இன்னல் நீக்கும் ஈதல்!

ஈதல் இல்லாதோரின் இல்லாமை என்னும் இன்னலை நீக்கும். ஈவோருக்கு இல்லாமை மட்டும் அல்ல எல்லா இல்லாமையும் அணுகாது காக்கும்
இன்னல் நீக்கும் ஈதல்!

ஈதல் இல்லாதோரின் இல்லாமை என்னும் இன்னலை நீக்கும். ஈவோருக்கு இல்லாமை மட்டும் அல்ல எல்லா இல்லாமையும் அணுகாது காக்கும். இத்தகைய ஈதலையே இஸ்லாம் நான்காம் கடமையாக- ஐகாத் என்று கட்டளை இடுகிறது.

ஜகாத்தை ஆண்டிற்கு ஒருமுறை கணக்கிட்டு கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் வாழும் நாட்டில் உள்ள அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டாகவோ நிதி ஆண்டாகவோ வணிகம் துவக்கப்பட்ட மாதத்திலிருந்து முடியும் மாத ஆண்டாகவோ, விவசாயத்தில் நிலவரி நிர்ணயிக்கும் ஆண்டாகவோ இஸ்லாமியர்களின் ஹிஜ்ரி ஆண்டாகவோ இருக்கலாம். பெரும்பாலான இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கும் ரமலான் மாதத்தில் நிறைவேற்றப்படும் கடமைகளுக்கு நிறைந்த நன்மைகள் பன்மடங்கு பயன்கள் தரப்படுவதால் அதனை அடையும் ஆவலில் ரமலாம் மாதத்தில் ஜகாத் கொடுப்பதை வழக்கமாக்கி கடைபிடிக்கின்றனர்.

நீங்கள் தொழுகையை நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுங்கள். பணிவுடையோருடன் சேர்ந்து பணிந்திடுங்கள். அல்லது ருகூவு செய்பவர்களுடன் சேர்ந்து ருகூவு செய்யுங்கள் என்று 2-43 ஆவது குர்ஆனின் வசனம் குனிந்தும் பணிந்தும் பணிவு உடையோருடன் கூட்டாக சேர்ந்து தொழவும் ஜகாத் கொடுக்கவும் கட்டளை இடுகிறது. தொழுகை உடலினால் புரியும் வணக்கம். ஜகாத் பொருளினால் புரியும் வணக்கம். ஏழை வரி ஜகாத்தைச் செல்வந்தர்கள் சரியாக கணக்கிட்டு குறைக்காது கொடுத்தால் அவர்களின் செல்வம் தூய்மை அடையும்; செல்வம் வளர்ந்து பெருகும். அதனால்தான் ஏழை வரிக்கு ஜகாத் என்ற பெயர் ஏற்பட்டது. ஜகாத் என்னும் சொல்லுக்கு வளர்தல் என்று பொருள். ஈவதால் பொருள் பெருகுவதை அருள்மறை குர்ஆனின் 2-276 ஆவது வசனமும் உறுதி செய்கிறது. ஜகாத் என்ற சொல்லுக்குத் தூய்மை என்ற பொருளும் உண்டு. ஏழை வரியை ஏழைகளுக்கு ஈந்தபின் மீதமுள்ள பொருள்களை மாசகற்றி தூய்மைப் படுத்துகிறது ஜகாத்.

தேவையானவர்களைத் தேடிச் சென்று ஜகாத் கொடுக்க வேண்டும். தேடும் தேவையானவர்களைக் காண சில அடையாளங்கள். மார்க்க கல்வி கற்பிப்பவர்கள், கற்பவர்கள், பொருளீட்டாது ஏக இறை கொள்கையை எடுத்துரைக்கும் அறப்பணி புரியும் கள பணியாளர்கள், எந்நிலையிலும் வாட்டும் வறுமையை வெளிகாட்டாது பிறரிடம் ஈவதை விலக்கி கலங்காது வாழ்பவர்கள். ஜகாத்தின் பிரிவுகள் ஐந்து: 1. கால்நடைகளுக்குரிய ஜகாத் 2. தங்கம் வெள்ளி மீது ஜகாத் 3. விற்பனை பொருளின் மீது ஜகாத் 4. விவசாய விளை பொருள்களின் மீது ஜகாத் 5. புதைபொருள், கனிம பொருளின் மீது ஜகாத்.
 ஜகாத்தை ஒவ்வொரு ஆண்டும் அகம் மகிழ அளிக்க வேண்டும். கால்நடைகளுக்கான ஜகாத்தில் கிழடு அல்லது சொறி பிடித்த அல்லது நோயுற்ற அல்லது கீழ்த்தரமான கால்நடைகளைக் கொடுக்கக் கூடாது. நடுத்தர பிராணியைக் கொடுக்க வேண்டும். அல்லாஹ் ஜகாத்தில் உங்களின் உயர்தர பொருளை விரும்பவில்லை. எனினும் தீழ்த்தரமான பொருளைக் கொடுக்கவும் ஏவவில்லை என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரையை அறிவிப்பவர் அப்துல்லாஹிப்னு மு ஆவியா (ரலி) நூல்- அபூதாவூத்.

நமக்குத் தொழுகையை நிலைநிறுத்தும் படியும் ஜகாத்தை அளித்து வரும்படியும் கட்டளை இடப்பட்டுள்ளது. எந்த மனிதன் ஜகாத்தை அளிக்க வில்லையோ அவனின் தொழுகையும் ஏற்கபடாது என்ற எம்பெருமானார் நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்கிறார் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்- தப்ரான், தர்கீப். செல்வந்தர்கள் ஜகாத்தைச் சரியாக கணக்கிட்டு கொடுத்தால் எந்த ஏழையும் வறுமையில் வாடமாட்டான். எச்சமுதாயம் ஜகாத் கொடுக்காது தடுத்து கொள்கிறதோ அல்லாஹ் அச்சமுதாயத்தைப் பஞ்சத்தில் பரிதவிக்க விடுவான் என்று விழுமிய நபி (ஸல்) அவர்கள் விளம்பியதைப் புகல்கிறார் புரைதா (ரலி) நூல் -தப்ரானீ. காட்டிலோ, கடலிலோ ஏற்படும் பொருள் இழப்பு ஜகாத் கொடுக்காததின் விளைவு என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததைக் கூறுகிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- தப்ரானீ. இந்த அறிவிப்பில் காடு என்பது விவசாய விளைபொருள்களின் மீது விதிக்கப்பட்ட ஜகாத்தைக் கொடுக்காததால் விவசாயத்தில் ஏற்படும் இழப்பையும்; கடல் என்பது கடலில் கப்பலில் சென்று வாங்கி விற்பதின் மூலம் பெற்ற லாபத்தின் மீது விதிக்கப்படும் ஜகாத்தைக் கொடுக்காததால் கடலில் புயல், பூகம்பம் ஏற்பட்டு கப்பல் கவிழ்ந்து ஏற்படும் இழப்பையும் குறிக்கிறது.

எப்பொருளின் மீது ஜகாத்தின் பொருள் சேர்ந்து விடுகிறதோ அது அப்பொருளை நாசமாக்கி விடும் என்று நேச நபி (ஸல்) அவர்கள் பாசமாய் பகர்ந்ததை அறிவிக்கிறார் அன்னை ஆயிஷா (ரலி) நூல்- மிஸ்காத். கொடுக்க வேண்டிய ஜகாத்தைக் கொடுக்காமல் இருக்கும் பொருளுடன் சேர்த்து வைத்தால் இருக்கும் பொருளை இழக்க நேரிடும் என்று நபிகளின் நன்மொழிக்கு இப்னு தைமியா (ரஹ்) அவர்களின் முன்தகா என்ற நூலிலும் ஹமீது (ரஹ்) அவர்களின் ஹதீதுவின் வரலாறு என்ற நூலிலும் விளக்கி உள்ளார்கள். ஜகாத் கொடுக்க கடமையுள்ளவன்(52 1/2 தோலா வெள்ளியோ அதன் விலை மதிப்புள்ள பொருளையோ தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்) ஏழையென்று ஜகாத் பெற்றால் அவனுடைய எல்லா பொருளும் அழியும் என்று அறிஞர் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். தனது தேவைக்கு உரிய பொருளைப் பெற்றிருப்பவர் பிறரிடம் யாசித்தால் மறுமையில் முகத்தில் சதை அற்றவனாக வருவான் என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பை இயம்புகிறார் இப்னு மஸ்வூது (ரலி) நூல்- திர்மிதீ, நஸஈ. பொருளைப் பெருக்க மனிதர்களிடம் யாசிப்பவன் நெருப்பு துண்டையே யாசிக்கிறான் என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை எடுத்துரைக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம்.

ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட ஆண்டை நிர்ணயித்துக் கொண்டு ஆண்டின் இறுதியில் இருப்பை இருப்பதுபோல் சரியாக கணக்கிட்டு அதற்குரிய ஜகாத்தைப் பெறும் தகுதியுடையோருக்கு மட்டுமே கொடுத்து இல்லாமை இல்லாத இனிய உலகை உருவாக்குவோம். கனிவான அல்லாஹ்வின் கருணையால் கவினுற புவியில் பூரிப்புடன் வாழ்வோம்.

 - மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com