நரம்பு நோய் அகற்றும் திருவாலீஸ்வரர்!

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், நெரும்பூர் என்ற கிராமத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்தரும் திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
நரம்பு நோய் அகற்றும் திருவாலீஸ்வரர்!

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், நெரும்பூர் என்ற கிராமத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்தரும் திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தற்போது, இத்திருக்கோயிலின் நிலை மிகவும் மோசமான சூழலில் உள்ளது. மேலும் குடமுழுக்குக் கண்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்பது தெரியவருகிறது. மதில் சுவர்கள் முழுவதுமாக இருந்த அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டது. 3 நிலை ராஜகோபுரம் எந்தவித ஆதாரமும் இன்றி நின்றுக்கொண்டிருப்பதால் விழுந்துவிடும் நிலையில் காணப்படுகிறது.
 ராஜராஜ சோழ மன்னன், சம்புவராயர்கள், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. ராஜராஜ சோழனுடைய கல்வெட்டில் இக்கோயிலுக்கு விளக்கு எரிப்பதற்கும், வழிப்பாட்டிற்கும் நிலம் தானம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இவ்வூர், "நெரும்பூர் என்றே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கம்பண்ணவுடையார் (கி.பி. 1367) காலத்தில் கோயிலுக்கு நிலம் அளிக்கப்பட்டது.
 கிழக்கு நோக்கிய வாயில் கொண்ட திருக்கோயில். பலிபீடம், நந்தி மன்டபம் வெளியே அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்குள் நுழைந்தவுடன் மகா மண்டபம், அந்தராளம் மற்றும் கருவறை என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய லிங்கத்திருமேனி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைப் போக்கி நல்வாழ்வு அளிக்கிறார் மகேஸ்வரன்!
 மகாமண்டபத்தில் இருந்து அந்தராளத்திற்கு செல்லும் நுழைவாயிலின் வலது பக்கம் விநாயகரும், இடது பக்கம் பாலமுருகனும் அமைந்து அருளுகின்றனர். மகா மண்டபத்தில் வலப்புறம் கிழக்கு நோக்கி ஒரு மேடையில் பெரிய உருவில் மகா கணபதியும், அருகில் மூன்று நாகர்களும் அருளுகின்றனர். மகா மண்டபத்தின் இடப்புறம் கிழக்கு நோக்கி இரண்டு நாகர்களும் முருகப் பெருமானும் அருள் கூட்டுகின்றனர். அதற்கு எதிரில் காலபைரவர் அமைந்து அருளுகின்றார்.
 மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டு அம்பிகை திரிபுரசுந்தரி பக்தர்களின் குறைகளைப்போக்கி மேற்கைகளில் அங்குசம், பாசம் தாங்கியும் கீழ் கைகளில் அபயவரத முத்திரைத் தாங்கியும் நல்லருள் புரிகின்றார். மகா மண்டபத்தின் மேற்கூரையை சூரியன், சந்திரன் இவர்களை பாம்பு பிடிப்பது போன்ற சூரிய சந்திர கிரகணம் சார்ந்து புடைப்புச் சிற்பமும், யானை, மச்சம் (மீன்) போன்ற புடைப்பு சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புற சுற்றில் நர்த்தன கணபதி, மகா விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை அருளுகின்றனர்.
 நரம்புத் தளர்ச்சி நோய், காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் இத்தல ஈசனை ஆராதிக்க நோய் குணமாகும். இவ்வீசனை தரிசித்து அபிஷேகம் செய்வித்து அபிஷேக விபூதியை வாங்கி வந்து தண்ணீரில் இட்டு பருகி வர, இந்நோய்கள் குணமாகும்.
 இக்கோயிலில் ஒருகால பூஜை மட்டுமே நடந்து வருகிறது. நடைத் திறக்கும் நேரம், காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சிவாச்சாரியார் வீடு அருகில் உள்ளது.
 இவ்வாலயத்தை புதுப்பிக்கும் கடமை இந்து சமய அற நிலையத்துறைக்கும் சிவனேய செல்வர்களுக்கும் பக்தக்கோடிகளுக்கும் உள்ளது.
 தொடர்புக்கு : 88700 30252 / 96773 24135.
 - க. கிருஷ்ணகுமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com