ஆரூர் ஆழித்தேர் அழகு!

முக்தி தரும் தலங்களுள் ஒன்று திருவாரூர். மோட்ச தலங்களில் குறிப்பாக, பார்த்தால் (காண) முக்தி தரும் தலம் சிதம்பரம்.
ஆரூர் ஆழித்தேர் அழகு!

முக்தி தரும் தலங்களுள் ஒன்று திருவாரூர். மோட்ச தலங்களில் குறிப்பாக, பார்த்தால் (காண) முக்தி தரும் தலம் சிதம்பரம். இறக்க முக்தி தருவது காசி. பிறக்க முக்தி தருவது திருவாரூர். இதைத்தான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் "உதித்தவர் உதித்திடா ஆரூர்" என்றார். பல புராண வரலாற்றுப் பின்னணிகளையும், வரலாற்றுப் பெருமைகளையும், மிக அதிகமான தேவாரப்பாடல்கள் பெற்ற தலம் என்ற சிறப்பினையும் தன்னகத்தே கொண்டு சைவ சமயத்திற்கே தலைமைப் பீடமாய் விளங்கும் திருவாரூர் திருத்தலத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்புவாய்ந்தது.
 கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் ரதோற்சவம் எனப்படும் தேர்த்திருவிழா ஒரு முக்கிய அங்கமாகும். தேரினை "நகரும் கோயில்' என ஆகமங்கள் கூறுகின்றன. சிவபெருமானின் அட்ட வீரச்செயல்களில் திரிபுரத்தை எரித்த வரலாறும் ஒன்றாகும். "திரிபுராந்தகர்' என்ற பெயரும் சிவனுக்கு உண்டு. இந்த வரலாற்றை தேவார, திருவாசக, திருப்புகழ் ஆசிரியர்கள் தங்கள் பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார்கள். ஆலய உற்சவங்களில் ஒரு நாள் இந்நிகழ்வைக் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவதே "தேரோட்டம்' எனவும் கூறுவர். தேரோட்ட நாள் அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதியைப் பொருத்தது. திருவாரூரில் ஆழித் தேர்விழா பங்குனியில் நடைபெறும் பிரம்மோத்சவத்திற்கு பிறகு அதன் அங்கமாக ஒரு குறிப்பிட்ட நன்னாளில் (சித்திரை / வைகாசி) ஏகதின விழாவாக நடைபெற்று சுவாமி யதாஸ்தானம் திரும்பிய பிறகு உற்சவம் நிறைவு பெறுகின்றது.
 இத்திருக்கோயிலின் தேரினை "ஆழித்தேர்' என நாவுக்கரசரும் "தேராரும் நெடுவீதி திருவாரூர்' என சேக்கிழார் பெருமானும் போற்றிப்பாடுகின்றனர். "ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆருரே! என அப்பரின் தேவாரப்பாடல் சிறப்பிக்கின்றது. "திருவாரூர்த்தேர்' அழகு என்பது அருள் வாக்கியமாய் வழங்கப்பெறுகிறது. திருவாரூரின் தேரோட்டத் திருவிழாவினை திருஞான சம்பந்தரும், நாவுக்கரசரும் இவ்வூரில் வந்து தங்கி முன்னின்று அன்று போல இன்றும் நடத்துவதாகவும், அருள்மிகு தியாகராஜசுவாமி தனது பரிவாரங்களுடன் எழுந்தருளி பவனி வரும் அழகினைக் காண இந்திரன் முதலான விண்ணவரும் வருவதாக ஐதீகம்.
 மராத்தி மற்றும் தெலுங்கு இலக்கியங்கள் பெருமையாகப் பேசும் சிறப்புடையது ஆரூர் திருவீதியும், அழகுத்தேர்விழாவும். தஞ்சை சரசுவதி மகாலில் உள்ள ஓர் ஆவணத்தில் கி.பி.1776- ஆம் ஆண்டு தஞ்சை அரசர் அமரசிம்மன் திருவாரூர் தேரைப் பார்க்க நாகப்பட்டினத்திலிருந்து வருகை புரிந்த ஆங்கிலேயர் டுரியன் துரைக்கு உணவு கொடுப்பதற்காக செய்த ஏற்பாடுகளை விவரிக்கின்றது. மற்றொரு ஆவணத்தில் 1797- ஆம் ஆண்டு 4840 பேர்கள் திருவாரூத் தேரிழுக்க வரவேண்டும் என்ற மன்னனது ஆணை காணப்பெறுகின்றது.
 ராஜேந்திர சோழன் காலத்தில் அமைக்கப்பட்ட தேர்வடிவிலான குத்துவிளக்கை திருவாரூர் கோயிலில் காணலாம். மேலும் இங்கு காணப்படும் விக்கிரம சோழன் கால கல்வெட்டில் "கல்' தேரினை தன் மைந்தன் மேல் ஏற்றி பசுவிற்கு நீதி வழங்கிய மனுநீதிச்சோழன் வரலாற்றினை தெரிவிக்கின்றது.
 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதர் இத்தல இறைவி, இறைவன் மீது கீர்த்தனங்கள் இயற்றியதோடு மட்டுமில்லாமல் சில வருடங்கள் இவ்வூரில் நடந்து வந்த தேர் விழாவினை கண்டு களித்துள்ளார்கள். திருவீழிமிழலை வீழிநாதர் கோயிலில் காணப்படும் மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி.1263) காலக் கல்வெட்டில் அக்கோயிலுக்கு தானம் அளித்த செய்தியைக் கூறுகையில் அதில் ஒப்பமிட்டவர்களின் (கையெழுத்திட்ட) பெயர்களைக் குறிப்பிடும்போது "ஆழித்தேர் வித்தகபட்டன்' என்பவர் குறிக்கப்படுகிறார். இதன் மூலம் திருவாரூரின் ஆழித்தேரின் பெயரையே தனது பெயராகக் கொண்டுள்ளது அக்கால வழக்கமாக உள்ளது என்று அறியப்படுகின்றது.
 மிக அதிகமான எடையுடன் (சுமார் 300 டன்) சற்றேக்குறைய 96 அடி உயரத்தில் மூங்கில், காகிதம், துணிகள் போன்று பல பொருட்களைக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த பிரம்மாண்ட தேரை உருவாக்கும் வேலையினை ஆறு மாதத்திற்கு முன்பே கோயில் மண்டபத்தில் ஆரம்பிப்பார்கள்.
 இவ்வாண்டு மே 27, காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் ஆழித்தேர் வடம் பிடிக்கப்படுகின்றது. திருவாரூர் தேர்காண திரளாகச் செல்வோம்! தியாகராஜாவின் "ராஜபவனியை' தரிசித்து மகிழ்வோம்.
 தொடர்புக்கு: 04366 - 242343.
 - எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com