சுகம் தரும் சுகவனேஸ்வரர்!

பிரம்மதேவன் ஒருமுறை படைப்பின் ரகசியத்தை சுகமுனிவரிடம் கூற, அவர் அதனை சரஸ்வதியிடம் எடுத்துரைத்தார்.
சுகம் தரும் சுகவனேஸ்வரர்!

பிரம்மதேவன் ஒருமுறை படைப்பின் ரகசியத்தை சுகமுனிவரிடம் கூற, அவர் அதனை சரஸ்வதியிடம் எடுத்துரைத்தார். சினங்கொண்ட நான்முகன் சுகமுனிவரைக் கிளியாக பிறந்திட சாபம் கொடுத்தார். வருந்திய சுகமுனிவர் பூவுலகம் வந்து, கிளிகள் கூட்டமாக வாழ்ந்திருந்த சுகவனத்தை அடைந்தார். அங்கே, புற்றின் அடியில் வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியை நெல் மணிகளால் பிற கிளிகளோடு பூசித்து வந்தார். அப்போது வேடன் ஒருவன் கிளிகளைத் தாக்கிட கிளிகள் யாவும் அங்கிருந்த ஒரு புற்றில் ஒளிந்து கொண்டன.
 வேடன் மிகுந்த கோபம் கொண்டு புற்றை மண் வெட்டியால் வெட்டினான். அப்போது புற்றுக்குள்ளிருந்த சிவிலிங்கத் திருமேனியை காத்திட கிளி வடிவில் இருந்த சுகமுனிவர், தன் இறக்கைகளால் இறைவனை மறைத்து காத்திட முயற்சிக்கையில் வேடனால் வெட்டப்பட்டார். அப்போது சிவலிங்கத்திலிருந்து குருதி கொப்பளிக்க, அதனைத் கண்ட வேடன் மயக்கமுற்றான். அப்போது ஈசன், அங்கே தோன்றி சுகமுனிவரின் சாபத்தையும் விலக்கியதோடு வேடனுக்கும் திருவருள் செய்தார். அதுமுதல் இங்கே எழுந்தருளியுள்ள ஈசன், சுகவன ஈசுவரர் எனும் சிறப்புப் பெயர் கொண்டார். மேலும் கிளிவனமுடையார், கிளிவனநாதர் என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். மூலவரின் திருமேனியில் வேடனால் வெட்டுண்ட காயத்தை அபிஷேகத்தின் போது தரிசனம் செய்யலாம்.
 சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுகவனேஸ்வரர் திருக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரம், ஒரு பிரகாரத்துடன் அமைந்துள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்து மூவர், சப்தமாதர், நால்வர், இரட்டை விநாயகர், ஆலமரச்செல்வர் சந்நிதிகள் உள்ளன. பஞ்சபூதலிங்கங்கள், கங்காளர், காசிவிசுவநாதர், ஜேஷ்டாதேவி ஆகிய சுற்றுபிரகார சந்நிதிகள், அறுபடை வீடு சிற்பங்கள் கொண்ட முருகப்பெருமான் சந்நிதி, பிரம்மா, சண்டிகேசுவரர், துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. சுயம்புலிங்கமாக சுகவனேசுவரர் எழுந்தருளியுள்ளார். நீண்டு உயர்ந்த பாணம் மூலவர் திருமேனி ஒரு பக்கம் சாய்ந்திருப்பதோடு, வெண்மையான வெட்டுத் தழும்பும் காணப்படுகிறது. கிளிமுகம் கொண்ட சுகமுனிவரும் சிலைவடிவில் காட்சி தருகிறார்.
 மரகதவல்லி, பச்சைநாயகி என்று அழைக்கப்படும் அன்னை, சொர்ணாம்பிகை எனும் திருநாமத்துடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சிறப்பு நாள்களில் அம்மனுக்கு தங்கக்கவசம் சார்த்தப்படுகிறது. இத்திருக்கோயிலுக்குள் அமைந்துள்ள அமண்டுக தீர்த்தம் தவளைகள் வாழாத திருக்குளமாகத் திகழ்கிறது. இதுதவிர பாபநாச தீர்த்தம், மனுசரணதீர்த்தம், மானத தீர்த்தத்தோடு மணிமுத்தாறு புனித தீர்த்தங்களாக அமைந்துள்ளன. தலமரம் பாதரி நந்தவனத்தில் உள்ளது.
 இத்திருக்கோயிலின் தல விநாயகர் விகடச்சக்கர விநாயகர் எனும் திருநாமம் கொண்டுள்ளார். வீரபத்திரர் தக்கனின் யாகத்தை அழித்தபோது அவரை எதிர்கொண்ட திருமால் தனது சக்கரத்தை எறிய, வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் ஒரு தலை, அந்த சக்கரத்தைக் கவ்விக்கொண்டது. அதனைக் கண்ட விநாயகர் கூத்தாடியபோது, அதுகண்டு சிரம் நகைக்க, சக்கரமும் அதன் வாயிலிருந்து விழுந்தது. அதனை எடுத்துக்கொண்டு களிப்பில் ஆடியவரே விகடச்சக்கர விநாயகர் ஆவார்.
 நவகிரங்கள் தனிசந்நிதியாக அமைந்ததோடு செவ்வாய் கேது இடம் மாறியுள்ளன. இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். இங்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பதினைந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோப்பரகேசரி என்ற பட்டம் கொண்ட சோழமன்னன் காலத்தில் கல்வெட்டு வெட்டப்பட்டது. பிற்கால சோழர்கள் மன்னர்கள் தாங்கள் முடிசூட்டிக் கொள்ளும் பொழுது பரகேசரி என்றும் அடுத்து வருபவர் ராஜகேசரி என்றும் பட்டம் தாங்கினார். அவ்வாறு வந்த சோழ மன்னர்களில் பரகேசரியும், ராஜகேசரியும் இங்கு ஆட்சி புரிந்துள்ளதும் இங்குள்ள பரகேசரியின் மூன்று கல்வெட்டுக்களும் ராஜகேசரியின் இரண்டு கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன. பரகேசரி முதல் ராஜகேசரி வரை சுமார் 200 ஆண்டுகளாக கிளிவண்ணமுடைய பெருமான் என்றே மூலவர் அழைக்கப்பட்டதும், அன்னதானம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும்.
 இக்கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா 20-5-2018 - அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி முக்கிய திருவிழாவான தேரோட்டம் 28-5-2018 - அன்று நடைபெறுகிறது.
 வழித்தடம்: சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப்பேருந்துகளும், ஆட்டோ வசதிகளும் உள்ளன.
 - பொ.ஜெயச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com