிய வழியில் நெறியோடு ஈட்ட வேண்டும் என்பதை இயம்புகிறது. அல்லாஹ் அஞ்சி நடப்பவருக்கு வாழ்வாதாரம் பெற வழி காட்டுவான்; எதிர்பாராது எண்ணியதை ஏற்படுத்துவான். உண்டபின் நன்றி நவில நமக்கு இறைவன் கட்டளை இடுவதை இயம்புகிறது 2-172 ஆவது வசனம். 
பெற்றோருக்கு உற்ற நன்றி செலுத்துவது வாழ்வாதாரத்தை அதிகரிக்க செய்யும் என்ற செம்மறை குர்ஆனின் 14-7 ஆவது வசனத்தில் நன்றி செலுத்துவது என்பது நன்றியோடு இறைவனை வணங்குவது. அவ்வாறு தூய உள்ளத்தோடு வணங்குவோருக்கு உணவிலும் பொருளிலும் நெருக்கடி இல்லாது இறைவன் வழங்குவான் என்ற வள்ளல் நபி (ஸல்) அவர்களின் நல்லுரையை நவில்கிறார் நற்றோழர் அபூஹுரைரா (ரலி) நூல்- திர்மிதீ, இப்னு மாஜா. 
அல்லாஹ் உங்களுக்கு பூமியை மெல்லியதாக ஆக்கியுள்ளான். அதன் பல கோணங்களிலும் நீங்கள் நடந்து செல்லுங்கள். அவன் உங்களுக்கு அளித்துள்ள உணவுகளைப் புசித்து கொள்ளுங்கள் என்ற 57-15 ஆவது வசனப்படி திரவமாக இல்லாமலும் பாறாங்கல்லைப் போல இரும்பைப் போன்று இறுகி இருக்காமலும் பூமியை மென்மையுடையதாக படைத்து அதில் இருப்பிடங்கள் கட்டி திருப்தியாக வாழவும் உழவு தொழில் செய்து தானியம் பரவி பரந்து வணிகம் புரிந்து பொருளீட்டி வாழ்வாதாரங்களைத் தேடவும் இறைவன் வழி வகுத்து கொடுத்து இருக்கிறான். 
வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் ஆவல் உள்ளவர்கள் உறவினர்களோடு உறவாடி உதவுவது வாழ்வாதாரத்தைப் பெருக்கி மகிழ்ச்சியை நிலைக்க வைக்கும். தானதர்மங்களும் வாழ்வாதாரத்தைப் பெருக்கும்; நிலைக்க வைக்கும்; நிம்மதியைக் கொடுக்கும். நெறியோடு முறையோடு முயன்று வாழ்வாதாரம் தேடி வெற்றி பெற்றதில் பெருமகிழ்வுற்று திருப்தியுடன் இறைவனைப் புகழ்ந்து நிறை வாழ்வு வாழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com